
இட நெருக்கடியான பகுதிகளுக்கு நாம் பொருட்களை வாங்க செல்லும்போது ஏதோ சிறிது நேரம் செல்கிறோம் திரும்பி விடுவோம் என்று நினைத்துக்கொண்டு அதை ஒரு பெரிய மாசுவாக நினைப்பது இல்லை. ஆனால் அப்படி ரோட்டோரங்களில் ஏற்படும் திடக்கழிவுகளால் என்ன பிரச்னைகள், எப்படி ஏற்படுகின்றன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
குடி பெயர்தல்:
கிராமங்களில் இருந்து குடிபெயர்த்து நகரங்களில் குடியேறும் பெரும்பாலானவர்களின் உறைவிடம் நகரங்களில் நடைபாதைகளாகத்தான் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவர்கள் நடைபாதைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துவதால் எல்லாவிதமான திடக்கழிவுகளும் சாலை ஓரங்களில் குவிக்கப்படுகின்றன. இப்படி இடம் பெயர்வதால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு அவை ரோட்டோரங்களில் திடக்கழிவுகளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
துரித உணவு கடைகள்:
சென்னை போன்ற நகரங்களில் 'துரித உணவு' என்ற பெயரில் நடைபாதைகளில் வண்டிகளை நிறுத்திக் கொண்டு உணவு வகைகளை விற்கும் பழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. அங்கு உணவு அருந்துவோர் உண்ட பின் தூக்கி எறியும் இலைகள், மிஞ்சிய உணவுகள், தூக்கி எறியும் கை துடைப்பான்கள், கை கழுவும் தண்ணீர் எல்லாம் நடைபாதைகளில் கொட்டியும் குவிந்தும் கிடப்பதால் அவற்றை உண்ண நாய்கள், பன்றிகள், காக்கைகள் வருகின்றன. இவை எல்லாமாக சேர்ந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி விடுகின்றன.
பழுது பார்த்தல்:
இருசக்கர வாகனங்கள் ஆகிய ஸ்கூட்டர், மோட்டார் பைக் போன்றவற்றை பழுது பார்க்கும் சிறிய பணிமனைகள் சாலைகளின் ஓரங்களில் உள்ள சிறிய இடங்களில் அமைந்துள்ளமையால் அவற்றைப் பழுது பார்ப்போர் சாலைகளில் எல்லா பணிகளையும் செய்கின்றனர்.
இதனால் உடைந்த உதிரி பாகங்களும், கசியும் பெட்ரோல், மெழுகு எண்ணெய், அழுக்குத் துணிகள் போன்றவை அங்கேயே தேங்கி கிடைப்பதால் நாற்றம் எடுத்து நோய்கள் பரவ காரணமாகின்றன. இதனால் ஈக்களும், கொசுக்களும் பெருகுகின்றன. நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகள் உருவாகி காலரா, மலேரியா, டெங்கு காய்ச்சல், வயிற்று கடுப்பு, கண்நோய் ,மஞ்சள்காமாலை, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை மக்களிடையே பரவச்செய்கின்றன.
ஆக, நாம் எளிதாக கடந்துபோகும் இந்த மூன்று விஷயங்களை ஆழமாக சிந்தித்துப் பார்த்ததில்லை. இதனால் எல்லாம் நோய்கள் பரவும் என்பதை யோசிப்பதில்லை. இடநெருக்கடி ஏற்படுகிறது என்பதை மட்டும்தான் யூகித்திருப்போம். இனி இது போன்ற செயல்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை நினைவில் கொள்வோம்.
துரித உணவு போன்ற வகைகளை ரோட்டோரங்களில் நின்று சாப்பிடுவதை நிறுத்தினால் நாய், பன்றிகள் கூடுவதை நிறுத்தலாம். இதனால் கொசு தொல்லைகள் அழியும். இதனால் நோய் பெருக்கம் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அது நம் சமூகத்திற்கு செய்யும் சிறு சேவையாக கூட மாற வாய்ப்பு உண்டு.