
தாவரங்கள் ஒளிச்சேர்க்கை முறையில் சூரிய ஒளியின் மூலம் தங்களுக்கான உணவை தயாரிக்கின்றன. தாங்கள் தயாரித்த உணவு தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள், உச்சநிலை ஊண் உண்ணிகள் மற்றும் சிதைப்போர்களுக்கு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் முகமாக சங்கிலித் தொடர் போல் உண்பதும், உண்ணப்படுவதுமாக அமையும் நிகழ்வே உணவுச் சங்கிலி எனப்படுகிறது.
தாவரங்கள் சூரிய ஒளியின் துணை கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்கு வேண்டிய உணவை தயாரிக்கின்றன. இவை உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன. நுகர்வோர்கள் என்று அழைக்கப்படும் சிறிய மீன், வெட்டுக்கிளி, எலி, முயல், மான், ஆடு, யானை போன்ற தாவர உண்ணிகள் தங்களது உணவிற்காக உற்பத்தியாளர்களாகிய தாவரங்களை உண்கின்றன.
இத்தாவர உண்ணிகளை தங்களது உணவிற்காக நுகர்வோர்களாகிய தவளை, சில பறவைகள், மீன்கள், பூனை, நரி போன்ற புலால் உண்ணிகள் உண்கின்றன.
இத்தகைய புலால் உண்ணிகளை மூன்றாம் நிலை நுகர்வோர்கள் அல்லது இரண்டாம் நிலை புலால் உண்ணிகள் என்று அழைக்கப்படும் பாம்பு, ஓநாய் போன்றவை தங்களுக்கு உணவாக்கிக் கொள்கின்றன. கடைசி நிலை நுகர்வோர்கள் என்று அழைக்கப்படும் மிருகங்கள் வேறு எந்த மிருகங்களுக்கும் உணவாவதில்லை. இதை உச்சநிலை புலால் உண்ணிகள் என்று அழைக்கப்படும் திமிங்கிலம், முதலை, புலி, சிங்கம் போன்றவை.
கடைசியாக எல்லா உயிர்களும் இறந்ததும், இறந்தவுடன் சிதைப்போரின் உணவாற்றலுக்குச் சென்றது போக எஞ்சியவை மண்ணோடு கலக்கின்றன.
இப்படி உயிரினங்களால் சங்கிலி தொடர் போல் சேகரிக்கப்படும் உணவு ஆற்றல் இறுதியாக மண்ணைச் சென்றடைந்து, மண்ணுக்கு வளம் சேர்த்து உற்பத்தியாளர்களுக்கு உரமாகி, மீண்டும் சங்கிலித் தொடரை தொடங்கி வைக்கிறது.
ஆக, காடுகளில் உள்ள தாவரங்கள் மற்றும் மரங்கள்தான் உற்பத்தியாளர்கள். அதன் நுகர்வோர்கள் என்று பார்த்தால் விலங்குகள். சிதைப்போர்கள் என்று பார்த்தால் பாக்டீரியா இனங்களும், நுண்ணிய உயிர்களும்தான். இப்படியாக, உயிர்களின் உணவுச் சங்கிலி நீளுகிறது.