துபாயில் நடந்து வரும் 28 வது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில், தீவு நாடான பார்படாஸ் தங்களின் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
தீவு நாடான பார்படாஸ், கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் நாடாகும். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த நாடு அதிகம் பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர்கள் பல புதிய முன்னேற்பாடுகளை எடுத்து வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் சுற்றுச்சூழலை காப்பதற்காக அவர்களின் அர்ப்பணிப்பின் சான்றாக விளங்குகிறது.
நாட்டில் மிகப்பெரிய சவாலாக விளங்கிவரும் நீர் பாதுகாப்பு மிக முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அதற்கான நிரந்தர தீர்வைப் பெற பார்படாஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக “ரூப்ஸ் 2 ரீப்ஸ்” என்ற திட்டம் மூலமாக தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் முழு நாட்டையும் பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அடுத்த பத்து ஆண்டுக்கான நாட்டின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயற்கையை முன்னிலைப்படுத்தி வைக்கும் மேம்பாடுகள் குறித்த மாதிரியாகும். இத்தகைய வளர்ச்சிக் கொள்கையை ஒருங்கிணைப்பது மூலமாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, அதை குறைப்பதற்கான இலக்குகளை நாம் அடைய முடியும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
பார்படாஸ் பெவிலியன் என்ற சிறிய நாடு இத்தகைய முன்னேற்பாடு பற்றி COP28 மாநாட்டில் பேசியது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அவர்களின் எதிர்கால திட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர்களைப் போலவே உலக நாடுகளும் பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மக்கள் தப்பிக்கலாம்.
பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை நாம் புரிந்து கொண்டு, அதற்கான செயல்களில் இப்போதிலிருந்தே இறங்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.