.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சரவணன்- இனிப்பு என்றால் ஒரு அடி தள்ளி நிற்பவன். ஏனெனில், அவன் சர்க்கரையினால் உடலில் ஏற்படும் ஆபத்துகளை நன்கறிந்தவன். சர்க்கரை சேர்க்கக்கூடாது என்பதற்காக டீ, காபி, குளிர்பானங்கள் அருந்தும் பழக்கத்தையே கைவிட்டவன். இருந்தும், அவனுக்கு கொஞ்ச நாளாக அடிக்கடி தாகமும், எடை இழப்பும் ஏற்படுவதை அறிந்து சந்தேத்துடன் மருத்துவமனைக்குச் சென்றான்.
மருத்துவரிடம் தனக்கு இருந்த அறிகுறிகளை கூற, அவர் இரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார். பரிசோதனை முடிவில், அவனுக்கு நீரிழிவு நோய் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். "நான்தான் என்னுடைய உணவில் சர்க்கரை சேர்ப்பதில்லை. அதோடு, சர்க்கரை சேர்க்கப்படும் இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதும் இல்லை. பிறகு எனக்கு எப்படி நீரிழிவு நோய் வந்தது?" என்று மருத்துவரிடம் கேட்டான்.
உண்மைதான், நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருந்தாலும், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களையும் தாண்டி, பல உணவுகள் வியக்கத்தக்க அளவு சர்க்கரையை தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றன. இவற்றை நாம் உண்ணும்போது, அதிகப்படியான சர்க்கரை நுகர்வுக்கு வழிவகுக்கின்றன . அப்படிப்பட்ட, அதிகளவு சர்க்கரை மறைந்திருக்கும் உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Smoothies, ஃபலூடா (Falooda) மற்றும் பழச்சாறுகள் ஆரோக்கியமானதாக தோன்றினாலும், இவற்றில் இயற்கையாக உள்ள சர்க்கரையையும் தாண்டி, சுவைக்காக கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
ரொட்டி, பிஸ்கட்ஸ், சிப்ஸ், நூடுல்ஸ், Jam போன்று பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பொருள்களிலும் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
ரெடிமேட் சாஸ்கள், வத்தக்குழம்பு பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, ஒரு சில ஊறுகாய்கள் போன்ற சமையலுக்குப் பயன்படும் ஒரு சில ரெடிமேட் பேஸ்ட்களிலும் சுவைக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இது போன்று, அதிக அளவு சர்க்கரை மறைந்திருக்கும் உணவுகளை நாம் அறியாமலேயே எடுத்துக் கொள்கிறோம். இதனால், எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன், ஆற்றல் செயலிழப்பு மற்றும் மனநிலை மாற்றங்கள், முன்கூட்டியே வயதான தோற்றம் மற்றும் சருமப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், நீரிழிவுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களும் வருவதற்கு இது வழிவகுக்கிறது.
அதிகப்படியான சர்க்கரை மறைந்திருக்கும் பொருள்களை எவ்வாறு கண்டறிவது ?
கார்ன் சிரப், தேன் போன்ற பொருள்களை வாங்கும்பொழுது, அவற்றின் லேபிள்களை கவனமாகப் படிக்கலாம். இனிக்காத தயிர், பாதாம் பால் போன்ற இனிப்புகள் இல்லாத பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம். பழச்சாறுகளுக்குப் பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
ஒரு காலத்தில் அரிதான விருந்தாக இருந்த சர்க்கரை, நம் உணவுகளில் எங்கும் நிறைந்த வில்லனாக மாறிவிட்டது. சர்க்கரையினால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து,தித்திக்கும் வாழ்வை வாழ அதிக அளவு சர்க்கரை இல்லாமல், ஒவ்வொரு நாளையும் செயலையும் தொடங்கலாம் தானே?