
முந்திரி தனது சுவையின் காரணமாக சிற்றுண்டிகள், சைவ உணவுகள், அசைவ உணவுகள், இனிப்பு வகைகள், கேக்குகள், பிஸ்கட்டுகள், குளிர் பானங்கள், சூடான பானங்கள் என பல வகை உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முந்திரி விலை உயர்ந்த பருப்பு வகையில் இருந்தாலும் பலராலும் விரும்பி உண்ணப்படுவதால், அதற்கான தேவை உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகிறது. உற்பத்தி ரீதியில் இந்தியா முந்திரி சாகுபடியில் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவின் செழிப்பான உணவுக் கலாசாரத்தில் முந்திரி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக உள்ளது. முந்திரி இல்லாமல் எந்த ஒரு இனிப்பும் முழுமை பெறாது. அசைவ உணவுகள், பானங்கள் போன்றவற்றிலும் முந்திரி சுவைக்காக சேர்க்கப்படுகிறது.
முந்திரி ஒருவர் வீட்டு செழிப்பின் அடையாளமாக மாறிப்போனதால், அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பல வகை உணவுப் பொருட்களிலும் முந்திரி கட்டாயம் இடம் பெறுகிறது. இதுபோன்ற காரணங்களினால் இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப முந்திரி விவசாயம் செய்வது நல்ல தொழிலாகப் பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக இந்தியா முந்திரி உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. சுவையூட்டியாக மட்டுமல்லாமல், ஊட்டசத்து மிக்கதாகவும் முந்திரி உள்ளது. பருவ கால பயிர் என்பதாலும் முந்திரி பருப்பை பிரித்து எடுப்பது சில சிரமமான வேலைகளைக் கொண்டிருப்பதாலும் அதன் விலை உயர்வாக உள்ளது.
பிரேசிலை பூர்வீகமாகக் கொண்ட வெப்பமண்டல பசுமையான மர வகையில் ஒன்றாக முந்திரி உள்ளது. வணிக உற்பத்தியில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முந்திரி மரம் இரட்டைப் பயன்களைத் தருகிறது. ஒன்று முந்திரி பழம் மற்றொன்று முந்திரி பருப்பு. முந்திரி பழத்திற்கு எந்த சந்தையும் இல்லை என்பதால் பெரும்பாலும் அது வீணாக்கப்படுகிறது. சில இடங்களில் மதுபானம் தயாரிக்க குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய தரவுகளின்படி, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் முந்திரியின் தேவை அதிகரித்துள்ளதால் கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகளாவிய முந்திரி பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. முந்திரி பருப்புகளின் முன்னணி உற்பத்தியாளர்களில் இந்தியா, வியட்நாம், கோட் டி ஐவரி, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஆயினும், பதப்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 800,000 மெட்ரிக் டன் முந்திரி கொட்டைகளை உற்பத்தி செய்கிறது. கோட் டி ஐவரி மற்றும் நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மூல முந்திரி கொட்டை உற்பத்தியில் இந்தியாவை மிஞ்சக்கூடும் என்றாலும், மொத்த முந்திரி பருப்பின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் இந்தியா முன்னோக்கி சென்று விட்டது. இந்தியாவில் முந்திரி விவசாயம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இது கிராமப்புறத்தில் உள்ள பெண்களின் பொருளாதாரத்தின் முக்கியப் பங்களிப்பதாக இருக்கிறது.
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முந்திரி பயிர் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தற்போது நாட்டின் முன்னணி முந்திரி உற்பத்தியாளராக இருக்கிறது. இந்தியாவின் மொத்த மகசூலில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமாக உற்பத்தி இந்த மாநிலத்தில் இருந்துதான் வருகிறது. நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முந்திரி பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சாதகமான காலநிலை மற்றும் புவியியல் சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்தியாவில் முந்திரி சாகுபடிக்கு ஏற்ற நிலைமைகளை வழங்குகின்றன. கடற்கரை அருகே உள்ள பகுதிகள் முந்திரி மரங்களுக்கு ஏற்ற நிலப்பரப்பாக உள்ளன. நன்கு பரவலான மழைப்பொழிவு, மிதமான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகியவை முந்திரிப் பயிர்கள் செழித்து வளர உதவுகிறது.