
பொதுவாகவே, குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமே பட்டாம் பூச்சியை பார்த்தாலே மனதில் இன்பம் பொங்கும். பல வண்ண நிறங்களோடு பறந்து சுற்றித் திரியும் அவற்றைப் பார்த்தாலே நம் மனதிலும் பேரானந்தம் ஏற்படும். இந்த பட்டாம் பூச்சியை ஆங்கிலத்தில், ‘butterfly’ என்றழைக்கிறோம்.
விதவிதமான வடிவங்களில் பல்வேறு நிறங்களில் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் வண்ணத்துப் பூச்சிகள் பல்வேறு வகையான இனங்களைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சரி, பட்டாம் பூச்சியை butterfly என ஏன் அழைக்கிறார்கள் என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்ததுண்டா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வெண்ணெய் போன்ற மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொதுவான சல்பர் பட்டாம் பூச்சிகள்தான் இதற்குக் காரணம் என்று ஒருசில ஆதாரங்கள் கூறுகின்றன. அந்தப் பெயரின் தோற்றத்திற்கான ஒரு சாத்தியக்கூறு இந்த மஞ்சள் நிற பட்டாம் பூச்சிகள்தான் என்பதே இந்த ஆதாரங்களின் கருத்தாகும். இதைத் தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
பட்டாம் பூச்சிகள் அவற்றின் மலத்தின் நிறத்திற்காகவும் butterfly என்று பெயரிடப்பட்டிருக்கலாம். பழைய டச்சுக்காரர்கள் ‘boterschijte’ என்று இதை அழைத்தார்கள். இந்த வார்த்தைக்கு வெண்ணெய் என்று அர்த்தமாகும். பட்டாம் பூச்சிகள் உருமாற்றம் அடையும்போது, ‘மெக்கோனியம்’ என்று அழைக்கப்படும் கிரிசாலிஸிலிருந்து வெளிவரும் முதல் மலம் பிரகாசமான நிறத்தில், பெரும்பாலும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஆகவேதான், butterfly என்ற பெயரை வைத்திருக்கலாம் என்பது மற்றொரு கருத்தாகும். பழைய ஜெர்மன் பெயர்களில் இவற்றை ‘botterlicker’ (வெண்ணெய் - நக்கு) என்றும் ‘molkendieb’ whey-thief மற்றும் ‘milchdieb’ (பால் - திருடன்) என்றும் அழைக்கப்பட்டது.
இடைக்காலத்தில் மக்கள் பட்டாம் பூச்சிகள் பால் மற்றும் வெண்ணெயைத் திருடியதாக நம்பினர் என்றும் கூறப்படுகிறது. தாதுக்களால் தங்கள் உணவை நிரப்பப் பார்க்கும்போது, பட்டாம்பூச்சிகள் சிறுநீர், மலம் மற்றும் இறந்த விலங்குகள் உட்பட பல விசித்திரமான விஷயங்களை உண்ணும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இடைக்காலத்தில், பால் பொருட்கள் கொட்டகையில் தயாரிக்கப்பட்டபோது, அதிலிருந்து தூக்கி எறியப்பட்ட waste பால் பொருட்களை பட்டாம் பூச்சிகள் உண்ட காரணத்தினால், அவற்றுக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, நம் எல்லோருக்குமே butterfly என்கிற வார்த்தையையும் மற்றும் பட்டாம் பூச்சிகளையும் மிகவும் பிடிக்கும். பல விதமான வண்ணங்களில் இவை காணப்படுவதால் இவற்றை தமிழில் வண்ணத்துப் பூச்சிகள் என்றும் அழைக்கிறோம்.