
மனித நாகரிகத்திற்கு பாறைகள் அடிப்படையானவை. பல்வேறு துறைகளில் நம்ப முடியாத அளவிற்குப் பயன்பாடுகளை கொண்டுள்ளன. பாறைகள் நாம் வசிக்கும் வீடுகள், பயணிக்கும் சாலைகள் முதல் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள் வரை மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பாறைகள் அடித்தளமாக உள்ளன. பாறைகளின் பயன்பாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கட்டுமானப் பொருட்கள்: பாறைகளைத் தகர்த்து சரளைக் கற்களாகவும் மணலாகவும் மாற்றி நவீன கட்டுமானத்தின் முதுகெலும்பாக ஆக்குகின்றனர். சிமெண்ட் தயாரிப்பில் சுண்ணாம்புக் கல் ஒரு முதன்மையான மூலப்பொருளாகும். பாறைகள் அஸ்திவாரங்கள், சுவர்கள், தூண்கள், லிண்டல்கள் மற்றும் வளைவுகள் கட்டுவதற்கு வீடுகளிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டட முகப்புகள் மற்றும் சுவர்களுக்கு பாறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கிரானைட், பளிங்கு, சுண்ணாம்புக் கல் போன்ற பாறைகள் அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அழகியல் கவர்ச்சி காரணமாக கட்டடங்களின் வெளிப்புற மற்றும் உட்புற அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பளபளப்பான கிரானைட், பளிங்கு, ஆகியவை சமையலறைகள், குளியலறைகள் மற்றும் பிற உட்புற இடங்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளன.
ரயில் பாதைகளில்: நொறுக்கப்பட்ட பாறைகள், ரயில் பாதைகளில் முக்கியமான நோக்கங்களுக்கு உதவுகின்றன. ரயில்தண்டவாளங்களுக்கு நிலையான அடித்தளத்தை வழங்கவும், வடிகால் வசதியை ஏற்படுத்துவும், அதிர்வுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
சாலைகள், நடைபாதைகள்: சிலேட் பாறைகள் தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளாத திறன் காரணமாகவும், மெல்லிய தாள்களாகப் பிரிக்கக்கூடிய திறன் காரணமாகவும் கூரை ஓடுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சாலைகள், நடைபாதைகள் மற்றும் வாகனம் ஒட்டும் பாதைகளை அமைக்க பல்வேறு பாறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆற்றங்கரைகள், கால்வாய் கரைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பெரிய பாறைகள் அரிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்துறை பயன்பாடுகள்: பண்டைய காலங்களில் வெட்டும் கருவிகள், ஆயுதங்கள் நெருப்பு மூட்டுவதற்கு என்று மனிதர்கள் பாறைகளைத்தான் பயன்படுத்தினார்கள். பல உலோகங்கள் இரும்பு, தாமிரம் போன்றவை உலோகத் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. அவை அடிப்படையில் குறிப்பிட்ட தாதுக்களின் அதிக செறிவு கொண்ட பாறைகள் ஆகும்.
கண்ணாடி உற்பத்தியிலும், சுண்ணாம்பு உற்பத்தியிலும் வெடி உலைகளில் எஃகு உற்பத்திக்கும், சிமெண்ட் உற்பத்திக்கும் பாறைகள் பயன்படுகின்றன. வேதியியல் துறைகளில் குளோரின், காஸ்டிக் சோடா தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் காணப்படும் கந்தகம், துப்பாக்கி ரவைகள் தயாரிக்கவும் தீப்பெட்டிகள் மற்றும் பல்வேறு ரசாயன சேர்மங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
புதை படிவ எரிபொருள்கள்: நிலக்கரி என்பது கரிமப் பொருள்களில் இருந்து உருவாகும் ஒரு வண்டல் பாறை ஆகும். மின்சார உற்பத்திக்கான ஒரு முக்கிய புதை வடிவ எரிபொருள் ஆகும். நிலக்கரி பாறைகளுக்கு இடையே புதைந்து கிடக்கும் தாவரங்களின் எச்சங்களிலிருந்து உருவாகிறது. மில்லியன் கணக்கான வருடங்களாக புதைந்து கிடக்கும் தாவரங்கள், அழுத்தம் மற்றும் வெப்பத்தின் காரணமாக நிலக்கரியாக மாறுகின்றன.
விவசாயம்: பெரும்பாலான விவசாய மண்ணுக்கு பாறைகள்தான் தாய்ப் பொருளாகும். காலப்போக்கில் பாறைகள் வானிலை மாற்றத்தால் கனிமங்களை வெளியிட்டு மண்ணை உருவாக்கும் துகள்களை உருவாக்குகின்றன. இவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பாறைகளில் இருந்து பெறப்பட்ட சில தாதுக்கள் மண் வளத்தை அதிகரிக்கும் ரசாயன உரங்களை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன.
அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள்: பாறைகளில் இருந்து பெறப்பட்ட சில தாதுக்கள், அழகு சாதனப் பொருட்கள், டால்கம் பவுடர், உணவு மற்றும் மருந்தகத் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. வைரங்கள், மாணிக்கங்கள், சபையர்கள், மரகதங்கள் குவார்ட்ஸ் வகைகள் போன்ற விலை மதிப்பற்ற ரத்தின கற்கள் பாறைகளுக்குள் காணப்படும் சிறப்பு கனிமங்களாகும்.