
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் பனிச்சிறுத்தைகளின் வாழ்விடங்களை சாதாரண சிறுத்தைகள் ஆக்கிரமிப்பதை கண்டறிந்தனர். வழக்கமாக பனிச்சிறுத்தைகள், உயரமான பனிமலைகளில் வாழ்வதற்கு ஏற்ப உடல் தகவமைப்பை பெற்றவை. சாதாரண சிறுத்தைகளோ பசுமையான மலைகளில் உள்ள காடுகளில் மற்றும் சமவெளியில் உள்ள காடுகளில் வாழ்ந்து பழக்கப்பட்டவை. தற்போது சாதாரண சிறுத்தைகள் பனி மலைகளில் வாழத்தொடங்குவது பனிச் சிறுத்தைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
மைசூரை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையும் (NCF), ஜம்மு & காஷ்மீர் வனவிலங்கு பாதுகாப்புத் துறையும் இணைந்து கிஷ்த்வார் இமயமலைப் பகுதியில் ஒரு ஆய்வை நடத்தியது. 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் பனிமலைப் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இமயமலையின் பாலூட்டிகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிறுவப்பட்ட கேமராக்களில் பனிச் சிறுத்தையுடன் சாதாரண சிறுத்தையும் புகைப்படங்களில் பதிவானது. இயல்பாக பனிச்சிறுத்தைகள் 3000 முதல் 5500 மீட்டர் உயரத்தில் வாழக்கூடியவை. மாறிவரும் காலநிலையில் இந்த இடத்தில் சாதாரண சிறுத்தைகள் நடமாடும் பகுதியாக மாறிவருகிறது.
2008 ஆம் ஆண்டு, பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்க இந்திய அரசு பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்கியது. இந்த பூனை இனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக் பிரதேசங்களில் காணப்படுகிறது. இந்தியாவிற்கு வெளியே ஆப்கானிஸ்தான், பூட்டான், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்ய கூட்டமைப்பு, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
உலகளவில் அழிந்து வரும் இனமான பனிச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 4,000 முதல் 6,500 வரை இருக்கும். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை 718 என்றளவில் உள்ளது. அதே வேளையில் இந்தியா முழுவதும் சாதாரண சிறுத்தைகளின் எண்ணிக்கை 13874 ஆக உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள வார்வான் மற்றும் பத்தார் பள்ளத்தாக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய இமயமலைப் பகுதிகளில் கிஷ்த்வார் உயர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இமயமலையில் மேற்கு திசையில் உள்ள இந்த தேசிய பூங்கா பனிச் சிறுத்தைகளின் தாயகமாக உள்ளது. மாறிவரும் காலநிலையில் பனிப் பிரதேசங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. கிஷ்த்வார் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 45 க்கும் மேற்பட்ட குடிமக்கள் பலியாகினர். இதில் பனிச் சிறுத்தைகளின் வாழ்விடங்களும் அழிந்துள்ளது.
வானிலை மாற்றங்கள், வேகமான நகர மயமாக்கல் ஆகியவை விலங்குகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இமய மலையில் தொடர்ச்சியாக பனிப்பாறைகள் உருகுவது பனிச் சிறுத்தைகளுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.பத்தார் பள்ளத்தாக்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு கேமராவில் பனிச்சிறுத்தையுடன் சாதாரண சிறுத்தையும் ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது. பனிமலைகளில் வெப்பம் அதிகரிப்பது சாதாரண சிறுத்தைகளுக்கு சாதகமாக இருக்கிறது.
2024-25 ஆண்டு கணக்கெடுப்பில் பனிச்சிறுத்தைகள் வாழும் பகுதிகளில் சாதாரண சிறுத்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரண சிறுத்தைகள் பனிமலைகளில் அதிகரிப்பது மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும். சிறுத்தைகள் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிகம் வசிக்கிறது. குறிப்பாக தேயிலை தோட்டம், காபி, மிளகு தோட்டங்களில் மறைந்து வாழும் சிறுத்தைகள் மக்களை தாக்கிக்கொள்கிறது.
இதில் பனிச்சிறுத்தைகள் எவ்வளவோ பரவாயில்லை, இவை பெரும்பாலும் ஆடு, கோழி, நாய் போன்ற விலங்குகளை மட்டுமே வேட்டையாடுகிறது, இதன் வசிப்பிடமும் மக்கள் வாழிடங்களில் இருந்து தூரமாக உள்ளது. சாதாரண சிறுத்தைகள் -18 டிகிரி வரை பனியினை தாங்கும் தகவமைப்பு பெற்றுள்ளது. இதனால் பனிமலையில் அது வாழலாம். ஆனால், அவற்றின் எண்ணிக்கை உயர்ந்தால் பனிச்சிறுத்தைகள் வேறு பகுதிக்கு விரட்டவோ வேட்டையாடவோ கூடும்.