
மான் வகைகளில் நாம் புள்ளிமான், சம்பார் மான், சருகு மான், கலைமான் போன்ற வகைகளைப் பற்றி அறிவோம். ஆனால், போங்கோ என்ற மிகப்பெரிய மான் வகையை காண்பது அரிதாகும். அந்த வகை மான் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பிரம்மாண்டமான மான் வகையெனக் கருதப்படும் போங்கோ மான் மிக அழகானதாகும். இது ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இதன் விஞ்ஞானப் பெயர் Tragelaphus eurycerus). இதன் உடல் நல்ல சிவந்த ப்ரௌன் நிறத்தில் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும். ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்பு உண்டு. இவை பெரும்பாலும் இரவிலேயே நடமாடும். அரிதாகவே இவ்வகை மான்களைக் காண முடியும்.
இதில் மலை போங்கோ மான் என்ற இனம் ஆப்பிரிக்காவில் காணப்படும். போங்கோ மான்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் வாழும். தங்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேடும். இந்த வகை போங்கோ மான் கென்யா, உகாண்டா மற்றும் காங்கோ பகுதிகளில் காணப்படுவதாகத் தெரிகிறது. நிறைய இலைகள், மரங்கள் நிறைந்த பகுதியிலும், அதிக தண்ணீர் நிறைந்த இடங்களை மட்டுமே இந்த வகை மான் இனங்கள் தேர்வு செய்கின்றன.
இந்த மான்கள் பழங்களை சாப்பிட்டு விதைகளை வெளியிடுவதால் காட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. ஆண் போங்கோ மான் இனம் 320 கிலோ எடை வரை காணப்படும். மேலும், 1.3 மீட்டர் உயரம் வரை இது இருக்கும். உயர்ந்த தோளைப் பெற்றிருக்கும். சிவந்த பிரௌன் உடலில் சுமார் பதினைந்து அடர்ந்த வெண்மை கோடுகளைக் காணலாம். இதன் கொம்பு சற்று சுருண்டு காணப்படும். இது ஒரு மீட்டர் வரை நீளம் உடையதாகும். இதற்கு பெரிய காதுகள் மற்றும் வலுவான கால்களும் உண்டு.
போங்கோ மான்கள் இலைகள், வேர்கள், மரத்தழைகள், கொடிகள் இவற்றையே உண்ணும். வெகு அபூர்வமாக பழங்களை உண்ணும். காடுகளில் எந்த சிரமமும் இன்றி சுற்றி வரும். இந்த வகை மான்கள் காலை நேரங்களில் அடர்ந்த காடுகளில் மறைந்திருக்கும். இவை மாமிசம் உண்ணாது. இது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும். இவற்றைப் பற்றி அறிய நல்ல பொறுமை தேவை.
போங்கோ மான் இனங்களைக் காக்க உலக அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை வேட்டையாடுவதைத் தடுத்து இந்த இனத்தைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது ஆப்பிரிக்காவின் பயோடைவர்சிடியின் அடையாளமாகத் திகழ்கிறது. போங்கோ இனத்தால் காட்டின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படுகிறது. ஆகவே, இவை சுற்றுச்சூழலின் நண்பனாக கருதப்படுகிறது.