
பொதுவாக, இறைவன் படைப்பில் பல உயிரினங்கள் இரண்டு கண்களுடனேயே பிறந்து வளர்ந்து வருகின்றன. விதிவிலக்காக சிலவற்றிற்கு இரண்டிற்கும் அதிகமான கண்கள் உள்ளன. அவை அந்த விலங்குகள் வசிக்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தமது வாழ்க்கையை நகர்த்திச் செல்ல உதவும். அப்படிப்பட்ட அபூர்வமான 6 விலங்குகள் மற்றும் அவை எப்படித் தங்களுக்கு போனஸாகக் கிடைத்த கண்களைப் பயன்படுத்துகின்றன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. எட்டுக்கால் பூச்சிகள்: இவற்றிக்குப் பொதுவாக எட்டுக் கண்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்திற்கும் பார்வைக் கூர்மை கிடையாது. ஜம்பிங் ஸ்பைடர் தனது கூர்மையான பார்வைத் திறனால் இரைகளைப் பிடிக்கும். நூலாம் படை போன்ற வலை பின்னும் ஸ்பைடர், தன் தொடு உணர்ச்சி மற்றும் அதிர்வுகளை வைத்தே வேலை செய்யும். இவற்றின் கண்கள் வரிசையாகவோ குழுவாகவோ அமைந்திருக்கும். வெளிச்சத்தைக் கண்டுபிடிப்பது, நகர்ந்து செல்லல் போன்ற பலதரப்பான வேலையைச் செய்ய ஒவ்வொரு கண்ணும் பயன்படும்.
2. ஹார்ஸ் ஷூ கிராப் (Horseshoe Crab): இதற்கு பத்து கண்கள் உள்ளன. இதன் உடம்பைப் போலவே, கண்களும் வித்தியாசமானவை. இரண்டு பெரிய கண்கள் ஓட்டின் பக்கவாட்டிலும், மற்றவை மேல் புறமும் வால் புறமும் அமைந்துள்ளன. அவை வெளிச்சம் உள்ள பகுதியைக் கண்டுபிடிக்கவும், கலங்கிய நீரில் வழிகாட்டவும், இனப்பெருக்க சமயங்களிலும் உதவி புரிகின்றன.
3. பாக்ஸ் ஜெல்லிஃபிஷ்: இவற்றிற்கு 24 கண்கள் உள்ளன. அவை உடம்பில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமான திறன் கொண்டது. சக்தி வாய்ந்தவை, ஒளியை ஊடுருவிச் செல்லவும், தடைகளைத் தாண்டிச் செல்லவும் பயன்படும். இதன் செயல்களைக் கட்டுப்படுத்த, பொதுவானதொரு மூளை அமைப்பு கிடையாது. நரம்புகளே, பார்க்கும் பொருளை செயலுருவப்படுத்திப் பார்க்க உதவி புரியும்.
4. ஸ்கேலப்ஸ் (Scallops): இது சுமார் 200 குட்டிக் குட்டி கண்களை, உடலின் பக்கவாட்டுப் பகுதியில் வரிசையாகக் கொண்டுள்ளன. கண்களின் பார்வைத் திறன் கூர்மையாக இல்லாதபோதும், வெளிச்சத்தைக் கண்டுபிடித்து, முன்னேறவும், எதிரிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் தப்பி ஓடவும் போதுமானதாக உள்ளது.
5. ஸ்டார் ஃபிஷ் (Starfish): இது பார்ப்பதற்கு கண்களுடையை உயிரினமாகத் தெரியாது. ஆனால், அதன் ஒவ்வொரு கை போன்ற அமைப்பின் முடிவிலும் வெளிச்சத்தை உணரக்கூடிய திறன் கொண்ட ஒரு சிறிய கண் போன்ற அமைப்பு உள்ளது. இவை நிழலையும் வெளிச்சத்தையும் வேறுபடுத்தி உணர்ந்து, கடலின் தரைப் பரப்புகளில் ஸ்டார் ஃபிஷ் நகர்ந்து செல்ல உதவி புரிகின்றன.
6. மான்டிஸ் ஷ்ரிம்ப் (Mantis Shrimp): இதற்கு இரண்டு கண்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வேலையைச் செய்து வருகின்றன. பிரிவுபட்ட ஒரு பகுதி கடலின் ஆழத்தை நிர்மாணிக்க உதவும். அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயலாற்றும்போது அதை ட்ரெய்னோகுலர் பார்வை (Trinocular vision) என்கின்றனர்.