
இயற்கை நமக்குக் கொடுத்துள்ள வரங்களில் மிக முக்கியமானது மரங்கள். நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனாக திருப்பித் தரும் மரங்கள் பூமியின் பரிசுகள் என்றே சொல்லலாம். உலகின் பழைமையான சில மரங்கள் வரலாற்றில் எஞ்சி இருக்கும் அதிசயங்கள். இவை பல யுகங்களாக பூமியில் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகப் பழைமையான ஒன்பது மரங்களைப் பற்றியும் அவை எங்கே இருக்கின்றன என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மெதுசெலா (Methuselah): இது பிரிஸ்டில்கோன் பைன் மரமாகும். தோராயமாக 4,850 ஆண்டுகள் பழைமையானது. இது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் வெள்ளை மலைகளில் குறிப்பாக இனியோ தேசிய வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.
2. பழைய டிஜிகோ (Old Tjikko): சுமார் 9,500 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படும் இந்த பழங்கால மரம் ஸ்வீடனின் ஃபுலுஃப்ஜாலெட்டில் காணப்படுகின்றன. இது உலகின் மிகப் பழைமையான குளோனல் மரங்களில் ஒன்றாகும். ஒரு குளோனல் மரம் (அல்லது மரங்களின் குளோனல் காலனி) என்பது மரபணு ரீதியாக ஒரே மாதிரியான மரங்களின் குழுவைக் குறிக்கிறது. அவை ஒற்றை பெற்றோர் தாவரத்திலிருந்து தோன்றியவை.
3. அலெர்ஸ் (Alerce): 5,400 ஆண்டுகளுக்கும் மேலான இந்த மரம் பூமியில் வாழும் மிகப் பழைமையான மரங்களில் ஒன்றாகும். இதை சிலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆண்டிஸ் மலைகளில் உள்ள அலெர்ஸ் கோஸ்டெரோ தேசியப் பூங்காவில் காணலாம்.
4. அபர்குவின் சைப்ரஸ் மரம் (Cypress of Abarkuh): ஈரானின் யாஸ்த் மாகாணத்தின் அபர்குவில் உள்ள இந்த பழங்கால சைப்ரஸ் மரம் 4,000 ஆண்டுகள் பழைமையானது என்று நம்பப்படுகிறது. ஈரானில் ஒரு தேசிய பாரம்பரிய தளமாகக் கருதப்படுகிறது. மேலும் இது பார்வையாளர்களை அதிகமாக ஈர்க்கிறது.
5. ஜோமோன் சுகி (Jomon Sugi): ஜப்பானில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான யாகுஷிமா தீவில் இந்த மரம் அமைந்துள்ளது. இது 2,170 முதல் 7,200 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகிறது. இது பழங்கால கிரிப்டோமேரியா மரம் ஆகும். மலை ஏறுபவர்களையும் மற்றும் இயற்கை ஆர்வலர்களையும் இந்த மரம் ஈர்க்கிறது.
6. வௌவ்ஸின் ஆலிவ் மரம் (Olive Tree of Vouves): இது 2,000 முதல் 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கிரேக்கத் தீவான கிரீட்டில் உள்ள அனோ வௌவ்ஸ் கிராமத்தில் உள்ளது. இது தொடர்ந்து பல ஆலிவ் மரங்களை உற்பத்தி செய்கிறது.
7. பாண்டோ (Pando): நடுங்கும் ஜெயண்ட் என்று அழைக்கப்படும் பாண்டோ மரம் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை. உட்டாவின் ஃபிஷ்லேக் தேசிய வனப்பகுதியில் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இவை உள்ளன.
8. ஜெனரல் ஷெர்மன் (The General Sherman): இது ஒரு ராட்சத சீக்வோயா மரம் ஆகும். இது பூமியில் எஞ்சி இருக்கும் மிகப் பெரிய மரமாகும். இந்த மரத்தின் மதிப்பிடப்பட்ட வயது சுமார் 2,200 ஆண்டுகள். கலிபோர்னியாவில் உள்ள சீக்வோயா தேசிய பூங்காவிற்குள் இந்த அதிசயமான மரத்தை காணலாம்
9. ப்ரோமிதியஸ் (Prometheus): நெவாடாவில் உள்ள இந்த பிரிஸ்டில்கோன் பைன் மரம் சுமார் 4,900 ஆண்டுகள் பழைமையானது. ஆனால், 1964 ல் வெட்டப்பட்டது. இப்போது உயிருடன் இல்லாவிட்டாலும், அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.