நம் பூமியில் இருப்பது ஒரே வகையான மண் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். அதில் பல ரகமான மண்கள் உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உள்ளது. ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அந்தத் தன்மைக்கு ஏற்ப நாம் பயிர் வைத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும். நம் பகுதியில் உள்ள 6 சிறப்பு வாய்ந்த மண் ரகங்களைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மண்ணின் வகைகள். வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், மலை மண், பாலை மண் என ஆறு வகைப்படும். வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரை சமவெளிகளில் காணப்படும். கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. செம்மண் உருமாறிய பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது. சரளை மண் அயன மண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது. மலைமண் மலைச்சரிவுகளில் காணப்படுகிறது. பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
1. வண்டல் மண்: வண்டல் மண் மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி, கொடி, தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இது விவசாயத்திற்கு மிகவும் சிறந்ததாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது.
2. கரிசல் மண்: கரிசல் மண் என்பது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் நன்கு வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது.
3. செம்மண்: இம்மண் பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும். செம்மண்ணில் கேரட், பீட்ருட் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன. இந்த செம்மண் தமிழ் நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற இடங்களில் பரவிக் காணப்படுகின்றன.
4. சரளை மண்: சரளை மண் மலைப் பிரதேசங்களில் காணப்படுகின்றது. இந்த மண்ணை துருக்கள் மண் என்றும் சொல்வார்கள். இந்த மண்ணில் பூக்கள், வேர்க்கடலை, நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற திணை வகை பயிர்கள் நன்றாக வளரக் கூடியவை.
5. பாலை மண்: இந்திய கடற்கரை ஓரங்களிலும் பாலைவனங்களிலும் காணப்படும் இந்த மண் வகையில் பயிர்கள் வளராது. உப்பு, கருவாடு போன்றவற்றை உலர்த்த மட்டுமே இவ்வகை மண் பயன்படும்.
6. மலை மண்: மலை மண்ணை பொறுத்தவரை பனிமலை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதிக சிதைவின் காரணமாக உருவாகிறது. காலநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த மண்ணில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாகக் காணப்படுகின்றன. இந்த மண்ணிலும் சில வகையான பயிர்களை விவசாயம் செய்யலாம்.