

கோடை கால வெப்ப அலைகளின் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தவறாமல் தண்ணீர் குடிப்பதற்கும், அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புறச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும், இலேசான மற்றும் தளர்வான ஆடைகளை அணிவதற்கும், உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் முன்னுரிமை கொடுங்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்குவதற்கு முன்பே, மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் அதீத வெப்பம் காரணமாக கோடை கால நோய்கள், வைரஸ் தொற்றுகள் அதிகளவில் பரவும் சூழல் எழுந்துள்ளது.
குறிப்பாக வெப்பநிலை அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலான கால கட்டங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள்.
கோடை காலத்தில் உடல் பாதுகாப்பிற்கு இலகுவான தளர்வான காற்றோட்டமான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை (Cotton) அணியுங்கள். வெப்பமான நாட்களில், வெப்பத் தடிப்புகளைக் குறைக்கவும் வியர்வையை உறிஞ்சவும் பருத்தி ஆடைகள் சிறந்தவை.
வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன், சன் கிளாஸ், தொப்பி அல்லது குடை பயன்படுத்துங்கள். முடிந்த வரை வெயில் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.
வெளியில் செல்லும் போது ஒரு தண்ணீர் பாட்டிலையும் ஒரு சிறிய துண்டையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் கழுத்தில் ஒரு ஈரத் துண்டைப் போட்டுக் கொள்வதன் மூலம், உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து உடலைக் குளிர்ச்சியடையச் செய்யலாம்.
வெளியில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுக்க ஓஆர்எஸ் கரைசல் (ORS), எலுமிச்சை பானம், மோர் அல்லது இளநீர் அருந்துங்கள். எளிதில் ஜீரணமாகக்கூடிய, நீர்ச்சத்து மிகுந்த தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை உண்ணுங்கள்.
உடல் வெப்பமடைவதை தவிர்க்க மது, டீ, காபி மற்றும் அதிக சர்க்கரை உள்ள பானங்களை தவிர்க்கவும். உடலில் நீர்ச்சத்தை இழக்க செய்யும் கார்ப்னேட் பானங்கள் பருகுவதை தவிருங்கள்.
உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள். பயணம் செய்யும் போது தண்ணீரை உடன் எடுத்து செல்லுங்கள். தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
உடலில் நீர்ச்சத்தை மேம்படுத்தும நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திரட்சை, வெள்ளரிக்காய் மற்றும் கீரை வகைகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வெயில் காலத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளை அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள். அதிக காரம், உப்பு, புளிப்பை தவிர்த்து விடுங்கள்.
தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் வெப்பத்தைக் குறைக்க உதவும். மேலும் உங்கள் தோலில் குளிர்ந்த, ஈரமான துணிகளைப் பயன்படுத்துங்கள். இது அரிப்பு, வியர்வை வருவதையும் தடுக்கும்.
கோடை காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உடல் வெப்பமடைவதை தடுக்கலாம். ஜன்னல் கதவுகளில் சூரிய ஒளியை தடுக்கும் திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள். திக்கான திரைச்சீலைகளுக்கு பதிலாக மெல்லியி பருத்தியால் ஆன துணியை பயன்படுத்துங்கள். அதேவேளையில் அறைக்குள் சரியான காற்றோட்டம் வருவதையும் உறுதி செய்யுங்கள்.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் வெளியில் உக்கிரமாக இருக்கும் நேரத்தில் வெளியில் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
நிழலில் இருப்பது வெயிலை விட 10 டிகிரி வரை குளிர்ச்சியாக இருக்கும். மரங்கள் இயற்கையான குளிர்ச்சையை அளித்து, காற்றின் தரத்தை மேம்படுத்தும். அதனால் சாலையில் நிழலான பக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மரத்தின் நிழலில் ஓய்வெடுங்கள்.
உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் தோட்ட வேலை, நடைப்பயிற்சி உள்ளிட்ட செயல்களை அதிகாலையில் அல்லது சூரியன் மறைந்த பிறகு செய்யுங்கள்.
வியர்வை வெளிப்படும்போது உடல் வெப்பம் அந்த திரவத்தை நீராவியாக மாற்றும். அப்போது சருமத்தின் மேற்பரப்பில் இருந்து வெப்பத்தை அகற்றி உடலில் உள் வெப்பநிலையை குறைக்க உதவிடும். ஆனால் வியர்க்கும்போது திரவங்களையும், தாதுக்களையும் உடல் இழக்கும். எனவே தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தண்ணீர் பருகுவது நல்லது.
உடலை நீருக்குள் மூழ்க வைப்பது குளிர்ச்சிக்கு வித்திடும். எனவே உங்கள் பகுதியில் ஏரி, குளம், நீச்சல் குளம் இருந்தால் அதில் நேரத்தை செலவிடலாம்.
உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ தலைசுற்றல், பலவீனம், பதட்டம், அல்லது கடுமையான தாகம் மற்றும் தலைவலி ஏற்பட்டால், உடனடியாக குளிர்ச்சியான இடத்திற்குச் செல்லுங்கள். குழப்பம், வாந்தி, அல்லது அதிக உடல் வெப்பநிலை போன்ற கடுமையான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.