

இந்தியா நதிக்கரை நாகரிகத்தின் தொட்டிலாக இருக்கிறது. இந்திய நதிக்கரைகளில்தான் உலகின் உயரிய கலாச்சாரம் தோன்றியது. இங்கு 12 பெரிய நதிநீர்ப் படுகைகளும் ஏராளமான ஆறுகளும் பாய்ந்து நாட்டை செழிப்புடன் வைத்திருக்கின்றன. இந்திய ஆறுகளில் நன்னீர் முதலைகள் அங்காங்கே வசித்து வருகின்றன , இவை ஆட்கொல்லி விலங்காக இருந்தாலும் நதியின் தூய்மையை பராமரிக்கும் துப்புரவாளராகவும் , நதியின் இயற்கை சமநிலையை சீராக வைத்திருக்கும் இயற்கை சுற்றுச்சூழல் பராமரிப்பாளராகவும் இருக்கிறது.
பொதுவாக முதலைகள் அனைத்து ஆறுகளிலும் வசிப்பது இல்லை. அவை ஆறுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வசிக்கின்றன. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட நதிகளில் முதலைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வசிக்கின்றன. இந்தியாவில் பொதுவாக மூன்று வகையான முதலைகள் காணப்படுகின்றன. சம்பல் நதிக்கரை ஓரங்களில் கரியால் வகை முதலைகள் ஏராளமாக வாழ்கின்றன. ஒடிசாவில் உள்ள பிராமணி மற்றும் பைதரணி நதிகளில் உவர்நீர் முதலைகள் மிகுதியாக வசிக்கின்றன.
இது மட்டுமல்லாமல் கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவேரி ஆகிய நதிகளும் முதலைகளுக்கு முக்கிய வசிப்பிடமாக இருக்கின்றன. மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் கங்கை நதி படுகையில் முதலைகள் வசிக்கின்றன. எத்தனை நதிகளில் முதலைகள் வசித்தாலும் முதலைகளின் சொர்க்க பூமி என்ற சிறப்பை விஸ்வாமித்திரி நதி மட்டுமே பெற்றுள்ளது.
ஹிந்து புராணங்களில் மிகவும் உயர்வாக ராஜரிஷி என்று புகழப்படும் விசுவாமித்திர முனிவர் இந்த நதிக்கரையில் தவம் இருந்ததால் , நதிக்கு அவரது பெயர் வந்தது. குஜராத் மாநிலத்தில் உள்ள பஞ்சமஹால் மாவட்டத்தில் பாவக்கட் மலைகளில் உருவாகும் ஒரு பருவ கால நதிதான் விஸ்வாமித்திரி நதியாகும். இந்த நதி குஜராத் மாநிலத்தின் பெரிய நகரமான வதோராவின் வழியாக அரபிக்கடல் நோக்கி செல்கிறது.
இந்த நதியானது மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல் குஜராத் மாநிலத்திற்கு உள்ளேயே பயணித்து இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. இந்த நதியில் முகர் எனப்படும் முதலைகள் ஏராளமாக வசிக்கின்றன. விஸ்வாமித்ரி நதி வதோராவில் பாயும் இடங்களில் 300க்கும் மேற்பட்ட முகர் முதலைகள் வசிக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு நகர் புறத்தில் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் முதலில் வசிப்பது இந்த பகுதியில்தான். மேலும் ஒரு மாநகரத்தில் அதிக அளவில் ஆபத்தான ஊர்வன வசிப்பதும் இந்த நதியில்தான். இது மட்டுமல்லாது இந்த நதி பாயும் பல்வேறு இடங்களிலும் முதலைகள் வளமாக வாழ்கின்றன. வதோதரா நகர மக்கள் முதலைகளை ஆட்கொல்லியாக பார்க்காமல், அவற்றை இயற்கையின் பாதுகாவலர்களாக கருதுகின்றனர்.
இப்பகுதியில் கனமழையோ வெள்ளமோ ஏற்படும் போது முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவது இங்கு இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த நதியில் சிறிய வகை பாலூட்டிகள் , பறவைகள், ஆமைகள் உள்ளிட்ட சிறிய ரக உயிரினங்கள் வசிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி விஸ்வாமித்ரி நதியில் சுமார் 442 முதலைகள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கை விட தற்போது 60% முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நதியில் தாராளமாக மீன்கள் கிடைப்பது முதலைகள் ஏராளமாக வசிக்க காரணமாகின்றன. இது மட்டுமல்லாமல் கரையோரங்களில் வசிக்கும் தெரு நாய்களையும் பன்றிகளையும் முதலைகள் வேட்டையாடுகின்றன.
இந்த நதி கழிவு நீரினால் முழுவதும் மாசுபாட்டு இருப்பதால் மனிதர்கள் இந்த நதியை பயன்படுத்துவது இல்லை. அதனால் முதலைகள் மனிதர்களை தாக்கும் அபாயங்கள் சற்று குறைவாகவே இருக்கின்றன.