
தமிழகத்தில் கன்னியாகுமரி, பொதிகை மலை, குற்றால மலை, பழனிமலை ஆகிய இடங்களில் இலையுதிர் காடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இது வறண்ட நிலத்திலும் வளரும் மரம் என்பதாலும், பாலை திணைக்குரிய மரம் என்பதாலும் ‘வெட்பாலை’ என்ற பெயர் உண்டானது. கடுங்கோடையிலும் தளிரும் இம்மரம். யானை தாகம் தீர்த்துக்கொள்ள பாலை மரப்பட்டைகளைக் கிழித்து தண்ணீரை உறிஞ்சும். தந்தம் போல் வெண்மையாகக் காணப்படும் இதற்குத் ‘தந்தப் பாலை’ என்ற பெயரும் உண்டு. திருப்பாலைத்துறை எனும் திருத்தலத்தின் தல மரமாக இது விளங்குகிறது.
இது சருமம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் நீக்கும். குடல் பூச்சிகளை ஒழிக்கும். வலி நிவாரணியாக, காய்ச்சலை நீக்குவதோடு, வாயு பிரச்னைகளையும் போக்கும். உடலில் உள்ள விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும். வாத, பித்த, கபத்தை நீக்கும். முடி உதிர்தலை தடுக்கும். புற்று நோய் வராமல் காக்கும்.
இதன் தளிர் இலைச்சாறு மஞ்சள் காமாலையை குணப்படுத்தக் கூடியது. இம்மர இலையை அரைத்து சொத்தையான பற்களின் துவாரத்தில் வைக்க பல் வலி குறையும். இலையை அரைத்து கழுத்தில் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி என்ற கழலை நோய்க்கு பற்றுப் போட குணமாகும்.
மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் வெப்பாலை இலைகளை சேர்த்து ஏழு நாட்கள் சூரிய புடம் போட்டு பாட்டிலில் வைத்து சோரியாஸிஸ், கரப்பான், சொறி, சிரங்கு போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்தலாம். இதன் விதைகள், ‘வெட்பாலை அரிசி’ என அழைக்கப்படுகிறது. இது வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தடுக்கிற, மேலும் இது ஆண்மையை பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மரப்பட்டை கசாயம் கல்லைக் கரைக்கும்.
வெப்பாலை மர பொம்மைகள் மிகவும் புகழ் பெற்றவை. குழந்தைகள் இந்த பொம்மைகளை கடித்து விளையாடும்போதும், மண் உருட்டி விளையாடும் போதும் வெப்பாலை மூலிகை மருத்துவ குணங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
சில பெண்கள் கருப்பை குறைபாட்டால் தாய்மை அடையாமல் இருப்பர். அவர்கள் நொச்சி இலை, வெப்பாலை இலை, கீழாநெல்லி இலை இவற்றை சம அளவு எடுத்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏதாவது பூச்சி கடித்துவிட்டால் இதன் வேரினை எடுத்து வாயில் மென்று உமிழ் நீரை விழுங்கினால் உடனடி முதலுதவி சிகிச்சையாக இருக்கும்.
இந்த மர நிழலில் உட்கார்ந்து பேசும் கணவன், மனைவிக்கிடையே எப்போதும் சண்டை சச்சரவு இருக்காது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தை அந்தக் காலத்தில் புது வீடு கட்டப் பயன்படுத்துவார்கள்.