

வீட்டுத் தொட்டியில் ஆசையாக வளர்க்கும் கருவேப்பிலை செடியின் இலைகள் திடீரென மஞ்சள் நிறமாக மாறி கவலை அளிக்கிறதா? கவலை வேண்டாம்! சமையலறையின் மணமூட்டியான உங்கள் கருவேப்பிலைச் செடியை மீண்டும் எப்படிப் பசுமையாகவும் செழிப்பாகவும் மாற்றுவது என்பதை இந்தத் தொகுப்பில் முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.
இயற்கையான மணமும் சுவையும் நிறைந்த கருவேப்பிலை நம் சமையலறையின் இன்றியமையாத அங்கமாகும். உணவிற்கு நறுமணம் சேர்ப்பது மட்டுமின்றி, ஏராளமான மருத்துவக் குணங்களையும் உள்ளடக்கியது. பலரும் வீடுகளில் இதனைத் தொட்டிகளிலோ அல்லது Grow bag-களிலோ ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். ஆனால், தொட்டிகளில் வளர்க்கப்படும் கருவேப்பிலை செடிகளின் இலைகள் சில சமயங்களில் திடீரென மஞ்சளாக மாறுவதற்கான காரணங்களையும், செடியை மீண்டும் பசுமையாக மாற்றுவதற்கான வழிமுறைகளையும் இங்கே காண்போம்.
1. ஊட்டச்சத்து குறைபாடு: நிலத்தில் வளரும் செடிகள் நிலத்திலிருந்து தங்களுக்குத் தேவையான சத்துக்களை வேர்கள் மூலமாக எளிதில் பெற்றுக் கொள்ளும். ஆனால், தொட்டியில் உள்ள குறிப்பிட்ட அளவு மண்ணில் உள்ள சத்துக்கள் காலப்போக்கில் தீர்ந்துவிடும்.
காரணம்: குறிப்பாக தாவரங்களின் இலைகள் பச்சையாக இருக்கத் தேவையான நைட்ரஜன் மற்றும் இரும்புச்சத்து குறையும் போது, இலைகளின் நரம்புகள் பச்சையாகவும் மற்ற பகுதிகள் மஞ்சள் நிறமாகவும் மாறும்.
தீர்வு: மாதத்திற்கு ஒருமுறை தொட்டி மண்ணைக் கிளறிவிட்டு, மண்புழு உரம் (Vermicompost) அல்லது நன்கு மக்கிய தொழுஉரத்தை அளிக்க வேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறையைப் போக்கக் கடலைப் புண்ணாக்கு கரைசல் அல்லது மோர் மற்றும் இரும்புக்கம்பிகளைத் தண்ணீரில் ஊறவைத்த நீரைத் தெளிக்கலாம்.
2. அதிகப்படியான தண்ணீர் மற்றும் வடிகால் சிக்கல்: தண்ணீர் என்பது செடிகளுக்கு உயிர் என்றாலும், அதுவே அளவை மீறும்போது விஷமாக மாறிவிடும்.
காரணம்: தொட்டியில் தண்ணீர் தேங்கும் போது, வேர்களுக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபடுகிறது. இதனால் வேர்கள் அழுகத் தொடங்கும்.
வேர்கள் சேதமடைந்தால் செடியால் மண்ணிலிருந்து சத்துக்களையும் நீரையும் உறிஞ்ச முடியாது, இதன் விளைவாக இலைகள் மஞ்சள் நிறமாகி கொட்டத் தொடங்கும்.
தீர்வு: தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள வடிகால் துளைகள் சரியாகத் திறந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேல்மண் காய்ந்த பிறகு மட்டுமே அடுத்த முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
3. சூரிய ஒளி பற்றாக்குறை: கருவேப்பிலை ஒரு வெப்பமண்டலத் தாவரமாகும். இதற்கு ஒளிச்சேர்க்கை நடைபெறச் சூரிய ஒளி மிக அவசியமான ஒன்றாகும்.
காரணம்: போதிய அளவு சூரிய ஒளி படும் இடத்தில் செடி வைக்கப்படவில்லை என்றால் (குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் நேரடி வெயில்), இலைகள் குளோரோபிலை இழந்து வெளிறி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
தீர்வு: தொட்டியைச் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் திறந்த வெளி பால்கனி அல்லது மொட்டை மாடிப் பகுதிக்கு மாற்ற வேண்டும்.
4. வேர் வளர்ச்சிக்கு இடப்பற்றாக்குறை: செடி நன்றாக வளர்ந்து பெரியதாகிவிட்ட போதிலும், சிறிய தொட்டியிலேயே வைக்கப்பட்டிருக்கும் போது இந்த நிலை ஏற்படுகின்றது.
காரணம்: தொட்டிக்குள் வேர்கள் சுற்றி வளைந்து இடமில்லாமல் நெரிசலில் சிக்கிக் கொள்ளும். இதனால் வேர்களால் புதிய சத்துக்களை உறிஞ்ச முடியாது, செடியின் வளர்ச்சியும் நின்றுவிடும்; இலைகளும் மஞ்சள் நிறமாகும்.
தீர்வு: செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப சற்றே பெரிய தொட்டிக்கு அல்லது Grow bag-க்குச் செடியை மாற்ற வேண்டும்.
புதிய தொட்டியில் வைக்கும் போது புதிய மண், மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார் கழிவு கலவையைப் பயன்படுத்த வேண்டும்.
5. பூச்சி மற்றும்` பூஞ்சைத் தாக்குதல்: இலைகளை உறிஞ்சும் பூச்சிகள் கருவேப்பிலைச் செடியைத் தாக்குவதும் மஞ்சள் நிறத்திற்கு முக்கியக் காரணமாகும்.
காரணம்: செதில் பூச்சிகள் அல்லது மாவுப்பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு சாற்றை உறிஞ்சிவிடும். இதனால் இலைகள் உயிர் இழந்து மஞ்சள் நிறமாகி காய்ந்துவிடும்.
தீர்வு: வேப்ப எண்ணெய் மற்றும் சிறிதளவு காதி சோப்பு அல்லது ஷாம்பு கலந்த நீரைத் தயாரித்து, இலைகளின் மேல் மற்றும் அடிபாகத்தில் நன்றாகத் தெளிக்க வேண்டும். பூச்சிகள் அதிகமாக உள்ள இலைகளை உடனே கத்தரித்து அப்புறப்படுத்துவது நல்லது.
செடியின் தண்டு மற்றும் வேர்ப்பகுதி ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துவிட்டு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற எளிய தீர்வுகளைச் சரியாக மேற்கொண்டால், உங்கள் தொட்டியில் உள்ள கருவேப்பிலைச் செடி மீண்டும் செழித்து வளரும்; அடர்ந்த பச்சைக் இலைகளையும், நறுமணத்தையும் வழங்கும்.