
பொதுவாக, நாய்கள் எந்த இனத்தைச் சார்ந்தவைகளாக இருந்தபோதும் அவற்றின் ஆயுட்காலம் ஏறத்தாழ 12 ஆண்டுகளாகவே இருக்கும். சிலர் தம் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாய்கள், கூடுதல் கவனிப்பும் அரவணைப்பும் பெற்று வரும் காரணங்களால் அவற்றின் ஆயுட்காலம் மேலும் சில ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதிகபட்சமாக எந்த வகை நாய்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றன என்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சிஹுஹு (Chihuahua): சிறிய உருவ அமைப்பு கொண்டது. எந்தவித கடினமான அல்லது மோசமான சூழ்நிலைகளிலிருந்தும் மீண்டு வந்து, மீண்டும் மகிழ்ச்சியாக வாழும் திறமை கொண்டது. 14 முதல் 18 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்து, அதிக ஆயுள் வரை வாழக்கூடிய இனங்களில் ஒன்று என்ற பெயரைப் பெற்றுள்ளது.
2. டேச்ஷுண்ட் (Dachshund): சுறுசுறுப்பான, பிடிவாத குணமுடைய நாய் இது. 16 ஆண்டுகள் வரை வாழக்கூடியாது. இந்த இனத்து நாய்களில் சில 19 வயது வரை கூட வாழ்வதாகக் கூறப்படுகிறது.
3. டாய் பூடில் (Toy Poodle): வசீகரமான தோற்றமும் புத்திசாலித்தனமும் கொண்ட நாய். இதை மிக்க அன்பும் அதிக கவனிப்பும் கொடுத்து வளர்த்து வந்தால் 14 முதல் 18 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
4. ஜேக் ரஸ்ஸல் டெரியர் (Jack Russell Terrier): நல்ல ஆரோக்கியமும் பலமும் நிறைந்தது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வகை நாய்களின் வாழ்நாள் சுமார் 13 முதல் 17 ஆண்டுகளாக உள்ளது.
5. ஷிஹ் ஸு (Shih Tzu): உற்சாகமும் பாசமும் கொண்ட நாய் இது. வீட்டிலுள்ள அனைவரிடமும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியோடும் பழகும் குணம் கொண்டது. 13 முதல் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இனம்.
6. மால்டேஸ் (Maltese): எளிமையாகவும் இனிமையாகவும் பழகக் கூடியது. இவை சாதாரணமாக 12 முதல் 15 ஆண்டுகள் வாழக்கூடியவை. வழக்கத்திற்கு மாறாக இவற்றில் சில மேலும் சில ஆண்டுகள் அதிகமாகவும் வாழக் கூடும்.
7. யார்க் ஷயர் டெரியர் (Yorkshire Terrier): தைரியமான, சண்டை போடும் குணம் கொண்ட சிறிய வகை நாய் இது. தொடர்ந்து, அதிக கவனிப்பும் அன்பும் கொடுத்து வளர்த்து வந்தால் 13 முதல் 16 ஆண்டுகள் வரை இது வாழக் கூடும்.
8. பீகிள் (Beagle): நட்புடன் பழகக் கூடியது. எதிலும் அதிக ஆர்வம் காட்டுதல், சுலபமாக பிறரைத் தன்பால் ஈர்க்கச் செய்தல் போன்ற நற்குணங்கள் கொண்ட நாய் இது. இதன் காரணமாகவே இது வீட்டில் உள்ள அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் வாழ்நாள் 12 முதல் 15 ஆக உள்ளது.
9. லஹாசா அப்சோ (Lhasa Apso): பலம் நிறைந்த, கோரைப் பற்கள் உடைய சிறிய வகை நாய் இது. சாதாரணமாக 14 முதல் 16 ஆண்டுகள் வரை இது வாழக்கூடியது. நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும்போது இதன் வாழ்நாள் மேலும் சில ஆண்டுகள் நீடிக்க முடியும்.
10. பாபில்லோன் (Papillon): வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சிறிய வகை நாய் இது. சரியான பாராமரிப்பு கிடைக்கும் சூழலில் ஆரோக்கியம் மிகுந்த இவ்வகை நாய்கள் 14 முதல் 17 ஆண்டுகள் வரை வாழக் கூடும்.