
இன்றைய விதை நாளைய மரம். அது மட்டுமல்லாமல், விதைகளால் நமக்கு உணவு, தூய்மையான காற்று, வளமான மண், ஆரோக்கியமான வாழ்வு என பலவகைகளில் விதை அது தரும் செடி, மரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறோம்.
செடி நடுவதற்கு முன் நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். வெண்டை, கத்தரி, பாகல், தக்காளி, அவரை என எல்லா காய்கள், பூக்களின் விதைகளை நாமே தோட்டத்திலிருந்து பெறமுடியும். காய்கள் காய்க்கும்போது தரமான நன்கு தேறிய விதைகளை காயை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடவேண்டும்.
தரமான நன்கு தேறிய விதைகளை இரண்டு நாட்கள் மாலை வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த விதைகளுடன் வசம்புத்தூள், கரித்தூள், நாட்டு மாட்டின் காய்ந்த சாணம் பொடியைச் சேர்த்து, பானையில் அல்லது சாக்குப் பையில் வைக்கவும்.
விதைகளை எல்லா காலங்களிலும் பெற முடியுமென்றாலும் மாசி பங்குனியில் விதை நேர்த்தி செய்ததை ஆடி மாதத்தில் விதைப்பு செய்யலாம். விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க விதைப்பதற்கு முன்பாக விதை நேர்த்தி அவசியமாகிறது. இவ்வாறு விதை நேர்த்தி செய்யும் விதைகள் பலவகையான நோய்த் தாக்குதலிலிருந்து காக்கப்படும்.
இவை முளைப்புத் திறன், விளைச்சல் ஆகியவற்றை அதிகரித்து நல்ல மகசூலைத் தரும். சந்தைகளில் கிடைக்கும் விதைகள் கலராக வண்ணப் பொடிகள், கெமிக்கல் கலந்ததாக இருக்கும்.
நாட்டு மாட்டின் சாணம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் உள்ளிட்ட இயற்கை வளர்ச்சி ஊட்டிகளைக் கொண்டு எளிதாக விதை நேர்த்தி செய்யலாம். ஒரு சிறு கப்பில் இரண்டு மிலி அமிர்த கரைசல் அல்லது பஞ்சகவ்யத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் 20மிலி நீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதில் விதைகளை ஊற வைக்கவும். காய்கறி விதைகளை இவ்வாறு விதை நேர்த்தி செய்தாலே போதுமானது.
கடினமான பாகல் விதைகளை ஐந்தாறு மணி நேரமும், லேசான விதைகளை ஒரு மணிநேரம் ஊறவிட்டு பின் அவற்றை ஒரு காகிதத்தில் அரைமணி நேரம் உலர்த்தி மண்ணில் விதைத்து விடலாம்.இவ்வாறு செய்வதால் தேவையான அனைத்து நுண்ணூட்டச் சத்துகள் கிடைத்து செடி முளைக்க ஆரம்பித்துவிடும்.
விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் பலன்கள்:
சேமிக்கும் விதைகள் நோய்த் தாக்குதல், பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
மண், காற்று, நீர், விதை உள்ளிட்டவற்றால் பரவும் பூஞ்சாண நோய்களிலிருந்து காக்கப்படும்.
செடியின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். செடியின் வளர்ச்சியும், விளைச்சலும் அதிகரிக்கும்.
பலவகையான விதை நேர்த்திக்கும், நமது நாட்டு மாட்டின் சாணத்தில் தயாரான பஞ்சகவ்யமும், அமிர்த கரைசலுமே போதுமானது. விதைகள் நன்கு பாதுகாக்கப்படும்.
விதைகளை விதைக்க அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை உள்ளிட்ட நாட்களை தேர்வு செய்யலாம். நல்ல விதை கொண்டு விதைத்து நல்ல பலன்களை பெறலாம்.