வன விலங்குகளிடம் வீம்பு பண்ணாதீர்கள்... மீறினால் விபரீதம்!

wild animal
wild animal

-தா சரவணா, வேலூர்.

ஊருக்குள் மான்கள் வந்து நீரில்லா கிணற்றில் விழுந்து இறப்பதும், நாய்களால் கடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வந்த நிலையில், சிறுத்தை ஊருக்குள் வரும் செய்திகள் இப்போது அதிகமாக வெளிவந்து கொண்டுள்ளது. மான்கள் ஊருக்குள் வருவதற்கு முக்கிய காரணம், அதற்கான உணவு மற்றும் குடிநீர் தேடி. அதே போலத்தான் யானைகளும். ஆனால் சிறுத்தைகள் போன்ற அபாயகரமான விலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன என வனத்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன விளக்கங்களைத் தருகிறது இந்தப் பதிவு .

பொதுவாக புலி கூச்ச சுபாவம் உள்ள விலங்கு. மனித வாடை பட்டாலே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடும். அதையும் மீறி சில இடங்களில் மனிதர்களை தாக்கிக் கொல்லும் புலிகள் உள்ளன. அவையெல்லாம் வயதானவயாகவோ காயம் பட்டவைகளாகவோ இருக்கும். இவற்றைத்தான் நாம் ஆட்கொல்லி புலிகள் என்போம். ஆனால் சிறுத்தை அப்படி அல்ல.

பெரும்பாலும் சிறுத்தைகள் மனிதர்களை காயப்படுத்தி விட்டே செல்லும். மிகவும் அரிதிலும் அரிதாக மனிதர்களைக் கொல்லும். நீலகிரி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் நகரப்பகுதியில் சிக்கிய சிறுத்தை, உணவுக்காக விலங்குகளை துரத்தி வந்திருக்கலாம், அப்போது வழி தவறி நகர் பகுதியில் நுழைந்திருக்கும். இது தவிர்த்து, வேறு சிறப்பான காரணங்கள் அதில் இருக்க முடியாது. 

இதையும் படியுங்கள்:
காற்று மாசுபாடு கற்றுத் தரும் பாடம்!
wild animal

சிறுத்தைகளைப் பொறுத்தவரை, மாடு, நாய் போன்றவற்றையே குறி வைத்து தாக்கி, உணவாக உட்கொள்ளும். 90% மனிதர்களை காயப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிடும்.

leopard
leopard

இது போன்று ஊருக்குள் திசை மாறி வரும் மிருகங்களை பிடிப்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு, அவை சரிவர நடைமுறைப்படுத்த படாத  நிலையில், மயக்க மருந்து செலுத்தி விலங்குகளை பிடிக்க முயற்சிப்போம். சில நேரங்களில் அதிலிருந்தும் தப்பித்து, தானாகவே அபாயகரமான விலங்குகள் வனப்பகுதிக்குள் ஓடிவிடும். ஆனால் மயக்க ஊசி செலுத்தப்பட்ட விலங்குகள், செலுத்தப்பட்ட மருந்தின் அளவை பொறுத்து, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என மயக்க நிலையில் இருக்கும். இந்த இடைவெளியில் அவற்றை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வனப்பகுதிக்கு சென்று, மீண்டும் மயக்க மருந்து நீர்த்து போவதற்கான ஒரு ஊசி செலுத்தி, அந்த மிருகத்தை வனப் பகுதியில் விட்டு விடுவோம்.

இது போன்ற விலங்குகள் பெரும்பாலும் மலை மற்றும் வனப் பகுதிகளில் இருப்பதால் அவற்றை ஒட்டிய நகர் பகுதிகளுக்குள் வர அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் இவற்றால் அதிக அச்சுறுத்தல்கள் கிடையாது. அவை நம்மைப் பார்த்து பயப்படுவதால் தான் நம்மை தாக்க முயற்சிக்கின்றன. நாம் அமைதியாக இருந்து விட்டால் அவை அமைதியாக வந்த வழியே சென்று விடும். கடந்த ஆண்டு இதே திருப்பத்தூரில் இரண்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலை கடந்து நகரின் மையப் பகுதிக்குள் வந்தன. முன்னதாக ஏலகிரி மலை மீது ஏறின, பின்னர் இறங்கின. அவை அமைதியாக தான் இருந்தன. ஆனால் நம் மக்கள் கடும் சத்தத்தை எழுப்பி அவைகளுக்கு அச்சத்தை ஊட்டினர். அதனால் அந்த இரண்டு யானைகளும் தங்கள் பங்குக்கு தங்களின் எதிர்ப்பை அவ்வப்போது காண்பித்தபடியே இருந்தன. பின்னர் ஒரு வழியாக ஓய்ந்து, கும்கி யானை உதவியுடன் அவை பிடிபட்டன.

வனவிலங்குகளை எப்போதும் நாம் துன்புறுத்தவோ வேறு ஏதேனும் வகையில் அவற்றிடம் வீம்பு காட்டவோ கூடாது. இன்னும் சொல்லப்போனால் வனவிலங்குகள் இல்லாமல் நாம் இல்லை.

மனிதர்களாகிய நாம் தான் மாற வேண்டும். சரிதானே நண்பர்களே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com