
வளி மண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து நீர் துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி விழுவதே மழையாகும். மழை பொழியும் மேகம் எது தெரியுமா? நிம்போ அல்லது நிம்பஸ் மேகங்கள் மழையை தாங்கும் மேகங்களாகும். அவற்றின் இருண்ட மற்றும் சாம்பல் தோற்றத்தால் அவை வகைப்படுத்தப்படுகின்றன. மழை பல வகைகளில் பெய்யும். அவற்றின் தன்மையை பொறுத்து அவற்றை வகைப்படுத்தலாம். பொதுவாக, மழையின் வகைகளை சாரல், தூறல், அடை மழை, கன மழை, ஆலங்கட்டி மழை மற்றும் ஆழி மழை என பிரிக்கலாம்.
1. சாரல் மழை: லேசாக மெதுவாக பெய்யும் மழை. பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழை சாரல் எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறு இடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பார்கள். சாரல் மழை என்பது சாய்வாய் காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப பெய்யும் மழை. இந்த மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் சிறிது நீர் தேங்கி ஊறி இறங்கும்.
2. தூறல்: தூறல் மழை என்றால் லேசான மழை என்று பொருள். இதை ஆங்கிலத்தில் drizzle என்று கூறுவார்கள். சாரலை விட இது சற்று அதிக கனத்துடன் பெய்யும் மழை. காற்று இல்லாமல் தூவலாகப் பெய்யும் மழை தூறலாகும். புல் பூண்டின் இலைகளும், நம்முடைய உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால், விரைவிலேயே காய்ந்து விடும். தூறல் மழை பயிர்களுக்கு நல்லது. ஏனெனில் அது அதிக நீரை வழங்குவதில்லை. ஆனால், நிலத்தை ஈரப்பதமாக்குகிறது.
3. அடைமழை: அடை மழை என்பது விடாமல் பெய்யும் பெருமழையை குறிக்கும். இடைவெளியின்றி பார்வையை மறைக்கும்படி பெய்யும் மழை இது. விடாமல் பெய்வதால் ஊரையே 'அடை'த்து விடும் மழை. அடைத்துக் கொண்டு பெய்வதாலும் இது அடை மழை எனப் பெயர் பெற்றது. கனமழை வேறு, அடை மழை வேறு. இந்த அடை மழையில் நீர் துளிகள் வேகமாக விழுந்து நீண்ட நேரம் பெய்யும். இந்த மழை ஓடைகளையும், குளம், ஏரிகளையும் நிரப்பும் வகையில் இருக்கும். அடை மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.
4. கன மழை: இது அடை மழையை விட அதிக அளவில் பெய்யும் மழை. சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையாகவும் இருக்கும். கன மழை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பெய்யும் நிகழ்வாகும். இது வழக்கமான மழை அளவை விட அதிகமாக இருக்கும். ‘ஐப்பசி அடை மழை, கார்த்திகை கன மழை’ என்பது பழமொழி. இது பெரும்பாலும் வெப்பச்சலனம் காரணமாக ஏற்படும். அதாவது, பூமியின் மேற்பரப்பு சூடாகி, காற்று மேலே எழும்பி, மேகங்கள் உருவாகி பின்பு மழையாகப் பொழியும்.
5. ஆலங்கட்டி மழை: திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து போய் மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, தனியாகவோ மழையுடனோ சேர்ந்து விழுவதே ஆலங்கட்டி மழை எனப்படும். ஆலங்கட்டி மழையில் பனிக்கட்டிகள் விழுந்து மழை பொழியும். இவை பந்துகளாக அல்லது ஒழுங்கற்ற பனிக்கட்டிகளாக விழும் திடமான மழை பொழிவாகும்.
6. பனி மழை: பனித் துகள்களே மழை போல பொழிவது பனி மழை எனப்படும். வானத்திலிருந்து பனி மழை பெய்வதற்கு 'சூடோமோனாஸ் சிரஞ்சி' என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவை பொதுவாக, இமயமலை, ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும். பனி மழை சாலைகளில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்தும். இது போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
7. ஆழி மழை: ஆழி மழையில், கடலில் இருந்து ஆவியான நீர் மேகங்களாக மாறி பின்பு கடலிலேயே மழையாகப் பொழிகிறது. ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயன் ஒன்றும் இல்லை. ஆனால், இது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும். இது மிக அதிக அளவில் பெய்யும் மழையாகும். இந்த மழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.