

Ant colony Discovered:
“எறும்பு ஊர கல்லும் தேயும்” என நம் முன்னோர்கள் சாதாரணமாக சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால், அதே சின்னஞ்சிறு எறும்புகள் பல லட்சக்கணக்கில் ஒன்று சேர்ந்தால் பூமியின் அடியில் ஒரு மாபெரும் நகரத்தையே உருவாக்கிவிடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது நேரடியாக நிரூபித்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் அமைந்துள்ள செர்ராடோ என்ற அடர்ந்த வனப்பகுதியில் மனித கற்பனைக்கு எட்டாத ஒரு பாதாள உலகத்தை இலை வெட்டும் எறும்புகள் மிக நுட்பமாக அமைத்துள்ளன. பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட ஒரு பிரம்மாண்ட எறும்புப் புற்றை முழுமையாக ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் செய்த விசித்திரமான முயற்சியும், அதன் முடிவில் கிடைத்த மிரள வைக்கும் தகவல்களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
10 டன் சிமெண்ட்!
பேராசிரியர் லூயிஸ் கார்லோஸ் ஃபோர்டி என்பவரின் தலைமையிலான ஒரு ஆராய்ச்சிக் குழு இந்த ஆச்சரியமான பரிசோதனையை முன்னெடுத்தது. பல லட்சம் எறும்புகள் வாழ்ந்துவிட்டு காலி செய்த ஒரு பெரிய புற்றின் சின்னஞ்சிறு துளைகளுக்குள் அவர்கள் திரவ நிலையில் கான்கிரீட் கலவையை மெதுவாக ஊற்றினர். இந்த முழு அமைப்பையும் முழுமையாக நிரப்ப அவர்களுக்கு சுமார் 10,000 கிலோ சிமெண்ட் தேவைப்பட்டுள்ளது.
பத்து நாட்கள் கழித்து அந்த சிமெண்ட் நன்றாகக் காய்ந்து பாறையாக மாறிய பிறகு, சுற்றியுள்ள மண்ணை மிகவும் கவனமாக தோண்டி எடுத்தனர். அப்போது அவர்களுக்கு பூமியின் அடியில் காட்சியளித்த அந்த பிரம்மாண்ட கட்டமைப்பு ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தையே பிரம்மிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மனிதர்களுக்கு சவால் விடும் கட்டுமானம்!
மண்ணை விலக்கி தோண்டி எடுக்கப்பட்ட அந்த கான்கிரீட் வடிவம் ஒரு நவீன ஹைடெக் சிட்டி போலவே மிகவும் நேர்த்தியாக காட்சியளித்தது. சுமார் 500 சதுர அடி பரப்பளவிலும் 26 அடி ஆழத்திலும் இந்த எறும்பு சாம்ராஜ்யம் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருந்தது. இந்த பாதாள கோட்டையை அமைப்பதற்காக அந்த சிறு பூச்சிகள் சுமார் 40 டன் எடையுள்ள மண்ணை சிறுகச் சிறுகத் தோண்டி தரைக்கு மேலே கொண்டு வந்துள்ளன.
மனிதர்கள் பல வருடங்கள் கஷ்டப்பட்டு கட்டிய சீனப் பெருஞ்சுவருக்கு இணையான ஒரு மாபெரும் கூட்டு உழைப்பை இந்த எறும்புகள் தங்களின் அசுரத்தனமான ஒற்றுமையால் சாத்தியமாக்கியுள்ளன. மேலிருந்து வரும் அழுத்தத்தால் எந்த ஒரு சுரங்கமும் இடிந்து விழாதவாறு மிக துல்லியமாக இவை கட்டப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் வசதிகள் கொண்ட பாதாள அறைகள்!
நாம் நமது வீடுகளில் படுக்கையறை, வரவேற்பறை என தனித்தனியாக பிரிப்பது போலவே, இந்த எறும்புகளும் மாஸ்டர் பிளான் போட்டு இந்த புற்றை வடிவமைத்துள்ளன. தங்களின் முக்கிய உணவான பூஞ்சைகளை வளர்க்க தனியாக நீள்வட்ட அறைகளும், குப்பைகளை கொட்ட ஓரங்களில் பாதுகாப்பான கழிவறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. தாங்கள் வெட்டி வரும் இலைகளை வேகமாக கொண்டு செல்ல எந்த நெரிசலும் இல்லாத வகையிலான அகலமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளை அமைத்திருந்தன.
அதுமட்டுமில்லாமல் புற்றின் உள்ளே உருவாகும் வெப்பம் வெளியேறவும் சுத்தமான ஆக்சிஜன் உள்ளே வரவும் ஏசி வசதியை போல இயற்கையான புகைபோக்கி தொழில்நுட்பத்தை தத்ரூபமாகச் செதுக்கியுள்ளன. ஒட்டுமொத்த கூட்டத்தையும் வழிநடத்தும் ராணி எறும்பு பாதுகாப்பாக இருக்க தரைக்கு மிக அடியில் ஒரு சூப்பர் அறையையும் கட்டியுள்ளன.
ஆறறிவு படைத்த நாம் பல பெரிய இயந்திரங்களை வைத்து கட்டும் அதிநவீன கட்டிடங்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காத ஒரு மாபெரும் சிவில் இன்ஜினியரிங் வித்தையை இந்த எறும்புகள் எளிதாக செய்து காட்டியுள்ளன என்பது உண்மையிலேயே வியக்க வைக்கிறது.