
பெரும்பாலான வீடுகளில் கிளிகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. கிளிகளில் பல வகைகள் உள்ளன. மனிதர்களைப் போன்றே பேசும் திறன் பெற்றவை சில வகைக் கிளிகள். அந்த வகையில், சில பிரபலமான கிளி இனங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. பட்ஜிஸ் (Budgies): பட்ஜிஸ் கிளிகள் பொதுவாக பச்சை, மஞ்சள், நீலம், சாம்பல், வெள்ளை போன்ற வண்ணங்களில் காணப்படும். இவற்றின் இறகுகளில் கோடுகள், புள்ளிகள் இருக்கும். ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கிளிகள் சிறியதாகவும், வண்ணமயமாகவும், நீண்ட வால் கொண்டதாகவும், ஆஸ்திரேலியாவின் வறண்ட பகுதிகள் முழுவதும் காடுகளில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலிய மெலோசிட்டாகஸ் பேரினத்தைச் சேர்ந்த இவை விதைகளையும், தானியங்களையும் உண்ணும். இந்தக் கிளிகள் நட்பு மற்றும் பேசும் தன்மைக்கு பெயர் பெற்றவை. பராமரிப்பதற்கு எளிதானவை. இவை வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டையிடும்.
2. காதல் கிளிகள் (Love birds): இதில் ஒன்பது வகைகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலும், மடகாஸ்கரிலும் இவை அதிகம் காணப்படுகின்றன. இந்தக் கிளிகள் 13 முதல் 17 சென்டி மீட்டர் நீளமும், 24 சென்டி மீட்டர் வரை இறக்கைகள் கொண்டவை. இவை ஒன்றரை முதல் இரண்டு அவுன்ஸ் எடை கொண்டவை. சிறிய கிளி இனங்களில் ஒன்றான இவை, இவற்றின் அழகான நிறத்திற்காகவும், இணைந்தே இருக்கும் தன்மைக்காகவும் செல்லப் பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. ஜோடி பறவைகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த நல்ல தேர்வாக இருக்கும். ஃபிஷரின் லவ்பேர்ட்ஸ் மற்றும் நியாசா லவ்பேர்டு இரண்டும் அருகி வரும் நிலையில் உள்ளன. கருப்பு கன்னமுள்ள லவ்பேர்டு அனைத்து லவ் பேர்டுகளிலும் காடுகளில் மிகவும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.
3. அமேசான் கிளிகள் (Amazon parrot): அமேசோனா (Amazona) பேரினத்தைச் சேர்ந்த கிளிகள் இவை. தென் அமெரிக்கா முதல் மெக்சிகோ, கரீபியன் வரையிலான இடங்களில் இவை காணப்படுகின்றன. 28 முதல் 33 சென்டி மீட்டர் நீளமுள்ள இவை, 25 முதல் 60 ஆண்டுகள் வரை வாழும். சிட்டாசிடே குடும்பத்தைச் சேர்ந்த இவற்றில் 30 இனங்கள் உள்ளன. பெரும்பாலான அமேசான்கள் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. பல அமேசான்கள் மனித பேச்சு அல்லது பிற ஒலிகளை பிரதிபலிக்கும் திறன் கொண்டவை. இதன் காரணமாக இவை செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
4. எக்லெக்டஸ்(Moluccan Eclectus): எக்லெக்டஸ் கிளிகள் நடுத்தர அளவிலான கிளிகளாகும். இவை நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஆண், பெண் என இரு பாலினத்திலும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. ஆண் கிளிகள் பச்சை நிறமாகவும், பெண் கிளிகள் சிவப்பு நிறமாகவும் காணப்படும். இவை அமைதியான இயல்புடையவை மற்றும் பேசக்கூடிய திறன் பெற்றவை என்று சொல்லப்படுகிறது. 17 முதல் 20 அங்குலம் நீளமுள்ள இவை 13 முதல் 19 அவுன்ஸ் வரை எடை உள்ளவை. இவை பழங்கள், விதைகள், இலை மொட்டுகள், பூக்கள், தேன், அத்திப்பழங்கள் மற்றும் கொட்டைகளையும் உண்கின்றன.
5. குவாக்கர் கிளிகள்(Quaker Parrots): குவாக்கர் கிளிகள் அல்லது துறவி கிளிகள் (Monk Parakeet) என்று அழைக்கப்படும் இவை சிறிய மற்றும் நடுத்தர அளவுள்ள பிரகாசமான பச்சை நிற கிளிகளாகும். இவை பச்சை நிற உடல், சாம்பல் நிற மார்பு மற்றும் தலை, மஞ்சள் கலந்த பச்சை நிற வயிறு கொண்டவை. கூடி வாழும் தன்மை கொண்ட இவை பெரிய கூடுகளை உருவாக்கும் திறன் கொண்டவை. சராசரியாக 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 11 முதல் 13 அங்குல நீளம் வரை இருக்கும் இவை, பேசும் திறன் கொண்டவை. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இவை அதிகம் காணப்படுகின்றன.
6. காக்டீல்கள்(Cockatiel): ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட கிளிகள். இவை பெரும்பாலும் வறண்ட அல்லது அரை வறண்ட நாடுகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் நாடோடிகளாக இருக்கும் இந்த இனம் உணவு மற்றும் நீர் கிடைக்கும் இடத்திற்கு நகர்கின்றன. இவை சிறியவை, சாம்பல் நிற உடலும், மஞ்சள் நிற தலையும், ஆரஞ்சு கன்னங்களுடனும் காணப்படும். இவை நீண்ட வால் இறகுகளைக் கொண்டவை.
நிம்பிகஸ் இனத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் இந்த காக்டீல் மட்டுமே. காக்டீல் கிளிகள் நட்பானவை மற்றும் அவற்றை கையாள்வதும் எளிதானது. இவை மற்ற கிளிகளைப் போல பேசக் கூடியவை அல்ல. ஆனால், விசிலடிக்கவும், சில ஒலிகளை உருவாக்கவும் செய்கிறது. காக்டீயலின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். நன்னீர் ஆதாரத்திற்கு அருகில் உள்ள மரப் பள்ளங்களில் கூடு கட்டுகின்றன. இவை பெரும்பாலும் யூகலிப்டஸ் அல்லது கம் மரங்களை கூடு கட்ட தேர்வு செய்கின்றன.