‘மேக வெடிப்பு’ எனும் வார்த்தை மழைக்காலங்களில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்று. ஆனால், இது ஆண்டுதோறும் இமயமலையில் நிகழும் ஒரு சம்பவமாக உள்ளது. சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மெதுவாகப் பொழியாமல் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அதுதான் மேகவெடிப்பு.
வருடா வருடம் மழைக்காலம் வரும் நேரம் இமயமலைப்பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை, வட கிழக்கு இந்தியப் பகுதிகளிலும் மேக வெடிப்பு ஏற்பட்டது என்று செய்தியைக் கேட்டிருப்போம். மேகவெடிப்பு என்றால் என்ன? இது எப்படி நிகழ்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
குறைந்த நேரத்தில் மேகங்கள் கூடி, வீரியம் மிக்க மழை பொழிந்தால் அதுவே மேகவெடிப்பு எனப்படும். இந்த அதீத மழை பொழிவால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை நிகழ்கிறது. இது இமயமலைப் பகுதியில் அடிக்கடி நிகழ்வது ஏன்?
பொதுவாகவே, மலை என்பது ஒரு அரண் போன்றது. அதன் ஒரு பகுதியில் வரும் காற்று தடுத்து நிறுத்தப்பட்டு அதே பகுதியில் மழையாய் பொழியும். இந்தப் பகுதியை விண்ட்வார்ட் சைட் (windward side) என்பர். காற்று தடுக்கப்பட்டதால் நீரை ஏந்தி வரும் குளிர் காற்று ஒரு பக்கத்திலேயே தடுக்கப்படுவதால் மற்றொரு புறம் வறண்டு காணப்படும். வறண்ட பகுதி லீவார்ட் சைட் (leeward side) எனப்படும்.
ஜூன், ஜூலை மாதங்களில் தெற்கில் இருந்து இமயம் நோக்கி காற்று நகரும். அப்போது இமாலயத்தின் இந்தியப் பகுதிதான் காற்றிடும் பகுதியாக இருக்கும். அதனால் இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளின் வழியாக வரும் சூடான காற்று உயர்ந்து குளிர்ந்து மழை மேகமாக மாறும்.
இமயமலை 6 முதல் 8 கிலோ மீட்டர் வரை உயரம் கொண்டது. அதனால் உயரம் ஏற ஏற இயற்கையாகவே அங்கு குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால்தான் மலை உச்சி பனியால் மூடப்பட்டுள்ளது. இப்படி உயரும் காற்று குளிர்ந்து இமயமலையின் மேல் அடர்த்தியான மழை மேகமாக மாறி விடுகின்றன. ஏற்கெனவே குளிர் பிரதேசம் என்பதால் குளிர்காற்று வீசும்போது மேகங்கள் சீக்கிரம் வெடித்து விடுகிறது. மழை தொடங்கிய சில நிமிடங்களில் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழையை ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்துவிடும்.
சாதாரண மலைப்பகுதி என்றாலே நீரோட்டம் இருக்கும். இமயமலை என்பது இண்டஸ், கங்கை நதி, பிரம்மபுத்திரா நதிகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது. அதனால் மிக விரைவாகவே வெள்ளம் ஏற்பட்டு விடுகிறது. இயற்கை சீற்றத்தை நாம் பல வழிகளிலும் சந்தித்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனிமேலாவது இயற்கையோடு இணைந்து வாழ்வோம். அது நம்மை வாழ வைக்கும்.