

இயற்கையான முறையில் பூச்சிகளைக் கட்டுப் படுத்தவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூண்டுச் செடிகள் (Alliums) பெரும்பங்கு வகிக்கின்றன. பசுமைச் சழலுக்கு பயன் தரும் ஐந்து முக்கியமான பூண்டுச்செடி வகைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
சாதாரண வெள்ளைப் பூண்டு - Common Garlic- Allium sativum:
இது சமையலுக்கு மட்டும் இன்றி தோட்டக்கலையில் மிகச்சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லியாகச் செயல்படுகிறது. இதனுடைய பயன் என்று பார்த்தால் இதன் காரமான மணம் அஸ்வினி பூச்சிகள் (Aphids ) மற்றும் வண்டுகளை அண்ட விடாமல் தடுக்கும் ஆற்றல் படைத்தது. மற்ற செடிகளுக்கு இடையே இதைப் பயிரிடுவது (Companion planting) மண்ணின் தரத்தை உயர்த்தும்.
மலைப் பூண்டு அல்லது ஒரு பல் பூண்டு - Elephant garlic -Allium ampeloprasum:
இது சாதாரண பூண்டைவிட அளவில் பெரியது மற்றும் சுவை சற்று மென்மையானது.
பயன்: இதன் ஆழமான வேர் அமைப்பு மண்ணைத் தளர்த்தி காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. இது தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளைக் கவரும் பூக்களை கொண்டிருப்பதால் மகரந்தச் சேர்க்கைக்குச் உதவுகிறது.
சைவ்ஸ் - Chives-Allium Schoenoprasum:
மெல்லிய புற்கள் போன்ற அமைப்பைக்கொண்ட இவை மிக அழகான ஊதா நிறப் பூக்களைப் பூக்கும்.
பயன்: இவை பல்லாண்டுத் தாவரங்கள் (perennial). ரோஜா செடிகளுக்கு அருகில் பயிரிட்டால் பூஞ்சைத் தொற்று (Black spot) ஏற்படாமல் பாதுகாக்கும். இதன் பூக்கள் பயனுள்ள பூச்சிகளைத் தோட்டத்திற்கு ஈர்க்கும்.
காட்டுப்பூண்டு - Wild Garlic/Ramsons-Allium Ursinum:
இவை காடுகள் மற்றும் நிழல் பாங்கான இடங்களில் தானாக வளரக்கூடியவை.
பயன்: இவை காடு வளர்ப்பு மற்றும் நிழல் தோட்டங்களுக்கு ஏற்றவை. தரைப்பகுதியை முழுமையாக மூடி வளருவதால் (Ground cover) களைகள் வளர்வதைத் தடுக்கின்றன மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கின்றன.
சீன பூண்டு அல்லது பூண்டுத்தாள் - Society Garlic-Tulbaghia violacea:
இது அலங்காரச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது .இதன் இலைகள் பூண்டின் மணம் கொண்டவை.
பயன்: இதன் கடும் மணம் பாம்பு, எலி மற்றும் சில தேவையற்ற பூச்சிகளைத் தோட்டத்திற்குள் வராமல் தடுக்கும் ஒரு இயற்கையான வேலியாகச் செயல்படுகிறது.
பசுமைப் புரட்சியில் பூண்டுச் செடிகளின் பங்கு:
இவைகளின் சிறப்பு அம்சம்: இயற்கை எதிர்ப்பு சக்தி கொண்டவை.
சுற்றுச்சூழல் நன்மை: இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தேவையை நீக்குகிறது.
மகரந்த சேர்க்கை: இதன் பூக்கள் தேனீக்களுக்கு நல்ல உணவாக அமைகிறது.
மண் பாதுகாப்பு: பூஞ்சை காளான் மற்றும் தேவையற்ற பாக்டீரியாக்களி டமிருந்து மண்ணைக் காக்கிறது.
இதுபோல் எண்ணற்ற நன்மைகளை பூண்டுச்செடிகள் பசுமை சுற்றுச் சூழலுக்கு செய்கின்றன. ஆதலால், இவற்றின் பயன்பாடுகளை தெரிந்து வைத்துக்கொண்டு தோட்டம் வைத்து இருப்பவர்கள் பயன்படுத்தி மேன்மை அடையலாம்.