வெப்ப அலை எச்சரிக்கை! இந்த 5 காய்கறிகளை கோடையில் சாப்பிடுவது ஆபத்தா?

கடும் வெப்பத்தின் போது என்ன சாப்பிடக்கூடாது? உணவுமுறை மற்றும் ஆரோக்கியத்திற்கான செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை நிபுணர்களிடமிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Summer Diet Tips Tamil
Summer Diet Tips TamilAI Image
Updated on

எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. காரணம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தீவிர வெப்ப அலை உருவாகி இருப்பது தான். குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அழுத்தம் கொண்ட வறண்ட காற்று உருவாகி இருப்பதன் காரணமாக சுற்றுப்புற வெப்பநிலை 43 முல் 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப அலையாக கருதப்படுகிறது.

குறைந்த மழைப்பொழிவு, ஈரப்பதம் குறைவு, உயர் அழுத்தமான வானிலை மண்டலமும் இதற்கு ஒரு காரணம். இதன் தாக்கம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவிலும் வெப்பத்தை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

நகர மயமாக்கல் காரணமாக உருவாகும் கான்கிரீட் கட்டிடங்கள், அதிகரிக்கும் வாகன போக்குவரத்து குறைந்து வரும் மரங்கள் உள்ளிட்டவை மனிதர்களுக்கு கூடுதலாக வெப்பதை உணரச்செய்கிறது.

வெப்ப தாக்கத்தை குறைக்க நகரங்களில் குறிப்பிட்ட அளவில் அடர்த்தியான மரங்களை நடுதல், பூங்கா, பசுமை பகுதிகளை அதிகரித்தல், மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகள் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வெப்ப அலையிலிருந்து கண்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ்!
Summer Diet Tips Tamil

கோடை வெயிலில் உச்சக்கட்டத்தில் நமது உடல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்க போராடும். சில காய்கறிகள் வெப்பத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. எனவே வெப்ப அலை அதிகரிக்கும் போது, உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் மற்றும் நீர்ச்சத்தை (hydration) குறைக்கும் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். அதிக வெப்பம் தாக்கம் நிலவும் சமயங்களில் எந்தெந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி, பூண்டு இயற்கையாகவே அதிக வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால் கோடை காலத்தில் இவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இதிலிருக்கும் ஜிஞ்சரால், அலிசின் போன்ற சேர்மங்கள், ரத்த ஓட்டத்தை தூண்டி வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மைகொண்டவை. வெப்ப அலை சமயங்களில் இவற்றை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளும் போது அவை வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தி, நீரிழப்பை உண்டாக்கும். எனவே அளவோடு பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.

பச்சை மற்றும் சிவப்பு மிளகாய்களில் கேப்சைசின் உள்ளது. இது உடல் அதிக வெப்பமடைவதாக மூளையை நம்ப வைக்கக்கூடியது. கோடைகாலங்களில் சமையலில் அதிகப்படியான மிளகாய் சேர்த்து கொள்வது செரிமான பாதையின் உட்புற சுவரில் எரிச்சலை ஏற்படுத்தி வயிற்று பகுதிக்குள் வெப்பம் உருவாக்கும். இதனால் அசவுகரியம் மற்றும் நீண்டகால அசிடிட்டி பிரச்சனைகள் உண்டாகக்கூடும்.

கோடை காலத்தில் கீரைகளை குறைத்து கொண்டு அதற்கு பதிலாக நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் போன்ற காய்கறிகளை உட்கொள்வது சிறந்தது. ஏனெனில் சில சமயம் கடுகு கீரைகள் இயற்கையாகவே காரமாகவும், உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளன. செரிமான அமைப்பு அதிகம் வேலை செய்யாமல் இருக்க சில கீரை வகைகளை குறைத்து கொள்வது நல்லது.

வெங்காயம் குளிர்ச்சிக்கு உதவும் என்றாலும் அதில் இருக்கும் கந்தகம் உடலுக்குள் அதிக வெப்பத்தை உண்டாக்கும். வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். எனவே வெயில் காலத்தில் வெங்காயத்தை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது.

கோடை காலத்தில் அனைவருக்கும் செரிமான செயல்திறன் இயற்கையாகவே குறைவாக இருக்கும். இந்த சமயத்தில் சேனைக்கிழங்கு போன்ற கனமான, மாவுச்சத்து நிறைந்த வேர்க்காய்கறிகளை உடல் செரிப்பது கடினம். பெரும்பாலும் மந்தநிலை மற்றும் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை.

கேரட் மற்றும் முள்ளங்கிகள் அடிப்படையில் குளிர்கால பயிர்களாகும். இவற்றில் கோடைக்கால காய்கறிகளை போன்று அதிக நீர்ச்சத்து இருப்பதில்லை. இவைகளை அதிகம் உட்கொள்ளும் போது செரிமானத்திற்கு அதிக நீர் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் மற்றும் நெறிமுறைகள்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
Summer Diet Tips Tamil

காபி, தேநீர், குளிர்பானங்கள் மற்றும் ஆற்றல் பானங்கள் (energy drinks) உடலில் உள்ள நீரை வெளியேற்றி, நீரிழப்பை (dehydration) உண்டாக்கும் என்பதால் கோடை காலத்தில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால், அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள் உடல் வெப்பநிலையை உயர்த்தி, அதிகப்படியான வியர்வை மற்றும் தோல் எரிச்சலை உண்டாக்கும். மேலும் செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

மேலும் கோடை காலத்தில் சமோசா, பஜ்ஜி, சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்ற எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக உப்பு சேர்த்த உணவுகள் செரிமானத்திற்கு கடினமாக இருப்பதால், உடலின் வெப்பநிலையை அதிகரித்து சோர்வு மற்றும் மந்த நிலையை உண்டாக்கும்.

குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, என்ன சாப்பிடலாம்:

தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகியவை உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, அத்தியாவசிய வைட்டமின்களை வழங்குகின்றன.

வெள்ளரிக்காய், தக்காளி, கீரை மற்றும் சாலடுகள், செரிமானத்தை சீராக வைத்து, உணவை இலகுவாக்குகின்றன.

புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் மற்றும் மோர், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இயற்கையான குளிர்ச்சியையும் அளிக்கின்றன.

பழுப்பு அரிசி, குயினோவா, ஓட்ஸ் மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை ஆற்றல் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களாகும்.

இளநீர், எலுமிச்சை நீர், மூலிகை தேநீர் மற்றும் புதிய பழச்சாறுகள் உடலில் திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன.

கிச்சடி, வேகவைத்த பருப்பு, மற்றும் சூப்கள் போன்ற எளிய உணவுகள், லேசான மற்றும் வேகவைத்த உணவுகள் உடலை அதிக வெப்பமாக்காமல் ஆற்றலை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
வெப்ப அலை: தமிழகத்தின் தாங்க முடியாத வெப்பமும் தீர்வும்!
Summer Diet Tips Tamil

பொதுவாக இந்த வெப்ப அலையால் ஏற்படும் மனித உடல் பாதிப்புகளை தடுக்க தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர், பழச்சாறு அல்லது உப்பு, சர்க்கரை கரைசல் குடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது அடர் நிற உடைகளை தவிர்த்து வெளிர் நிற பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். குடை, தொப்பி அல்லது துணியால் தலையை மூடிக்கொள்ள வேண்டும். காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com