பல்வேறு விலங்குகள் வரவிருக்கும் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு விசித்திரமான திறனைக் கொண்டுள்ளன. யானைகள், நாய்கள், பறவைகள் மற்றும் எறும்புகள் உட்பட பல்வேறு உயிரினங்களில் இந்தக் குணம் காணப்படுகிறது. இந்த விலங்குகள் பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற நிகழ்வுளை முன்கூட்டியே தங்கள் அசாதாரண நடத்தைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றன. இது இயற்கை பற்றிய ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பாக நமக்கு விளங்குகிறது. இதை எவ்வாறு மனிதர்கள் புரிந்துகொண்டு செயல்படலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
விலங்குகளின் நடத்தையில் காணப்படும் நமக்குரிய முன்கூட்டிய எச்சரிக்கை:
பல விலங்குகள் இயற்கை பேரழிவுகளுக்கு முந்தைய பல நுட்பமான சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கண்டறிகின்றன. உதாரணமாக, யானைகள் சுனாமிக்கு முன் உயரமான பகுதிகளுக்குச் செல்ல முயல்கின்றன. பூகம்பத்திற்கு முன் நாய்கள் அனைத்தும் பரபரப்பாக ஒரு வித ஓசையை எழுப்பி சுற்றித் திரியும். பறவைகள் பெரும்பாலும் தங்கள் பறக்கும் முறைகளை மாற்றி ஏடாகூடமாக பறக்கக்கூடும். எறும்புகள், அவை கட்டிய புற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி எந்த ஒரு வரிசையையும் பின்பற்றாமல் தலைதெறிக்கப் போவதைக் காணலாம். இதுபோன்று உயிரினங்களிடம் காணப்படும் மாறுபட்ட நடத்தைகள் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள், நிலத்தில் வரும் அதிர்வுகள் அல்லது தரை பகுதியில் இருந்து வெளிப்படும் வாயுக்களின் வெளியீடு என்பதை மனிதன் அறியலாம்.
விலங்குகளால் எந்தெந்த எச்சரிக்கைகளை உணரமுடியும்:
நில அதிர்வு செயல்பாடு: நாய்கள் மற்றும் பூனைகள் அதிக உணர்திறன் கொண்டுள்ளதால், அவை மனிதர்கள் உணரும் முன்பே நில அதிர்வுகள் அல்லது பூகம்பங்களை உணர்கின்றன. இதன் அறிகுறி பொதுவாக அவற்றின் அமைதியின்மை அல்லது. அபாய ஓசைகளின் மூலம் வெளிப்படும்.
வளிமண்டல அழுத்தத்தில் மாற்றங்கள்: பறவைகள் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் செயல்களை மாற்றுகின்றன. புயல்களுக்கு முன், அவை பறக்கும் முறை மற்றும் வேகத்தை மாற்றிக்கொள்கின்றன. இதன் மூலம் வரவிருக்கும் வானிலை மாற்றங்களை பற்றிய நுட்பமான குறிப்பை நமக்கு அளிக்கின்றன.
மின்காந்த புலங்கள்(Electromagnetic Fields): பறவைகள் மற்றும் மீன்கள் உட்பட சில உயிரினங்களால் பூமியின் காந்தப்புலத்தில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை உணர முடியும். இந்த வகையான மாற்றங்கள் எரிமலை வெடிப்புகள் அல்லது சுனாமிகளுக்கு முன் நிகழலாம்.
வாயு உமிழ்வுகள் (Gas Emissions): நில அதிர்வு நிகழ்வுகளுக்கு முன் தரையில் இருந்து வாயுக்கள் வெளியேறுவதால், குவிந்திருக்கும் எறும்புகள் மற்றும் பிற பூச்சிகள் தங்கள் கூடுகளை விட்டு வெளியேற கூடும். இதுவும் நமக்கான ஓர் மறைமுக எச்சரிக்கை .
அகவொலி கண்டறிதல்(Infrasound Detection): யானைகள், குறைந்த அதிர்வெண் ஒலிகளை (low-frequency) கண்டறியும் திறனுடையவை. தொலைதூரத்தில் உருவாகும் புயல்கள் அல்லது எரிமலையில் நிகழும் நடவடிக்கைகளை முன்கூட்டியே உணரும் தன்மையுடையவை.
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
விலங்குகளிடம் இருந்து வரும் சிக்னலை புரிந்துகொண்டு செயல்பட, மனிதர்கள் விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பொதுவாக நம் செல்லப்பிராணிகள் மற்றும் உள்ளூர் வனவிலங்குகளைக் கவனித்தாலே சில முக்கியமான விஷயங்களை உணரமுடியும். அப்படி விலங்குகளின் அசாதாரண நடத்தையை கவனித்தவுடன், விழிப்புணர்வோடு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். பின் தளர்வான பொருட்களைப் பாதுகாப்பது அல்லது தேவைப்பட்டால் வானிலை மையமிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியை காலி செய்வது பற்றி கூட யோசிக்கலாம். முக்கியமாக இதை பற்றிய விழிப்புணர்வை உங்கள் அருகில் இருக்கும் சமூகத்தாரிடம் கூறி புரிவைப்பதனால், இயற்கை பேரழிவுகளின் தாக்கங்களை ஓரளவு தாக்குப்பிடித்து உங்கள் சூழ்நிலையை விரைவில் மேம்படுத்த முடியும்.
ஆக, பேரிடர் முன்னறிவிப்பில் அறிவியல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகித்தாலும், விலங்குகளின் இயற்கையான உள்ளுணர்வுகளும் நமக்கு கூடுதல் முன்னெச்சரிக்கையை வழங்குகின்றன. இந்தச் சிக்னல்களை அடையாளம் கண்டு, அவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலம், மனிதர்கள் இயற்கை பேரழிவுகளுக்கு முன்பே சிறப்பான தயார் நிலையில் இருந்து, உயிர்களைக் காப்பாற்றி, சேதத்தைக் குறைக்கமுடியும்.