
பொதுவாக ஆஸ்திரேலியர்கள் துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்கள். இயற்கை எழில் சூழ்ந்த ஆஸ்திரேலியா, நகரங்களை தாண்டி அச்சமூட்டும் ஒரு நாடாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவின் மனிதர்கள் வசிக்கும் இடங்கள் மிகவும் குறைவு. ஆஸ்திரேலியாவில் விஷ ஜந்துக்கள், கரடிகள் , ஊர்வன உள்ளிட்ட விலங்குகள் எங்கும் நிறைந்திருக்கும். அந்த நாட்டில் வாழும் மனிதர்கள் என்பதால் தைரியமானவர்கள் என்று நினைக்கிறோம். ஆனாலும் அவர்கள் ஒரு பறவையை பார்த்து பயப்படுகிறார்கள்.
ஆஸ்திரேலியர்கள் பயப்படும் அந்த பறவையின் பெயர் காசாவரி. மிகப்பெரிய பறவைகளில் ஒன்றான காசாவரியால் பறக்க முடியாது. இந்த பறவை டைனோசருடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதன் சராசரி உயரம் 5-6 அடியாகவும், சராசரி எடை 50-70 கிலோ வரையும் இருக்கிறது. அச்சமூட்டும் பெரிய கண்களும் டைனோசர் போன்ற கொண்டையும் அதன் தலையில் உள்ளது. வலிமை மிக்க இரண்டு கால்களில் கத்தியை போன்ற கூர்மையான உறுதியான நகங்கள் உள்ளன. காசாவரி பறவை அதன் கால்களால் மனிதர்களை எட்டி உதைக்கும் போது ஆழமான காயம் கழுத்தில் ஏற்பட்டு சிலர் இறந்துள்ளனர். இப்போது புரியும், எதற்காக ஆஸ்திரேலிய மக்கள் இந்த பறவையை கண்டால் நடுங்குகிறார்கள் என்று.
காசாவரியில் மூன்று இனங்கள் உள்ளன, அவை வடக்கு காசாவரி, தெற்கு காசாவரி மற்றும் குள்ள காசாவரி ஆகியவை. இவை ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் சில பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை. காசாவரி பறவைகளில் பெண் பறவைகள் அதிக உயரமும் எடையும் கொண்டதாக இருக்கும். மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட இந்த பறவை மற்ற விலங்குகளிடம் இருந்து தனித்தே இருக்கும்.
மறைவிடங்களில் தான் இனப்பெருக்கம் செய்யும். பின்னர் ஆண் பறவைகளின் கூடுகளுக்கு சென்று முட்டைகளை இடும். முட்டைகளை ஆண் பறவை கண்ணும் கருத்துமாக 50-55 நாட்கள் வரை பாதுகாத்து அடைகாக்கிறது. குஞ்சுகள் பொரிந்து வெளியே வந்ததும் 9 மாதங்கள் வரை ஆண் பறவையே வளர்க்கிறது. ஆண் பறவை அடைகாக்கும் காலத்தில் வேறு ஆண் பறவையிடம் பெண் பறவை கூடுகிறது. பெண் பறவை குஞ்சுகளை வளர்ப்பதில்லை. அனைத்து பொறுப்பும் இங்கு ஆண் பறவைக்கு தான்.
18000 ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் முதன் முதலாக வளர்த்த பறவையாக இந்த காசாவரி பறவை உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இன்றும் கூட இந்த பறவையை நீயூ கினியாவில் உள்ள மக்கள் வளர்த்து வருகின்றனர். "காசாவரி பறவைகள் உயிருள்ள டைனோசர்களைப் போல இருக்கின்றன." என்று பப்புவா நியூ கினியாவில் ஆய்வு செய்த ஆண்ட்ரூ கூறுகிறார்.
ஆக்ரோஷமான செயல்பாட்டில் பெரும்பாலும் டைனோசருடன் ஒப்பிடப்படும் இந்தப் பறவை, குஞ்சு பொரித்து வெளிவந்த பிறகு, அது முதலில் பார்க்கும் மனிதர்களுடன் இணங்கி விடுகிறது. அதைப் பராமரிப்பது மற்றும் வளர்ப்பது எளிதாக உள்ளது என்று இறைச்சிக்காக வளர்க்கும் நியூ கினியா மக்கள் கூறுகின்றனர். இதனால் கூட மனிதர்களால் வளர்க்கப்பட்ட முதல் பறவை காசாவரியாக இருந்திருக்கலாம்.
காசாவரிகள் தங்கள் குஞ்சுகள் இருக்கும் கூடுகளுக்கு அருகில் மனிதன் வந்தால் தாக்குகின்றன. நேரடியாக மனிதனையோ நாயையோ சந்தித்தால் கால் நகத்தினால் தாக்குகின்றன. இதன் கத்தி போன்ற நகத்தின் ஒரே தாக்குதலில் மனிதனும் நாய்களும் இறந்துள்ளனர். மற்ற விலங்குகளிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க வாய்ப்பு இருந்தாலும், இந்த பறவையிடம் சிக்கி பிழைத்தவர்கள் குறைவு தான். ஆயினும் விலங்கு நல ஆர்வலர்கள் "காசாவரி பறவை கொன்ற மனிதர்களை விட, மனிதர்கள் கொன்ற காசாவரி பறவைகள் தான் மிகவும் அதிகம்" என்கின்றனர்.