
வௌவால்கள் பல்வேறு விதங்களில் நமக்கு நண்பனாகவும் உதவி புரிகின்றன. அதற்கான சமுதாய அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. அவற்றின் சிறப்பியல்புகளை இப்பதிவில் காண்போம்.
"துரிஞ்சி பறக்கற நேரத்துல கைக் குழந்தையோட வெளியில் நிக்காதே" என்று இளம் தாய்மார்களைப் பார்த்து மூதாட்டிகள் இன்றும் கிராமப்புறங்களில் எச்சரிப்பதைக் காணலாம். மிருகம், பறவை என்ற இரண்டு கூறுகளையும் ஒருங்கே கொண்ட இவற்றை அறிவியலோடு பார்க்கும்போது சுவையான செய்திகள் வெளிப்படுகின்றன.
உலகில் கிட்டத்தட்ட 1100 வகை வௌவ்வால்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 70% வௌவ்வால்கள் பூச்சி உண்ணிகள். மற்றவை பழங்களையும் அவற்றின் சாற்றையும் உண்கின்றன. மூன்று வகை மட்டுமே ரத்தம் உறிஞ்சுபவை. சிலவை மீன்களையும் பிடித்து உண்ணும்.
இது உச்ச ஸ்தாயியில் ஒலி எழுப்பி, இரையின் மீது மோதி மீண்டும் வரும் எதிரொலியை கிரகிப்பதன் மூலம் அவை இருக்கும் இடத்தை உணர்ந்து கொள்கின்றன. இதனால் அவற்றின் கேட்கும் திறன் அபரி மிதமாக அமைந்துள்ளது .குறிப்பாக பூச்சிகள் மற்றும் மீனுண்ணும் வகைகளில் முன்னோக்கி அமைந்திருக்கும் புனல் வடிவ பெரிய காதுகள் எதிரொலியை கிரகிக்க பெரிதும் உதவுகின்றன.
உடலின் எடை கால்களில் தாங்காமல் இருக்கவே அவை குகைகளிலும், மரக் கிளைகளிலும் கால்களால் பற்றி கொண்டு தலைகீழாகத் தொங்குகின்றன. அவ்வாறு தொங்கும்போது அதற்கென்று தனியாக உடல் சக்தியை செலவழிக்க வேண்டியது இல்லை. புவி ஈர்ப்பு விசை அதன் உடல் எடையை கீழ்நோக்கி இழுப்பதால் கால்களில் உடல் பாரம் தாக்காது.
இவ்வாறு தலைகீழாக தொங்குவது தங்களை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பையும் அளிக்கிறது.
விலங்குகளைப்போல வௌவ்வால்கள் வயிற்றுக்குள் கருவளர்த்து குட்டிகளை ஈனுகின்றன. ஒரு குட்டிதான் ஈனும். பல வவ்வால்கள் ஒரே இடத்தில் சேர்ந்திருந்த போதும் தாய் வௌவ்வால்கள் தன் குட்டியை குறிப்பாக அடையாளம் கண்டு கொள்ளும். தாயிடம் பால் வற்றிவிட்டால் பிற வௌவ்வால்கள்பாலூட்டி வளர்த்துவிடும்.
வௌவ்வால் கடியால் உண்டாகும் ரேபீஸ் என்ற கொடிய நோயால் பெரும்பான்மையினர் பாதிக்கப்பட்டிருக் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வௌவ்வால்களை கைகளால் தொடுவதையும், வீட்டுக்குள் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
நமக்கு அநேகம் வௌவ்வால்கள் பல வகையிலும் உதவுகின்றன. ஒரு சிறு பழுப்பு நிற வௌவால் ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்களை பிடித்து வருகின்றன. மெக்சிகன் தளர்வாள் வௌவ்வால்கள் அமெரிக்காவின் பேரக்கன் குகையில் கிட்டதட்ட 20 மில்லியன்கள் சேர்ந்து வாழ்கின்றன.
இவை ஒரு இரவில் உண்ணும் பூச்சிகளின் எடை 250 டன்கள். பயிருக்கு ஊறுவிளைவிக்கும் பூச்சிகளை உண்டு விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் தேவை வெகுவாக குறைகிறது. பயிர்களையும் பாதுகாக்கிறது.
பழங்களின் விதைகளையும், பூவின் மகரந்தத்தையும் எடுத்துச் சென்று வேறு இடங்களில் இடுவதன் மூலம் புதிய மரங்கள் வளரவும், மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகின்றன. ரத்தம் உறிஞ்சும் வவ்வால்களின் உமிழ்நீரில் இருந்து இருதய வியாதிகளுக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
வௌவ்வால்கள் டோங்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் புனிதமான வகையாகவும், உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆன்மாவின் வடிவமாகவும் கருதப்படுகின்றன. மேலும் இவற்றை பேய், மரணம் மற்றும் வியாதியின் குறியீடாகவும் கருதுகின்றனர். பூர்வீக அமெரிக்க பழங்குடியினருக்கு வௌவால்கள் தந்திரமான ஆவிகள். ஆனால் சீன கலாச்சாரத்தில் இவை நீண்ட ஆயுளுக்கும், மகிழ்ச்சிக்குமானவை. நம்பிக்கைகள் எவ்வாறு இருப்பினும் வௌவ்வால்களின் வாழ்க்கை சுவையானது என்பதில் சந்தேகம் இல்லை.