
செடிகள் வீட்டிற்கு அழகையும் சுத்தமான காற்றையும் தருகின்றன. ஒருசில செடிகள் வீட்டில் செல்வம் பெருக வளர்க்கப்படுகின்றன. இன்னும் சில செடிகள் உடல் ஆரோக்கியத்தையும், நிதி நிலையையும் சீர்குலைத்து விடக்கூடியவை என்றும் சொல்லப்படுகின்றன. வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதற்கு அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மிகக் காரணமும் உண்டு. அந்த வகையில் வாஸ்துபடி எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம், வளர்க்கக் கூடாது என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
நேர்மறை எண்ணங்களுக்கு மணி பிளான்ட்: காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் மணி பிளான்ட் செடிகள் டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வெளியிடும் கதிர்வீச்சுக்களையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும். நேர்மறை எண்ணங்கள் வீட்டிற்குள் வர ஹாலில் தென்கிழக்கு மூலைகளில் மணி பிளான்ட் செடியை வளர்க்கலாம்.
அதிர்ஷ்டம் பெருகும்: எங்கெல்லாம் நல்ல வாசனை உள்ளதோ அங்கெல்லாம் மகாலட்சுமி தேவி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாக இருப்பதால் வீட்டிற்குள் அதிர்ஷ்டம் பெருகவும், நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கவும் மல்லிகை பூச்செடியை வளர்க்க வேண்டும்.
மகிழ்ச்சிக்கு மூங்கில்: ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி பெருகவும், அதிர்ஷ்டம், புகழ், பணத்தைக் கொண்டு வரவும் மூங்கில் செடியை வளர்க்க வேண்டும். இந்தச் செடியை வீட்டின் ஹாலில் கிழக்கு அல்லது தென்கிழக்கில் வைத்து வளர்க்கலாம்.
பதவி உயர்வு தரும் கற்றாழைச் செடிகள்: நேர்மறை எண்ணத்தைத் தரும் கற்றாழை செடிகள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் அதைக் களைந்து விடும் தன்மை கொண்டது. பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழைச் செடியை வளர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வடமேற்கு திசையில் இவற்றை வளர்க்கக் கூடாது.
மன அழுத்தத்தைப் போக்கும் லாவண்டர் செடிகள்: குடும்ப உறவு வலுப்பெறவும் மன அழுத்தத்தைப் போக்கவும் லாவண்டர் செடிகளை பெட்ரூமில் வளர்க்க வேண்டும். காற்றை சுத்திகரிப்பு செய்து சுத்தமான காற்றை தரவல்ல லில்லி செடிகளையும் படுக்கையறையிலேயே வைத்து வளர்க்கலாம். பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தென்கிழக்கு திசையில் ரப்பர் செடியை வைத்து வளர்ப்பது சிறந்தது.
தவிர்க்க வேண்டிய செடிகள்: சில செடிகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் தன்மை கொண்டவையாக இருப்பதால் ரோஜா செடி தவிர, மற்ற முள் செடிகளை வீட்டிற்குள் வைத்து வளர்க்கக் கூடாது.
அதேபோல், வடகிழக்கு திசையில் பெரிய மரங்களை வைத்து வளர்ப்பது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பதால் கருவேல மரம், பருத்தி செடி, பனைமரம் போன்றவற்றை வீட்டைச் சுற்றி வளர்க்கக் கூடாது. பனைமரம் பணப் பற்றாக்குறையையும் இலந்தை மரம் வீட்டின் அமைதியையும் சீர்குலைக்கும் என்பதால் இவற்றை கண்டிப்பாக வளர்க்கக் கூடாது.
இவை தவிர, வீட்டிற்குள் சிவப்புப் பூக்கள் கொண்ட செடிகள், போன்சாய் மரங்கள், புளிய மரம் போன்றவற்றை வைத்து வளர்க்கக் கூடாது. மேலும், காய்ந்து வறண்டு சருகாகிப் போன செடிகளையும் வீட்டிற்குள் வைத்து வளர்க்கக்கூடாது என்று கூறுகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.