
பிளாஸ்டிக் என்ற நுண் நெகிழிகள், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, மனித ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகம், ஒரு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. அதில், 1997ம் ஆண்டில் இருந்து, 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட 91 பேர் உடல் கூறாய்வில் 12க்கும் மேற்பட்டோர் மூளையில் நுண்நெகிழி துகள் இருந்தது கண்டறியப்பட்டது. சிலரது சிறுநீரகம், கல்லீரல், ரத்தம், விந்தணு, தொப்புள் கொடி, தாய்ப்பால் ஆகியவற்றிலும் நுண் நெகிழி துகள் கலந்திருப்பது தெரிய வந்தது.
பொதுவாக, 5 மி.மீ.க்கு குறைவான அனைத்து வகையான பிளாஸ்டிக் துகள்களும், மைக்ரோ பிளாஸ்டிக் நுண்நெகிழி)களாகக் கருதப்படுகின்றன. இவை கண்களுக்குத் தெளிவாகத் தெரியாது. இவ்வகை துகள்கள், புறச்சூழல் முழுதும் ஆக்கிரமித்துள்ளன. இவை பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவதால் உருவாகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் கோப்பைகள், கண்டெய்னர்கள், உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் கவர்கள், டிபன் பாக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பிளாஸ்டிக் துகள்கள் நம் உணவில் கலக்கப்படுகிறது.
‘மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்’ என்ற சொல்லை, 2004ம் ஆண்டில் முதன்முதலில் பயன்படுத்தியது கடல்வாழ் உயிரியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் தாம்சன் என்பவர். ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துண்டுகளை ‘மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்’ எனக் குறிப்பிட்டார்.
மனிதனின் மூளைக்குள்ளும், நுண் நெகிழிகள் ஊடுருவி இருக்கின்றன. சர்வதேச ஆய்வு முடிவுகளில், அவை எச்சரிக்கப்பட்டுள்ளன. மேலும், மறதி நோயையும் நுண் நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. உணவு, நீர், காற்று என நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும் நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன. இவை நமது உடலுக்குள் எளிதில் சென்று விடுகின்றன. நஞ்சுக்கொடியில் உள்ள மைக்ரோ-நானோபிளாஸ்டிக்ஸ் குறை பிரசவத்தை ஏற்படுத்துகிறது என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தை பிறந்த உடனேயே அவர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக்கின் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், நஞ்சுக்கொடியில் அதைவிட பிளாஸ்டிக் குவியல் அதிகமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
சந்தையில் கிடைக்கும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85 சதவிகிதம் நுகர்வோர் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் சாப்பிடும் சாப்பாடு, குடிக்கும் குடிநீர், சுவாசிக்கும் காற்று என அனைத்திலும் மயிரிழை அளவு பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன. அதனையும் சேர்த்தே நாம் நுகர்ந்து பல உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாகிறோம். இதனால் தவிர்க்க முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு, தனிமனித விழிப்புணர்வு அவசியம்.
தேநீர் பைகளில் (tea bags) நிரப்பப்படும் தேயிலை தூள், கொதிக்கும் வெந்நீரில் போடப்படும்போது மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கோடிக்கணக்கில் வெளியாகின்றன என்றும், அவற்றை நம் குடலில் உள்ள செல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன என்றும் ஆய்வு கூறுகிறது. எனவே, வழக்கமான முறையில் டீ தயாரித்துப் பருகுங்கள்.
மைக்ரோ ஓவன் சமையல் செய்யும்போது ஒருபோதும் பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாதீர்கள். காரணம் அவற்றை சூடுபடுத்தும்போதுதான் அதிகப்படியான பிளாஸ்டிக் துகள்கள் வெளிப்படுகின்றன என்கிறார்கள். மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது செராமிக் அல்லது கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
சமையல் சாமான்கள் வைக்கும் பாத்திரங்கள், வேலைக்கு அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ்களை ஒருபோதும் பிளாஸ்டிக் பாத்திரங்களாகப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துங்கள்.
தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் பாட்டில்கள் பிளாஸ்டிக் பாட்டில்களாக இல்லாமல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துங்கள். நீங்கள் வெளியில் வாங்கி பயன்படுத்தும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கால் பங்கு அளவு நானோ பிளாஸ்டிக் துகள்கள்தான் இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனவே, வீட்டில் தண்ணீரை பில்டர் செய்து அதை மெட்டல் அல்லது கண்ணாடி பாட்டிலில் மாற்றி பயன்படுத்துங்கள்.
சமையலறையில் காய்கறிகள் வெட்டப் பயன்படுத்தும் பலகைகள் மரத்தில் செய்யப்பட்டதாக இருக்கட்டும். பிளாஸ்டிக் பலகைகள் வேண்டாம். பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை தவிருங்கள். இந்ந வகையில் தயாரிக்கப்படும் 16 வகையான புரோட்டீன் உணவுகளில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, சிக்கன் 65 இந்த மாதிரியான அதிக எண்ணெயில் மசாலா சேர்த்து சமைக்கப்படும் உணவுகளில் ஒரு கிராம் உணவில் பல பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என்கிறார்கள். இந்த மாதிரியான உணவுகளை பாக்கெட்டில் வாங்காதீர்கள்.
உலகெங்கும் இப்போது புழக்கத்தில் இருக்கும் ஆடைகளில் 67 சதவீதம் பாலீயஸ்டர் மற்றும் நைலான் இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சலவை செய்யும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருவாகிறது. எனவே, காட்டன் உடைகளுக்கு மாறுங்கள். குழந்தைகளுக்கு விளையாட பிளாஸ்டிக் பொருட்களை வாங்கித் தராதீர்கள். அதேபோல சூயிங்கம் வாங்க அனுமதிக்காதீர்கள். காரணம் ஒரு கிராம் சூயிங்கத்தில் 100 மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.