கரடிகளுக்கு அளிக்கப்படும் கொடுமை! இப்படியெல்லாமா நடக்குது?

Bile Bears
Bile Bears
Published on

பித்தநீர்க் கரடிகள் (Bile Bears or Battery Bears) என்பது, கரடிகளின் உடலில் சுரக்கும் பித்த நீரினை அறுவடை செய்வதற்காக மனிதர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் கரடிகள் ஆகும். கேட்கவே கொடூரமாக உள்ளது அல்லவா? கல்லீரலால் உற்பத்தி செய்யப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும் செரிமான திரவமான இந்தப் பித்த நீரானது, சில மரபு வழி ஆசிய மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

இதற்காகவே சீனா, தென் கொரியா, லாவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் 12,000 கரடிகள் வரை வளர்க்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கரடிகளின் பித்தநீருக்கான தேவை முன்பு சொல்லப்பட்ட நாடுகளில் மட்டுமல்லாது மலேசியா, ஜப்பான் போன்ற சில நாடுகளிலும் காணப்படுகிறது.

பித்தநீருக்காகப் பொதுவாக வளர்க்கப்படும் கரடி இனம், ஆசியக் கறுப்புக் கரடி (Ursus Thibetanus) இனமாகும். இவ்வினம் மட்டுமின்றி, தற்போது சூரியக் கரடி (Helarctos Malayanus), பழுப்புக் கரடி (Ursus Arctos) உட்பட அனைத்துக் கரடி இனங்களும் பித்தநீர் அறுவடைக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இராட்சதப் பாண்டா இனக் கரடிகள் அர்ஸோடியாக்ஸிகோலிக் அமிலத்தினைச் (UDCA) சுரக்காத காரணத்தால், அவை பித்த நீருக்காக வளர்க்கப்படுவதில்லை. 

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தப்பட்ட விலங்குகளின் சிவப்புப் பட்டியலில் ஆசியக் கறுப்புக் கரடி, சூரிய கரடி ஆகிய இரண்டு இனங்களும், அருகிவிடும் அபாயமுள்ள அழிவாய்ப்பு இனம் என பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்பு பித்தநீருக்காக வேட்டையாடப்பட்டு வந்த இவ்வினங்கள் 1980 ஆம் ஆண்டுகளில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டதிலிருந்து தொழிற்முறைப் பண்ணைகளாக (Factory Farming) வளர்க்கப்படத் துவங்கின. 

கரடிகளின் பித்தநீரானது பல நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்யப்படுகிறது. ஏதோ ஒருவகையான அறுவை சிகிச்சை முறையும், அதன் பின்னர் செருகப்படும் வடிகுழாயும் இவ்வனைத்து நுட்பங்களுக்கும் பொதுவான ஒன்று. இவற்றில் கணிசமான அளவு கரடிகள் பிழைபட்ட அறுவை சிகிச்சை முறைகளாலும், அதோடு கூட கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையினால் ஏற்படும் மன அழுத்தத்தினாலும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகள் காரணமாகவும் இறந்து போய் விடுகின்றன.

வளர்க்கப்படும் பித்தநீர்க் கரடிகள் சிறிய கூண்டுகளில் தொடர்ந்து அடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, அவை பெரும்பாலும் நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் அமர்ந்த நிலையிலிருந்து திரும்பவும் இயலாது தடுக்கப்படுகின்றன. கூண்டுக்குள் அடைக்கப்பட்டு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இந்த வாழும் சூழ்நிலைகளிலும் இயல்புக்கு மாறான பிழைபட்ட வளர்ப்பு நிலைகளாலும் அழுத்தப்படும் இக்கரடிகள் உடற்காயங்கள், வலி, கடுமையான மன உளைச்சல், தசைச் சிதைவு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் கேடு நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றன. இவற்றில் பல கரடிகள் குட்டிகளாகப் பிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் வரை இந்த கடுமையான அவலநிலையில் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
BMW காரை விட விலை உயர்வான மான் கொம்பு வண்டு!
Bile Bears

உலகச் சந்தையில் கரடித் தயாரிப்புகளின் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பித்தநீருக்காகக் கரடிகளை வளர்க்கும் தொழிற்முறைப் பண்ணைச் செயற்பாடுகள் விலங்கியல் ஆர்வலர்களால் கண்டிக்கப்படுகின்றன. இருப்பினும், பித்தநீருக்காக வளர்க்கப்படும் கரடிகளை மீட்டெடுக்க முடியவில்லை. 

விலங்குகள் ஆசியா (Animals Asia) எனும் விலங்குகளுக்கான பாதுகாப்பு அமைப்பு, பித்தநீர்க் கரடிகளை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, ஆசியாவில் உள்ள அனைத்து கரடி பித்த விவசாயத்திற்கும் முடிவுகட்ட பல்வேறு பரப்புரைகளைச் செய்து வருகிறது. 

இந்த அமைப்பினால், பித்தப் பண்ணைகளில் இருந்து மீட்கப்பட்ட கரடிகள் காடுகளுக்குள் சென்று விடப்படுவதில்லை. பித்த நீர்ப் பண்ணைகளில் சிறைப்படுத்தப்பட்டிருந்த கரடிகளால் காடுகளில் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதால், அவைகளைப் பராமரிக்க சீனாவில் ஒன்று, வியட்நாமில் ஒன்று என்று இரண்டு உலகத் தரம் வாய்ந்த சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இச்சரணாலயங்களில் கரடிகள் இயற்கையான சூழலில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

கரடிகளுக்கு அளிக்கப்படும் இந்த கொடுமை ஒரு முடிவுக்கு வருமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com