ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள பூனை விரும்பிகளால் 'சர்வதேச பூனைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
நமது இதயங்களைக் கவர்ந்த அழகான ரோமங்களை கொண்ட அந்த ஜீவன்களிடம் அன்பு கொண்டு நேசிக்கும் மனிதர்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத ஒன்றாகும்.
பூனைகளின் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கவும் விரும்பிய விலங்கு நல அமைப்புகள் மற்றும் பூனைகள் நல ஆர்வலர்களின் குழுக்களின் முன்னெடுப்பால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
விலங்குகள் நலனுக்காக சர்வதேச நிதியத்தால் விலங்கு உரிமை குழுக்களுடன் இணைந்து பூனைகள் தினம் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
அரிய வகைப் பூனை இனங்கள்:
1) நார்வே வனப்பூனை:
நார்வேயின் வனப் பூனைகள் காடுகளில் வாழ்கின்றன. மேலும் அவை கடுமையான குளிர்காலங்களை தாங்க உதவும் தடிமனான நீர் எதிர்ப்பு தன்மை கொண்ட அடர்த்தியான ரோமங்களைக் கொண்டுள்ளன. அவை காட்டு தோற்றத்தில் இருந்தபோதிலும் சிறந்த குடும்ப செல்லப் பிராணிகளை உருவாக்குகின்றன.
2) கார்னிஷ் ரெக்ஸ்:
கார்னிஷ் ரெக்ஸ் பூனைகள் மென்மையான, வெல்வெட்டு போன்ற முடியைக் கொண்டு உள்ளன. இது சாதாரண இனம். அதன் துடிப்பான தன்மைக்கு இது பெயர் பெற்றது.
3) அமெரிக்க பாப்டெயில் பூனை:
அரிதான பூனைகளில் ஒன்றான இது அதன் குட்டையான பஞ்சு போன்ற உடலுக்கும் நாய் போன்ற வாலுக்கும் பெயர் பெற்றது. காட்டுத் தோற்றம் உடைய இந்த பூனைகள் மிகவும் புத்திசாலிகள் வளர்ப்பவர்களிடம் வலுவான பிணைப்பை உருவாக்குகின்றன.
தலைசிறந்த பூனைகள் இனங்கள்:
1) ரஷ்ய நீல பூனை:
இது தனித்துவமான நீல சாம்பல் நிற தோலைக் கொண்ட வீட்டுப் பூனை இனமாகும். அவற்றின் புத்திசாலித்தனம் பாசமுள்ள இயல்பு, விளையாட்டுத்தனம் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவை. இவை சுமார் 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை.
2) பர்மியப் பூனை:
தென்கிழக்கு ஆசியாவில் தோன்றி அமெரிக்காவில் வளர்க்கப்படும் வீட்டுப் பூனை இனமாகும். இதை குட்டையான பளபளப்பான தோற்றத்திற்காக அறியப்படுகின்றன. இவை பழுப்பு, வெள்ளை, பிரௌன் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. இவை மிகவும் பாசமாகவும், நட்பாகவும், குழந்தைகளுடன் பழக சிறந்த துணையாகவும் அமைகின்றன.
3) வங்காளப் பூனை:
பெங்கால் பூனை, ஆசிய சிறுத்தைப் பூனையுடன் இனப் பெருக்கம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட வீட்டுப் பூனை இனமாகும். இவை கவர்ச்சியான புள்ளிகள் மற்றும் பளபளப்பான ரோமங்களுடன் இருக்கும்.
4) பாரசீகப் பூனை:
பாரசீகப் பூனை நீண்ட ரோமங்களைக் கொண்ட பூனை இனமாகும். இதன் வட்ட முகம், குறுகிய வால் ஆகியவை மிகவும் வாய்ந்தது. அமைதியான அடக்கமான செல்ல பிராணிகளாக பிரபலமாக தேர்வு செய்யப்படுகின்றன. இவை மிகவும் பஞ்சு போன்ற பூனை இனங்களில் ஒன்றாகும்.
5) சியாமிஸ் பூனை:
சியாமிஸ் பூனை என்பது தாய்லாந்தில் தோன்றிய வீட்டு பூனை இனமாகும். இது சியாம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வெளிறிய உடல், முகம், காதுகள், பாதங்கள் மற்றும் வால் ஆகியவற்றில் கருமையான புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான நிறத்திற்காக வளர்க்கப்படுகிறது. பூனைகள் உரிமையாளர்களிடம் மிகவும் அரட்டை போடும் தன்மை கொண்டவை என்றும் சொல்லப்படுகிறது. இவை மிகவும் புத்திசாலிகள். தந்திரங்கள் செய்யவும், கயிற்றில் நடக்கவும் பயிற்சி கொடுத்தால் செய்யும்.
இன்னும் பல்வேறு பூனைவகைகள் உள்ளன. பூனைகள் உலகளவில் அன்பான தோழர்களாக இருக்கின்றன. புத்திசாலித்தனம், பாசம், தனித்துவமான தோற்றம் கொண்டுள்ளதால் அவை` அழகாகவும் தோழனாகவும் இருக்கின்றன.