
இயற்கையாக உருவான ஒரு நீரோடை தான் ஆறுகள். பொதுவாக ஆறுகள் மலைப் பிரதேசங்களில் இருந்து உருவாகிறது. மனித வாழ்வும் ஆறுகளும் பின்னிப் பினைந்தவை. மனித இனம் தோன்றியதே ஆறுகளின் கரையோரம் தான் என்பது வரலாற்று உண்மை. ஆதிகாலம் முதலே ஆற்றுக்கரையில் மனிதனின் நாகரீகம் வளர்ந்துள்ளது. பூமியில் 165 பெரிய ஆறுகள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
உலகின் நீளமான ஆறு நைல் நதி. அதாவது 6,650 கி.மீ. நீளம் (4132 மைல்) கொண்டது . மிக நீளமான இந்த நைல் நதி 11 நாடுகளை கடந்து செல்கிறது . இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது. நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் பண்டைய கால குடி ஏற்றங்கள் நைல் நதிக்கரையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள அனைத்து நதிகளும் நிலநடுக்கோட்டை நோக்கி பாயும் போது நைல் நதி மட்டுமே நிலநடுக்கோட்டிற்கு எதிர் திசையில் பாய்கிறது.
அமேசான் ஆறு தென் அமெரிக்காவில் அமேசான் காடுகள் வழியாக பாய்கின்றன. உலகின் 2-வது மிக நீளமான ஆறு ஆகும். 6400 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய ஆறு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஆற்றுபடுகை கொண்டது. இதில் 1100 கிளை ஆறுகள் கலக்கின்றன. அவற்றில் 10 ஆறுகள் உலகின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இதன் அகலம் 2 கிமீ. மழை காலத்தில் சில இடங்களில் 6 கிமீ வரை இருக்கும். சாதாரணமாக கண் இமைக்கும் நேரத்தில் 70 கியூபிக் தண்ணீர் இதில் ஓடுகிறது. இது மழைக்காடுகள் நதி என்று அழைக்கப்படுகிறது. உலகின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. உலகிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கு வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும். 9 நாடுகளை கடந்து செல்லும் இந்த ஆற்றின் குறுக்கே எந்த பாலமும் கிடையாது என்பது தெரியுமா?
யாங்சி ஆறு உலகின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும். இது சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆறு. 6,300 கி.மீ. நீளம் கொண்டது. சீன நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளப்படுத்துகிறது. இந்த ஆற்றுக்கு 'மஞ்சள் ஆறு' என்ற பெயரும் உண்டு காரணம் இது பாயன்ஹர் மலைத் தொடரில் தோன்றி அப் பகுதி மண் வளத்தால் மஞ்சள் நிறத்தை பெறுகிறது. சீனாவின் 9 மாகாணங்கள் வழியாக பயணிக்கும் இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இதை 'சீனாவின் துயரம்' என்றும் அழைப்பர். கடல் மட்டத்தில் இருந்து 5,170 மீ உயரமாக உள்ள இது ஆசிய கண்டத்தில் உள்ள ஆறுகளில் மிக நீளமான ஆறு.
மிசிசிப்பி இது 6,275 கி.மீ. கொண்ட உலகின் நான்காவது பெரிய ஆறு ஆகும். இது வட அமெரிக்காவில் உள்ள நீண்ட பெரிய ஆறாகும். இடடாஸ்கா ஏரியில் உற்பத்தியாகி மிசூரி நதியுடன் சேர்ந்து 31 அமெரிக்க மாநிலங்களின் வழியாக பயணிக்கிறது. பல வளைவுகள் கொண்ட ஆறு என்பது இதன் சிறப்பு. மிசிசிப்பி ஆற்றில் ஏராளமான விஷப் பாம்புகள் மற்றும் மீன்கள் உள்ளன எனவே இதில் நீச்சலடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ஓடும் காங்கோ ஆறு தான் உலகின் மிக ஆழமான ஆறு என்று பெயர் பெற்றது. இதை 'ஜைரி' ஆறு என்றும் அழைக்கிறார்கள். இதன் அதிகப்பட்ச ஆழம் 720 அடி. இதன் நீளம் 4,700 கிமீ. இது நைல் நதிக்கு அடுத்து ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய நதியாக உள்ளது.
தென் அமெரிக்காவின் நுழைவு வாயிலில் உள்ள நாடு கொலம்பியா. இங்கு பாயும் 'கேனோ கிரிஸ்டல்' என்ற நதி வண்ணமயமாக காட்சியளிக்கிறது. சுத்தமான தண்ணீர் தான் என்றாலும் நதியின் வழித்தடத்தில் வளர்ந்திருக்கும் வண்ணமயமான பாசிகள் காரணமாக நதி வண்ணமயமாக காட்சியளிக்கிறது. 120 கோடி பழமையான பாறைகள் மீது பாயும் இந்த நதியை ஓடும் போது பார்த்தால் ஒரு வானவில் நீரில் இருப்பது போல இருக்குமாம். மனிதர்கள் தன் வாழ்நாளில் பார்க்க வேண்டிய 100 இடங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் புவியியல் ஆய்வு வல்லுனர்கள்.
அமெரிக்காவின் ஓரிகான் நகரில் ஓடும் 'ரோ' எனும் ஆறு தான் உலகின் மிகச் சிறிய நதி இதன் நீளம் 61 மீட்டர். இதே நகரில் 134 மீட்டர் நீளத்தில் மற்றொரு நதி ஓடுகிறது அதன் பெயர் 'டி'.
உலகில் உள்ள அனைத்து நதிகளும் குறிப்பிட்ட ஒரு திசையில் தான் ஓடும். சில நேரத்தில் தடம் மாறும். ஆனால் கம்போடியாவில் மட்டும் அதிசயமாக ஒரு நதி வருடத்தின் 6 மாதம் வடக்கு நோக்கி ஓடும். (ஜூன் முதல் நவம்பர் வரை), அடுத்த 6 மாதம் (ஜனவரி முதல் ஜூன் வரை) அதே நதி தெற்கு நோக்கி ஓடும். இந்த அதிசய நதியின் பெயர் 'டோன் லே சாப்' நதி . இந்த அதிசய நதியை கம்போடியாவில் மட்டுமே காண முடியும்.
பெரு நாட்டில் ஓடும் ஆறு 'ஷனாய் திம்பிஷ்கா' இதனை கொதிக்கும் ஆறு என்கிறார்கள். 641 கிமீ பயணிக்கும் இந்த ஆற்றின் மேற்பரப்பில் எப்போதும் 45 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் இருப்பதே இதற்குக் காரணம். இந்த வெப்பம் சில நேரங்களில் 100டிகிரி சென்டி கிரேடு தொடுமாம்.