
கொரில்லா என்பது குரங்கு இனத்தைச் சேர்ந்த, பெரிய உருவம் கொண்ட ஒரு வகை விலங்கு. இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலக் காடுகளை பிறப்பிடமாகக் கொண்டது. தற்போது வாழும் கொரில்லாக்களில் மிக அதிக வயதுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கொரில்லா, பெர்லின் மிருகக்காட்சி சாலையில் உள்ளது. இதன் வயது 68. பெயர் ஃபட்டோ (Fatou). இது ஒரு பெண் கொரில்லா. இந்த கொரில்லா பற்றின விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1959ம் வருடம், மே மாதம் ஃபட்டோவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அது பெர்லினுக்கு கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து பெர்லினில் தங்கி தனது இனிமையான வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவளின் 67வது பிறந்த நாளை, கண்காட்சிசாலை ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். அப்போது ஒரு கூடை நிறைய ஃபிரஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை அவளுக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்துள்ளனர். அதிலுள்ள உண்ணக்கூடிய பூ வகைகளை ஃபட்டோ விரும்பி உட்கொண்டதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவள் உட்கொள்ளும் உணவுகளில் காய்கறி வகைகளே முதலிடம் பெற்றிருக்கும். வயதிற்கு ஏற்ற வகையில் சில மென்மையான உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்வதும் உண்டு. பற்களில் சில, மூப்பின் காரணமாக விழுந்துவிட்டிருக்கின்றன. சுலபமாக மென்று விழுங்கும்படியானதும், உடல் நலத்திற்கு ஏற்றபடியாக உள்ளதுமான, மிருதுவான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து, பட்டியலிட்டு, அதன் பிரகாரம் அவற்றை ஃபட்டோவுக்கு வழங்கி வருவதை ஊழியர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இத்தனை வயதான காலத்திலும், கயிற்றைப் பிடித்துக்கொண்டு சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடனும் மேலே ஏறுவது போன்ற செயல்பாடுகளை விரும்பிச் செய்து கொண்டிருப்பாள். இவளுக்குப் பிடித்தமான உணவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது இவளின் மற்றொரு ஆர்வமான செயல்.
அநேக நேரங்களில் இவள் ஒரு தனிமை விரும்பியாக இருந்தபோதிலும், சில நேரங்களில் மற்ற கொரில்லாக்களுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பதும் உண்டு. இவளின் இருப்பிடத்திற்கு அடுத்த இடமான, சில்வர் பேக் சாங்கோ (Silverback Sango)வில் உள்ள பென்சி (Mpenzi), பிபி (Bibi), ஜாம்பலா (Djambala) மற்றும் லிட்டில் டில்லா ஆகிய பெயர்களைக் கொண்ட கொரில்லாக்கள் இவளுடன் நட்புடன் பழகுபவை.
உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட, முக்கியமானதொரு மேற்கத்திய தாழ்நிலக் காட்டுப் பகுதியைச் சேர்ந்தது ஃபட்டோ. இவள் சார்ந்த இனத்துக் கொரில்லாக்கள் தற்போது அழிவின் விளிம்பிலிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தன் இனத்தின் உண்மையான பிம்பமாகத் திகழ்ந்து வரும் ஃபட்டோ, தனது வயதுக்கு மீறிய ஆரோக்கியம் மற்றும் அமைதியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி!