காவிரியே விரஜா நதி. அரங்கநாதரின் இருப்பிடமே வைகுந்தம். பரவாசுதேவப் பரம்பொருள் ஸ்ரீரங்கநாதர். விமானம் ஓம் எனும் பிரணவம். அதன் அழகான கலசங்களே வேதங்கள். பள்ளிகொண்ட பெருமாளின் தோற்றமே பிரணவ மந்திரம் ஆகும். 108 திவ்ய தேசங்களில் தலையாயது. பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் எனப் போற்றப்பெறும் திருவரங்கமே தலைசிறந்தது என்பதால் வைணவத்தில் கோயில் என்றாலே திருவரங்கம்தான். இக்கோயில் ஒன்றல்ல, இரண்டல்ல, பல சிறப்புகளை உடையது.
ஆசியாவிலேயே உயர்ந்த 236 அடி கோபுரம். பரப்பளவு 156 ஏக்கர். கோபுரங்கள் 21, திருச்சுற்றுகள்7, திருச்சுற்றுகளின் மொத்த நீளம் 14 கி மீ. உள்துணைக் கோயில்கள் 42, துணைக் கோயில்கள் 8 உடையது. ஒரு சுற்று சுற்றினால் இரண்டு கி.மீ. சுற்றிய பலன் கிடைக்கும்.
ராமாயணக் கால பழைமையான கோயில். சிலப்பதிகாரமும், நாலாயிர திவ்யப்பிரபந்தமும் திருவரங்கம் பெருமை பேசுவது. ஸ்ரீராமன் வழிபட்ட கோயில். நாற்புறமும் ஸ்ரீராமர் சன்னிதி உடைய ஆலயம். பட்டர்பிரான், பிள்ளை லோகாச்சாரியார், பெரிய நம்பி வாழ்ந்த தலம். மூலவர் பெரிய பெருமாள், உத்ஸவர் நம்பெருமாள். ஆண்டாளை மணக்க பல்லக்கு அனுப்பி தம்மோடு ஒன்றச் செய்த பெருமாள்.
எல்லா தலங்களிலும் நிற்கும் கோலமுடைய ஆண்டாளை, இங்கு அமர்ந்த கோலத்தில் கொண்டையின்றி கிரீடத்துடன் தரிசிக்கலாம். மதுரகவி ஆழ்வாரின் அம்மா மண்டபத்தின் கீழ்புறம் உள்ள நந்தவனத்தில் இருந்தே இன்றும் பெருமாளுக்கும், தாயாருக்கும் துளசி, துளசி மாலைகள் செல்கின்றன.
இக்கோயில் பெருமாள் 7 செல்வ நாச்சியார்களுடன் விளங்குகிறார். அவர்கள் ஸ்ரீரங்க நாச்சியார், ஸ்ரீதேவி, பூதேவி, சோழவல்லி, சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்க நாச்சியார் ஆகியோர் ஆவர்.
ஸ்ரீராமனே பெருமாள். அவராலே வழிபடப்பெற்ற அரங்கன் ஆதலால் பெரிய பெருமாள். கோயில் பெரிய கோயில். கோபுரம் பெரிய கோபுரம். கருடன் மிகப் பெரிய கருடன். ஜீயர் பெரிய ஜீயர். உரையாசிரியர் பெயர் பெரியவாச்சான் பிள்ளை. திருமதில்களே பெரிய திருமதில்கள். தாயாரோ பெரிய பிராட்டி. தளிகைகளோ பெரிய அவசரம். இசைக்கருவி பெரிய மேளம். ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனம்கள். அதாவது11 ஆழ்வார்கள், 247 பாக்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
மார்கழி மாதம் முதல் நாள் முதல் மார்கழி இருபதாம் நாள் வரை நடைபெறும் திருஅத்யயன வைகுண்ட ஏகாதசி மகோத்ஸவம் எனப்படும் மார்கழி திருநாளே திருவரங்கத்து விழாக்களில் தலையாய விழா. ஐந்து மாறுபட்ட பூக்களால் கட்டப்பட்ட அழகிய மாலையை நித்தம் பெருமாள் சூடிக் களைவார்.
பவித்ரோத்ஸவத்தின்போது பெருமாள் 365 பூணூல் அணிந்திருப்பார். பங்குனி மட்டையடி சேவை அன்று இரவு சேர்த்தியில் 18 லுங்கிகளை பெருமாளுக்கு மாற்றுவர். விழாக்களுக்குப் பெயர்போன திருவரங்க பெருமாளை நாள்தோறும், வருடந்தோறும் தரிசிப்பது பேரின்ப பெருநிலையைத் தரும். இந்த மார்கழியில் பெருமாள் புகழ் பாடி புண்ணியம் பல பெறுவோம்.