
நம்முடைய பூமி மூன்று பங்கு கடல் நீராலும், அதன் வட, தென் துருவங்களில் பனிக்கட்டிகளாலும், கடும் குளிராலும் சூழப்பட்டிருந்தாலும் இன்னமும் அதன் நடுப்பகுதி கடும் நெருப்பு குழம்புகளால் மையம் கொண்டிருப்பது என்கிற தகவல் நமக்கெல்லாம் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதே. பூமியின் அந்த மைய நெருப்பு கோளமே ‘வடவாக்னி’ என அழைக்கப்படுகிறது.
இந்த வடவாக்னி எப்படித் தோன்றியது என்றால் சூரியனிலிருந்து பூமி பிரிந்தபோது அதுவும் ஒரு அதிபயங்கரமான நெருப்பு கோளமாகவே இருந்தது. நாளடைவில் சூரியனைச் சுற்றி வந்த பூமியின் மேற்பரப்பு தானாகவே குளிர்ச்சி அடையத் தொடங்கியது.
அப்பொழுது விண்வெளியில் இருந்த பிற பனிப்பாறைகள், கோள்கள் பூமியை கடுமையாக மோதித் தாக்கியதால் மேடு பள்ளங்கள் உருவாகின. பூமியின் உஷ்ணத்தால் பனிப்பாறை கோள்களில் இருந்த தண்ணீர் ஆவியாகி மேக மண்டலங்களை உருவாக்கி அத்துடன் காற்று மண்டலத்தையும் உருவாக்கியது. பூமியின் அதீத வெப்பத்தினால் பனிக்கோள்கள் உருகி தண்ணீராக மாறி மாபெரும் கடல் கேணி ஆகியது.
இதனால் பூமியின் மேற்பகுதியில் உருவான நிலப்பரப்பை கடல் நீர் நான்கு புறமும் சூழ்ந்து கொண்டது. இவ்வாறு நெருப்பு கோளமாக இருந்த பூமியின் உஷ்ணம் அனைத்தும் அதன் நடுப்பகுதிக்குள் சென்று மையம் கொள்ளத் தொடங்கியது. எனவே, அக்னியே திட, திரவ, வாயு வடிவில் நம்முடைய நிலவுலகில் கலந்துள்ளதால் இதை, ‘அக்னி மண்டலம்’ என்று சித்த யோக நூல்கள் அழைக்கின்றன.
இவ்வாறு பூமியின் உள்பகுதியில் அதன் மைய அச்சில் சுழன்று கொண்டிருக்கும் நெருப்பு கோளமே ‘வடவாக்னி’ என்பதாகும். இப்படி பூமியின் மேற்பரப்பில் தோன்றிய பரந்த நிலப்பரப்பை வடவாக்னியின் அழுத்தத்தினால் பல கடுமையான பூகம்பங்களை (நிலநடுக்கங்களை) உருவாக்கி அதனை தனித்தனியாகப் பிரித்து வைத்தது. அவ்வாறு தனித்தனியாகப் பிரிந்த நிலப்பரப்பே 'கண்டங்கள்' ஆக மாறியது. மேலும், நாற்புறமும் நீரால் சூழப்பட்ட தீவுகளை வடவாக்னியிலிருந்து தோன்றிய எரிமலை குழம்புகளின் சீற்றங்களே உருவாக்கியது.
இதுவே காலப்போக்கில் பூமியில் தோன்றிய தட்பவெட்பநிலை, சீதோஷ்ண நிலை இவை யாவும் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான பருவ கால மாறுதல்களை உருவாக்கியது. பிரம்ம சிருஷ்டியில் அகப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் பூமியில் கல், பாறையின் வடிவில் ஜீவ தலையில் சிக்கிக் கொண்டது.
இதுபோல் கல், பாறை போன்ற ஜடத்தின் மொத்த உருவமாக இருந்த உயிரினங்கள் அனைத்தும் அக்னியின் தொடர்பினால் அதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை சந்திக்கத் தொடங்கியது. முதலில் செடி, கொடி, நுண் தாவரங்களாக உருவெடுத்த உயிரினங்கள், பின்னர் நீரில் மீன் இனங்களாகத் தோன்றி, அதன் பின் நிலத்தில் வசிக்கக்கூடிய உயிரினங்கள் தோன்றியது. இவையே நிலத்தில் ஊர்ந்தும், தவழ்ந்தும் பின் பறந்தும் முடிவில் நாற்கால் பிராணிகளாக வாழும் விலங்குகளாக சுற்றித் திரிந்து வந்தன. இதன் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியின் தொடர்ச்சி என்பது ஆதிகால வனவாசிகளாக, பழங்குடி மக்களாக வாழ்ந்து வந்த இனமே மனித இனம் ஆகும்.
பின்னர், ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை தொட்ட பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சிகரத்தை எட்டிப் பிடித்தது மனித இனம்தான். காரணம், அறிவு வளர்ச்சியில் மாற்றம் உண்டாகி பகுத்தறிவு என்ற 'புத்தியே' மனிதனின் இத்தனை மாற்றங்களுக்கும் காரணமாகியது.
இந்த மாற்றமே மனிதனுக்கு பேசும் தனித்திறமையை வழங்கியது. அந்தப் பேச்சின் வழியே மனித இனம் சொல், மொழி, எழுத்து, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் போன்ற அறிவு நிலையின் மேன்மைகளை அடைந்தது என்பது வடவாக்னியின் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்.
வடவாக்னி அதன் சீற்றத்தை நமக்கு உணர்த்துவதால் என்ன நன்மை ஏற்படுகிறது என்றால், பூமியில் ஆங்காங்கே திடீர் திடீரென்று உண்டாகும் எரிமலைகள் வடவாக்னியின் சீற்றத்தை நமக்கு உணர்த்துகிறது. சில சமயம் நடுக்கடலில் உண்டாகும் எரிமலையின் நெருப்பு குழம்பினால் பல புதிய தீவுகள் உண்டாகின்றன என்பது நாம் காணும் செய்தியாகும்.
பூமி இன்னமும் குளிர்ந்து போகவில்லை என்பதை எரிமலையின் சீற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றது. அப்படி ஒருவேளை வடவாக்னியின் தகிக்கும் உஷ்ணம் குளிர்ந்துபோனால் அது ஒரு மாபெரும் பிரளயத்தையும் உண்டாக்கி விடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வடவாக்னியின் அழுத்தத்தினால் உண்டாகும் இயற்கையின் பேரிடர் எரிமலையை விட பன்மடங்கு ஆபத்தானது. பூகம்பம் போன்ற இயற்கையின் பேரிடர்களை விட, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பலத்த உயிர் சேதம் மற்றும் பொருட் சேதத்தையும் விளைவிக்க வல்லது.