இது சாதாரண வெயில் அல்ல... அமைதியாக உயிர் பறிக்கும் ‘வெப்ப அலை’!

இந்தியாவை சூழ்ந்த கடும் வெப்ப அலை: எல் நினோ, மழை தாமதம், 50,000 உயிர்களை பலித்த உலகச் சம்பவங்கள் எச்சரிக்கும் அபாயச் சிக்னல்கள்.
the-silent-killer
the-silent-killer
Updated on

கோடை காலத்தில் அனல் காற்று வீசும் என்பது தெரிந்தது தான்.என்றாலும் வெப்ப அலைகள் (Heat waves) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில், அந்த காலநிலைக்கு இயல்பான வெப்பநிலையைவிட, பல நாட்களுக்கு தொடர்ந்து அசாதாரணமான, கடுமையான வெப்பம் நிலவுவதைக் குறிக்கும். தமிழகத்தில் 106 டிகிரி வரை வெயில் அதிகரித்து, மே -ஜூன் மாதத்தில் வெப்ப அலை வீசும். இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

சம தளத்தில் ஒரு பகுதியில் 40 டிகிரி செல்ஸியஸ் (104 F ) வெப்பநிலையை தாண்டினாலோ அல்லது மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டினாலோ அதனால் உருவாகும் வெப்ப அலை அதாவது அனல் காற்று மிகவும் ஆபத்தனது என்கின்றது .தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)  (National Disaster management Authority).

2010 ம் ஆண்டு ரஷ்யாவில் வீசிய அனல் காற்று காரணமாக 50,000 பேர் மாண்டனர். இதுவே உலகில் இது வரை வெப்ப அலை காரணமாக இறந்தவர்களின் அதிக எண்ணிக்கை. 1896 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் அனல் காற்று வீசி அதன் காரணமாக 1500 பேர் இறந்தனர். இந்தியாவில் 2003 ம் ஆண்டு வீசிய அனல் காற்று காரணமாக 1900 பேர் இறந்தனர்.

இந்தியாவில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாக, மே 29, 2024 அன்று டெல்லியின் முங்கேஷ்பூர் பகுதியில்  52.9 டிகிரி செல்சியஸ் (127 .2F) வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது  உலகில் அதிக வெப்பம் பதிவாகும் முதல் 100 நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில் உள்ள நிலையில்,  உத்தரபிரதேசம் மாநிலத்தின் பாண்டா மாவட்டம் (Banda District)பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் காற்று தரக்குறியீடு தரவுகளின்படி இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதால் உலகளாவிய வெப்ப அலையின் மையப்பகுதியாக இந்தியா மாறியுள்ளது.

இந்த பட்டியலில் சிறு நகரங்கள் மட்டுமல்லாது முக்கிய பெருநகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி டெல்லி, உத்தரபிரதேசத்தின் பரிதாபாத், சண்டிகர், ஜம்மு, ஆக்ரா, அயோத்தி, குவாலியர், கோட்டா மற்றும் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால ஆரோக்கியம்: தவிர்க்க வேண்டியவை மற்றும் பின்பற்ற வேண்டியவை!
the-silent-killer

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பாண்டா மாவட்டம் கடந்த 18-5-26 அன்று இந்தியாவின் மிக வெப்பமான பகுதியாக உருவெடுத்தது. அங்கு பகல் நேர வெப்ப நிலை 47.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி, உலகின் மிக உயர்ந்த வெப்பநிலையை எட்டியுள்ளது. இந்த மாவட்டத்தில் கோடைக்கால வெப்பநிலை பொதுவாக 40 முதல் 48  டிகிரி செல்சியஸ் வரை மிகவும் அதிகமாக இருக்கும். தற்போதைய நாட்களில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு உலர்ந்த காற்று, மேகமின்மை, மழை இல்லாமை மற்றும் முன்-மழைக்கால செயல்பாடுகள் உள்ளிட்டவை காரணம் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் அதோடு, வெப்பம் சார்ந்த நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாம் இப்போது அனுபவிப்பது சாதாரண வெப்பமான காலநிலை அல்ல. இது அமைதியாக உயிர்களைப் பறிக்கக்கூடிய,  ‘எல் நினோ’ (El Niño) என்ற பேராபத்தின் வருகை. மே - ஜூன் மாதம்  இந்த நிலைமை மேலும் தீவிரமாகும். ‘எல் நினோ’ என்றால் என்ன? எளிதாகச் சொன்னால், பசிபிக் பெருங்கடலில் உள்ள நீர் அதிகமாக சூடாகிறது. இதனால் உலகம் முழுவதும் காற்றின் ஓட்டம் மாறுகிறது. நமக்கு மே மாதத்தில் மழையை கொண்டு வரவேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த முறை தாமதமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதாவது மழை பெய்ய வேண்டிய நேரத்தில் கடும் வெயில் மட்டுமே இருக்கும்.

 இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) காரணமாக ஆரோக்கியமாக இருப்பவர்களும் உயிரிழக்கலாம். ஆகவே, நமது உயிர்களை பாதுகாக்க உடனே கீழ்க்கண்டவற்றைச் செய்யவேண்டும்:

தாகம் வரும் வரை காத்திருக்கவேண்டாம் – அது ஆபத்து! தாகம் என்பது உடலில் ஏற்கனவே நீர் குறைந்ததற்கான அறிகுறி. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வையுங்கள். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் அருகில் வைத்திருங்கள்.

இதையும் படியுங்கள்:
வெப்ப அலை எச்சரிக்கை! இந்த 5 காய்கறிகளை கோடையில் சாப்பிடுவது ஆபத்தா?
the-silent-killer

மதியம் 11 மணி முதல் 3 மணி வரை மிகவும் ஆபத்தான நேரம். இந்த நேரத்தில் வெயில் நேரடியாக உடலைத்தாக்கும்.முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள் .பள்ளி விளையாட்டு நிகழ்ச்சிகள் இருந்தால் கவனமாக யோசிக்கவும் . கருப்பு நிற உடைகளைத் தவிர்க்கவும். அவை வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு போன்ற இலகு நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

கடுமையான தலைவலி, மயக்கம் ,வாந்தி, வியர்வை இல்லாமல் தோல் உலர்வு போன்ற இந்த அறிகுறிகள் இருந்தால்  அது ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) அறிகுறிகள். பாதிக்கப்பட்ட நபர்களை உடனே நிழலான இடத்துக்கு அழைத்து சென்று, ஈரமான துணியால் உடலை துடைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com