
தமிழ்நாட்டில் விவசாய வளர்ச்சிக்கு தென்னை விவசாயிகளும் குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கின்றனர். தென்னையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளையும் மதிப்புக் கூட்டி விற்பதன் மூலம் நல்ல வருவாயை ஈட்ட முடியும். இதனால் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் குறித்த விரிவான விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
இளநீர் மற்றும் தேங்காய் நுகர்வுக்காகவும், நார் மற்றும் எண்ணெய் உற்பத்திக்கும் தென்னை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. எல்லா காலத்திலும் இளநீர் மற்றும் தேங்காய்களை அறுவடை செய்ய முடியும் என்பதால், இதற்கான சந்தைத் தேவை அதிகம். கோடை காலம் வந்துவிட்டால் இளநீரின் விலை உயர்வதும் வழக்கம். பல வழிகளில் நமக்கு உதவும் தென்னை மரங்களைக் காப்பதும் நம் கடமையாகும். ஆகையால் தென்னை விவசாயிகள் தென்னை மரங்களுக்கு காப்பீடு எடுப்பது அவசியம்.
தென்னை மரங்களுக்கும் காப்பீடு எடுக்க வேண்டுமா என ஒருசில விவசாயிகள் நினைக்கின்றனர். இருப்பினும் சில வருடங்களுக்கு முன்பு கஜா புயலால் எண்ணற்ற தென்னை மரங்கள் மண்ணில் சாய்ந்ததை மறக்க வேண்டாம். காப்பீடு செய்வது ஒரு பாதுகாப்பிற்காகத் தான். ஏனெனில் மாறி வரும் காலநிலையால் எப்போது புயல் வரும்; வெள்ளம் வரும் என்றே சொல்ல முடியாது. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயப் பயிர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. ஆகையால் அனைத்துப் பயிர்களுக்கும் காப்பீடு செய்வது அவசியமாகிறது. குட்டை, நெட்டை மற்றும் ஒட்டு ரகத் தென்னை மரங்கள் அனைத்திற்கும் காப்பீடு செய்து கொள்ள தமிழ்நாடு அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தகுதிகள்:
தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 தென்னை மரங்களையாவது விவசாயிகள் வளர்த்திருக்க வேண்டும். நெட்டை ரகத் தென்னை மரங்களை 7 முதல் 60 ஆண்டுகள் வரையிலும், குட்டை மற்றும் ஒட்டு ரகத் தென்னை மரங்களை 4 முதல் 50 ஆண்டுகள் வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரீமியம்:
4 முதல் 15 வயதுள்ள தென்னை மரங்களில், மரம் ஒன்றுக்கு காப்பீட்டு பிரீமியமாக ரூ.2.25 செலுத்த வேண்டும். 16 முதல் 60 வயதுள்ள தென்னை மரங்களில், மரம் ஒன்றுக்கு காப்பீட்டு பிரீமியமாக ரூ.3.50 செலுத்த வேண்டும். இதில் கூடுதல் அம்சமாக விவசாயிகள் செலுத்தும் தொகையில் 50% மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது.
தென்னை மரக் காப்பீட்டுத் திட்டமானது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தென்னை விவசாயிகளுக்கும் கிடைக்கிறது. இடம் மற்றும் தென்னந்தோப்பின் அளவைப் பொறுத்து, இத்திட்டத்தின் பலன்களை விவசாயிகள் பெறலாம்.
புயல், வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், தென்னை மரக் காப்பீடு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இத்திட்டத்தின் படி ஒரு தென்னை மரத்திற்கு ரூ.10,000 வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். எதிர்பாராத சூழ்நிலைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கி ஆதரவு அளிக்கிறது இந்தத் திட்டம்.