
ஆறுகளைத் தெய்வங்களாக வணங்கி வழிபடுவது நம் இந்தியக் கலாச்சாரம்!
ஆற்றுக் கரைகளில்தான் நாகரீகம் வளர்ந்ததாகக் கூறுகிறது வரலாறு!
ஆறுகளைத் தாயாய் மதித்து சடங்குகள் செய்வது நமது மரபு!
காவிரியையும், கங்கையையும் தாய் என்றே அழைக்கிறோம்!
முக்கியத் தினங்களில் ஆற்றுக் கரைகளில் கூடி அனைவருடனும் அளவளாவி மகிழ்வது நம் வாடிக்கை!
காவிரியும் வைகையும் தாமிரபரணியும் நமது தமிழ் மண்ணின் பெரும் அடையாளங்கள். அவற்றோடு சேர்ந்து அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த துணை ஆறுகளும் பிரபலம். டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் என்று ஏகப்பட்டவை உண்டு.
ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதும், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு, விவசாயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு பௌர்ணமி தினத்தில் இரவு 10 மணிக்குமேல் தெளிவான வானமும் இருக்கின்ற நேரத்தில் வயல் வெளிக்குச் சென்றால் அங்குள்ள அனைத்து வயல்களின் நீரிலும் நிலவு முகம் பார்ப்பதைக் காண கண் கோடி வேண்டும்.
அந்த அழகுக்கு இணையான ஒன்றைப் பார்ப்பது அரிது! இந்த ஜாலத்தையெல்லாம் செய்ய உதவுபவை ஆறுகள்தான்!
ஆடி மாதம் தொடங்கியதுமே புதுமணத் தம்பதிகள் ஆடிப்பெருக்கைக் கொண்டாடத் தயாராகி விடுவார்கள். தங்கள் மணமாலைகளை ஆற்று நீரில் ஓட விடுவார்கள்!அதற்கான சடங்கை உறவினர்களுடன் உற்சாகமாக மேற்கொள்வார்கள்.
பாவங்களைப் போக்கும் பரிகாரங்களாக, அக்காலம் தொடங்கி இக்காலம் வரை நடைமுறையில் இருப்பது, முழுக்குகள்தான்! ஐப்பசி, கார்த்திகையில் அடாத மழை பெய்கின்ற போதும், அந்த மழையில் நனைந்தபடியே எனது தாயார் முழுகி வந்து, ஈரம் சொட்டச் சொட்ட நின்ற உருவை எனது மனது படம் பிடித்து, பர்மணன்டாக ‘சேவ்’ செய்து வைத்துள்ளது. ஒரு வேளை எதிர்காலத்தில், மனதில் பசுமையாகப் படிந்து போனவற்றைப் புகைப் படங்களாக்கும் ‘ஏஐ’ நுணுக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு வேளை வந்தால், நல்லதும் நடக்கலாம்! பல கெட்டதுகளும் நடக்கலாம்!ஏனெனில் பல பேர் மனங்களில் பழி வாங்கும் எண்ணங்களும், அதற்கான ஆயத்தங்களும் திரைப்படமாக உள்ளே ஓடிக்கொண்டே இருக்கலாம் அல்லவா?
ஆறுகள் தாங்கள் மட்டும் அழகானவையல்ல! அழகைத் தோற்றுவிக்கும் அற்புதச் சாதனங்கள் அவைதான்!அவற்றின் இரு கரைகளிலும் அழகுத் தேவதை எப்பொழுதும் டேரா போடத் தவறுவதில்லை!
சரி! தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் இருக்கின்றன/இருந்தன என்று பார்த்தோமானால், 125 க்கும் மேற்பட்ட ஆறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது! நல்ல நீர் ஓடிய அவற்றில் பல, நம் கூவம் ஆறு போல கழிவுகள் கலந்து சாக்கடைகளாக மாறி விட்டன! இருந்தாலும் அவையும் மழை நேரங்களில் வடிகால்களாகப் பயன்பட்டுத்தான் வருகின்றன!
மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனம் 125 ஆறுகளின் பெயரைப் பாட்டாய் வடித்து, பாடியே காட்டுகிறார்கள்!அத்தனை ஆறுகளும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு இருந்தால் தமிழ்நாட்டின் நீர்வளம் எங்கேயோ போயிருக்கும்! ’கங்கை-காவிரியை இணைக்க வேண்டும்; அட்லீஸ்ட் தமிழ்நாட்டிற்குள் ஓடுகின்ற சிலவற்றையாவது இணைக்க வேண்டும்!’ என்ற குரல்களெல்லாம் ஒலித்திருக்காது! என்ன செய்வது? வருமுன் காப்பதை உலகுக்கு உணர்த்திய நம் தமிழ்ச் சமுதாயத்தால் சொந்த மண்ணில் அதைக் காப்பாற்ற முடியாமல் போனதுதான் வேதனை!
அவர்களால் சொல்லப்படுகின்ற சில ஆறுகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன! முழுமையாகக் கொடுக்காததற்கு ஒரு காரணமும் உண்டு! நடிகர் வடிவேலுவின் வாய் முகூர்த்தமோ என்னவோ, முதலில் சிரிப்புக்காக அவர் கிணற்றைக் காணும் என்று புகார் செய்ய, அதனைத் தொடர்ந்து உண்மையிலேயே
கிணற்றைக் காணோம்!
பாதையைக் காணோம்!
தெருவைக் காணோம்!
ஊரையே காணோம்!
என்றெல்லாம் வழக்குகள் போட ஆரம்பித்து விட்டார்கள்!நாம் முழு லிஸ்டையும் கொடுக்கப்போய் ஆங்காங்கே ஆறுகளைக் காணவில்லை என்று கேஸ்கள் வந்தால், ஏற்கெனவே எண்ணிலடங்கா வழக்குகளால் திணறிக் கொண்டிருக்கும் நீதித்துறை சிரமப்படுமல்லவா?
அட்டாறு,
அடப்பாறு,
அக்கினியாறு,
அரசலாறு,
ஐயாறு,
பாம்பாறு,
கொட்டாறு,
நெய்யாறு,
உப்பாறு,
நாட்டாறு,
நந்தியாறு,
வெள்ளாறு என்றும்,
காவிரி,
அமராவதி,
கோமுகி என்று பெண்கள் பெயராலும்,
நல்காஞ்சி,
வஞ்சி என்று ஊர்கள் பெயராலும்,
ராம நதி,
அனும நதி என்று தெய்வங்களின் பெயராலும்
திருமலைராஜன் போன்று வரலாற்று நாயகர்கள் பெயராலும் ஆறுகள் அழைக்கப்படுகின்றன!