

நாம் உட்கொள்ளும் அன்றாட உணவுகளில் சாதாரண ரசம் முதல் பிரியாணி வகைகள் வரையிலான பல உணவுகள் மற்றும் சட்னி சாலட் போன்றவற்றிற்கு சுவையும் மணமும் கூட்ட உதவுவது ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள்.
இதை நாம் எவ்வாறெல்லாம் எளிய முறையில் வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம் என்பதை இப் பதிவில் பார்க்கலாம்.
கொத்தமல்லி விதைகளை தொட்டியில் உள்ள மண்ணில் தூவி நீரூற்றி வைத்தால் சில தினங்களில் அது முளைத்து வளர ஆரம்பித்துவிடும்.
கடையிலிருந்து வாங்கி வரும் கொத்தமல்லிக் கட்டுகளில் ஒன்றிரண்டு நீண்ட வேருடன் வைத்துக் கட்டப்பட்டிருக்கும். அதைத் தனியே எடுத்து இலைகள் உள்ள தண்டினை உபயோகித்துவிட்டு வேர்ப்பகுதியை மண்ணில் புதைத்து தேவையான தண்ணீர் ஊற்றி வந்தால் சில தினங்களில் பக்கவாட்டிலிருந்து முளைகள் தோன்றி புதிய இலைகள் வளர ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி செடி, சிறந்த முறையில் கவனிக்கப்பட்டு வந்தால், குறைந்த இடத்திலேயே நன்கு செழித்து வளர ஆரம்பித்துவிடும்.
இந்த செடியை வீட்டில் வளர்க்க விரும்புபவர்கள் முதலில் விதைகள் விதைத்து வளர்ப்பதா அல்லது கடையில் வாங்கும் செடியின் வேர்ப் பகுதியை நட்டு வைத்து வளர்ப்பதா என்பதை முடிவு பண்ணிக்கொள்ள வேண்டும்.
பொதுவாக பலரும் விதைகளை விதைத்து வளர்ப்பதையே விரும்புவர். ஏனெனில் விதையிலிருந்து வரும் செடியின் இலைகளே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். வேர்களை நட்டு வைக்கும்போது, அவை விரைவிலேயே முளை விட்டு கிளை விட்டு பலன் தர ஆரம்பித்துவிடும்.
சிறிய தொட்டி அல்லது பிளான்ட்டர் அல்லது 15-20 சென்டிமீட்டர் ஆழமுள்ள குரோ பேக்களில் (grow bag) இச்செடியை வளர்க்கலாம். அதில் முதலில் மக்கிய உரம் அல்லது மண்புழு உரம் கலந்த சத்தான மண்ணை லூசாகப் போடவேண்டும்.
கன்டெய்னரின் அடிப் பகுதியில் சிறு சிறு துளைகள் இருப்பது அவசியம். அதிகப்படியான நீர் இதன் வழியே வெளியேறிவிடுவதால் செடியின் வேர்களை அழுகி விடாமல் பாதுகாக்க முடியும்.
நன்கு விளைந்து, காய்ந்து, உருண்டை வடிவில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டையிலும் முளைக்கும் திறன் கொண்ட இரண்டு விதைகள் அடங்கியிருப்பதால் அவற்றை கைகளால் லேசாக நசுக்கி இரண்டிரண்டாக உடையச் செய்ய வேண்டும். பின் அவற்றை மண் மீது பரவலாக விதைத்து, மேற்பரப்பை மண் அல்லது மக்கிய உரத்தை தூவி மூட வேண்டும்.
சரியான தட்பவெப்ப நிலையில் வைத்து தினமும் தேவையான அளவு நீர்தெளித்து சிறப்பாக பராமரித்து வந்தால் 7-14 நாட்களில் விதைகளிலிருந்து முளை தோன்றி வளர ஆரம்பிக்கும்.
கடையிலிருந்து வாங்கி வரும், வேருடன் கூடிய செடியை பிரித்தெடுத்து, வேர்ப் பகுதிக்கு மேல் சுமார் மூன்று அங்குல தண்டுகள் இருக்கும்படி வெட்டி, ஈரமான மண்ணில் நேரடியாக நட்டு வைத்து விடலாம்.
தண்டுப் பகுதி மண்ணிற்கு மேலாகவும், வேர்ப்பகுதி மண்ணுக்கடியில் புதைந்திருப்பதும் அவசியம். கன்டெய்னரை வெளிச்சமான இடத்தில் வைத்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வர வேண்டும். வேர் ஏற்கனவே உண்டாகி விட்டிருப்பதால் நான்கைந்து நாட்களிலேயே புதிய முளைகள் தோன்றி வளர ஆரம்பித்துவிடும்.
கொத்தமல்லி செடிகள் ஆரோக்கியமாக வளர தினமும் அவற்றிற்கு 4-6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்க வேண்டும். காலை நேர ஒளி உகந்தது.
இச்செடிகளுக்கு மண்ணின் ஈரத் தன்மையே போதுமானது. அதிகளவு நீர் ஊற்றி மண்ணை 'சொத சொத' ன்னு வைத்தால் வேர் அழுகி செடி இறந்து போகும் வாய்ப்பு உண்டாகும்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை சாண உரம், மண்புழு உரம், மக்கிய உரம் போன்ற ஆர்கானிக் உரங்களை சுழற்சி முறையில் சேர்த்து வந்தால் செடிகள் அடர்த்தியாகவும் பச்சைப் பசேலென்றும் வளரும். மண்ணின் தன்மையும் வளம் குன்றாமல் பாதுகாக்கப்படும்.
செடிகள் செழிப்பாக வளர ஆரம்பித்து இலைகளின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் அவற்றை பறித்து சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதுப் புது இலைகள் தோன்றவும், செடி நீண்ட நாட்கள் பலன் தரவும் வாய்ப்பு உருவாகும்.
எங்க பாட்டி கொத்தமல்லி செடியின் ஒரு இலையைக் கூட வீணாக்காமல் சேகரித்து சமையலில் சேர்த்து விடுவது வழக்கம். அந்த அளவுக்கு அதில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன!நீங்களும் இம் முறைகளைப் பின்பற்றி கொத்த மல்லி செடிகளை வீட்டிலேயே வளர்த்து நற்பலன் பெறலாம்.