
வெள்ளை நைல், நீல நைல் என்ற இரு நதிகள் இணைந்த நைல் நதி, ஆப்பிரிக்க நாடுகளை வளப்படுத்துகிறது. வெள்ளை நைல், மத்திய ஆப்பிரிக்காவில் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகளில் உற்பத்தியாகிறது. நீல மற்றும் குறுகிய நைல் எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள டானா ஏரியில் உருவாகி கார்த்தூம் நோக்கிப் பாய்கிறது.
சூடான் தலைநகர் கார்த்தூம் அருகே இரு நைல் நதிகளும் இணைகின்றன. அங்கிருந்து எகிப்து வழியாக பாயும் நைல், கடலில் கலக்கிறது.1920ம் ஆண்டு அப்போது காலனி ஆட்சி நடத்திய பிரிட்டிஷார் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, நைல் நதி தண்ணீரின் பெரும்பகுதியை எகிப்து நாடு பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், நைல் நதிக்கு பெருமளவு தண்ணீரை வழங்கும் அதன் உப நதியான நீல நைல் நதியின் குறுக்கே அணை கட்ட எத்தியோப்பியா 2009ல் முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்கு எகிப்து எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச நிதி அமைப்புகளிடமும், பிற நாடுகளிடமும் பிரசாரம் செய்து நிதி கிடைக்காமல் செய்தது.
ஆனால், உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் எத்தியோப்பியா, உள்நாட்டு மக்களிடம் திரட்டிய நிதி, வெளிநாட்டில் வசிக்கும் எத்தியோப்பிய மக்களிடம் திரட்டிய நிதி, வெளிநாடுகளில் கிடைத்த குறைந்த நிதியை கொண்டு எத்தியோப்பியா அரசு, 2011ல் அணையை கட்டத் தொடங்கியது. கடந்த 14 ஆண்டுகளாக நடந்த பணிகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன.
இப்படிப் பெரும்பாடு பட்டு கட்டிய அணைக்கு, ‘மகா எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை’ என்ற பொருளில், 'கிராண்ட் எத்தியோப்பியன் ரெனைசன்ஸ் டேம்' - 'ஜெர்டு' Grand Ethiopian Renaissance Dam - GERD) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அணையின் முதல் கட்டம், 2020ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கட்டம் நிறைவேற்றப்பட்டது. திட்டம் முழுமை அடைந்த நிலையில், ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நீர் மின் அணையை எத்தியோப்பியா நேற்று செப்டம்பர் 9ல் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தது.
இது மில்லியன் கணக்கானவர்களுக்கு ஆற்றலை வழங்கும் ஒரு திட்டமாகும். 120 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான எத்தியோப்பியா, நைல் நதியின் துணை நதியின் மீது 5 பில்லியன் டாலர் மதிப்பிலான கிராண்ட் எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணையை (GERD) அதன் பொருளாதார லட்சியங்களின் மையமாகக் கருதுகிறது.
கிராண்ட் எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணை (ஜெர்டு) என்று அழைக்கப்படும் இது வடக்கு எத்தியோப்பியா மலைப்பகுதிகளில் உள்ள நீல நைல் துணை நதியில் உள்ளது. சூடான் எல்லையிலிருந்து தெற்கே 19 மைல்கள் (30 கி.மீ.) தொலைவில் உள்ள ஜெர்டு, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர் மின்சார அணை திட்டமாகும். இது ஒரு மைலுக்கும் அதிகமான நீளமும் 145 மீட்டர் உயரமும் கொண்டது. இது உலகளவில் ஏழாவது பெரியதாகவும் ஆப்பிரிக்காவில் மிகப் பெரியதாகவும் இருக்கும்.
அணை கட்டுவதற்கான மொத்தச் செலவு, இந்திய மதிப்பில் 44 ஆயிரம் கோடி ரூபாய். அணை நீர்த்தேக்கப் பரப்பு, 1875 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 74 பில்லியன் கன மீட்டர் (2620 டிஎம்சி) தண்ணீரை சேகரிக்க முடியும். மேட்டூர் அணை 120 அடி நிரம்பும் பட்சத்தில் அதில் தேங்கியிருக்கும் தண்ணீர் 93.47 டி.எம்.சி. என்பதை ஒப்பிட்டால், எத்தியோப்பியா கட்டியது எத்தனை பெரிய அணை என்பது புரியும். இது, உலகின் பெரிய அணைகளில் ஒன்று. இதன் மூலம், 5.15 ஜிகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த அணையானது, பாசனம், குடிநீர் திட்டம், மின் உற்பத்தி என பன்னோக்கு திட்டத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, கென்யா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும், கடல் கடந்து அரேபிய நாடுகளுக்கும் வழங்க எத்தியோப்பியா திட்டமிட்டுள்ளது.
இந்த அணையால், தங்கள் நாட்டுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என்று புகார் கூறி வரும் எகிப்து, பிரச்னையை சமாளிக்க தயாராகி வருகிறது. திட்டம் தொடங்கிய காலத்தில் அணை கட்டினால் குண்டு வீசுவோம் என்று கூறிய அந்த நாடு, இப்போது நிலைமை கைமீறிப் போன நிலையில், 'பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்' என்று கூறி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த விவகாரத்திலும் தலையிட்டு எகிப்துக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால், அதை எத்தியோப்பியா புறக்கணித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
எத்தியோப்பியாவைப் பொறுத்தவரை, இந்த அணை பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய தலைமைத்துவத்திற்கான ஒரு பாதையாகும். அவர்கள் ஆண்டுதோறும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது எத்தியோப்பியாவின் பொருளாதார சிரமங்களைத் தவிர்க்க உதவும். கூடுதலாக, இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாய நீர்ப்பாசன திறனை மேம்படுத்துதல் மற்றும் வெள்ளத்தைத் தணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது.