மழை என்பது அனைத்து ஜீவனுக்கும் தேவைப்படும் இயற்கையின் இன்றியமையாத ஒரு வானிலை நிகழ்வு ஆகும். உயிர்கள் ஒரு கிரகத்தில் தோன்றவும் வளர்ச்சியடையவும் சூரியஒளி, ஆக்சிஜனுடன் நீரும் கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த நீர் ஆகாயத்திலிருந்து நேரடியாக பூமிக்கு துளி துளியாக தரையிறங்கி வருவதையே மழையாக குறிப்பிடுகின்றோம். பூமியில் உள்ள நீரின் ஒரு சுழற்சி தான் மழையாக பெய்கிறது. மழை என்பது அனைவருக்கும் இயற்கையின் கொடையாக இருக்கிறது. அப்படிப்பட்ட மழை இந்தியாவில் எங்கெங்கு அதிகளவில் பெய்கிறது என்பதைக் காண்போம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்றான மஹாபலேஷ்வர் இந்தியாவில் அதிக மழையைப் பெறும் பகுதியாக உள்ளது. இது சஹ்யாத்ரி மலைத்தொடரின் மத்தியில் அமைந்துள்ளது.
நாட்டில் அதிக மழையை பெறுவதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள ஈரப்பதமான வானிலையில் ஈர்க்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். மேலும் இங்கு புராண சிறப்பு பெற்ற கோயில்களும், அழகிய மலைத்தொடர்களும் காண்போரை வியக்க வைக்கின்றன.
அதிக மழைப் பெறும் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பது, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அம்போலி. இந்த நகரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிகள், வனவிலங்குகளை கொண்டுள்ள பகுதியாகவும் உள்ளது. அதிக மழைப்பெய்யும் பகுதியாக உள்ளதால் இங்கு புகழ்பெற்ற ஹிரண்யகேஷி நீர்வீழ்ச்சி மற்றும் நங்கர்தாஸ் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அம்பொலி ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிக்கும் சாகசமான மலையேற்றத்திற்கும் பிரபலமான இடமாக உள்ளது.
அகும்பே கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலமாகும். இது இந்தியாவில் அதிகம் மழைப் பெறும் இடங்களில் இது மூன்றாவது இடத்தை பெறுகின்றது. இதன் பசுமையான இயற்கைக்காட்சி காரணமாக இது மிகவும் பிரபலமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகும்பே நகரம் 'தென்னகத்தின் சிரபுஞ்சி' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது.
மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி இந்தியாவில் அதிக மழை பெறும் இடங்களில் எப்போதும் முதன்மையானது ஆகும். எப்போதுமே இடை விழாத மழை இதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள மௌசின்ராம் நகரம் பூமியில் அதிக மழைப்பொழிவைப் பெறும் மிகவும் ஈரமான இடம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒவ்வொரு வருடமும் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் மாறி மாறி வரக் கூடும். இங்குள்ள நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளின் அதிக ஈர்ப்பாக உள்ளது. எப்போதும் ஈரப்பதமும் குளிர் காற்றும் வானிலையை நெகிழச் செய்கின்றன.
மௌசின்ராம் மேகாலயா மாநிலத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் அதிக மழை பெறும் இடங்களில் இது முதலிடத்தை பெற்றுள்ளது. இது பூமியில் ஈரமான இடமாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
சிலநேரம் மௌசின்ராம் சிரபுஞ்சியையும் மிஞ்சி உலகில் அதிகமழை பெறும் இடமாக முதலிடத்தையும் பெறுகிறது. மௌசின்ராமில் இடைவிடாத மழை ஒரு நம்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்த இடம் ஒரு பசுமையான சொர்க்கம் போன்று இருக்கும். குகை ஆய்வு, நீர்வீழ்ச்சிகள் உட்பட பல ஈர்ப்புகளை இங்கு காணலாம். இது இயற்கையாகவே இயற்கை ஆர்வலர்களையும் சாகசக்காரர்களையும் ஈர்க்கிறது.