
சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் என்பது நம் அனைவரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. சில நாடுகள் நவீனமயமான தொழில் நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றி, நீரை சுத்திகரித்து நாட்டு மக்களுக்கு வழங்க கணிசமான தொகையை செலவழித்து வருகின்றன. இயற்கை முறையிலான நீர் வள ஆதாரங்களைப் பாதுகாத்து EPIல் (Environmental Performance Index) இடம் பெறவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பாதுகாப்பான குடிநீர் வழங்கும் 6 நாடுகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. ஃபின்லேண்ட்: ஆயிரத்திற்கும் அதிகமான ஏரிகளும் நீரூற்றுகளும் ஃபின்லேண்டில் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் நீர் இயற்கையிலேயே எந்தவித அசுத்தங்களுமின்றி சுத்தமாகவும் சுவை மிக்கதாகவும் இருக்கிறது. உலகிலேயே பாதுகாப்பான குடிநீர் வழங்கும் சில நாடுகளில் ஃபின்லேண்டும் ஒன்று. இந்நாட்டு மக்கள் எவ்வித தயக்கமுமின்றி குழாயிலிருந்து நேரடியாக தண்ணீரைப் பிடித்துக் குடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
2. ஐஸ் லேண்ட்: இந்த நாடு பனிப் பாறைகளிலிருந்து உருகியோடும் பனியாறுகள் (Glaciers) மற்றும் எரிமலைப் பாறைகள் நிறைந்த நாடு. இவற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் உலகிலேயே சுத்தமானதாகவும், தூய்மையானதாகவும் உள்ளது. அங்குள்ள மக்கள், நீரோடைகளிலிருந்தும், ஆறுகளிலிருந்தும் நேரிடையாக தண்ணீரை சேகரித்து குடித்து வருகின்றனர். இங்கு தண்ணீர் எவ்விதமான சுத்திகரிக்கும் செயல்பாடுகளுக்கும் உட்படுவதில்லை.
3. நெதர்லாண்ட்: இந்த நாட்டில் நவீனமயமான தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி தண்ணீரை வடிகட்டவும் சுத்திகரிக்கவும் செய்கின்றனர். இந்நாடு பள்ளமான பகுதியில், நீரால் சூழப்பட்டு அமைந்திருந்தபோதும், குழாய்களில் வரும் தண்ணீர் மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் உண்டுபண்ணாமல் பாதுகாப்பளிக்கிறது.
4. நார்வே: இங்கு பனியாறுகளும் நீரோடைகளும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மக்களுக்கு குறைவில்லாத குடிநீரை வழங்கி வருகின்றன. குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரானது பாதுகாக்கப்பட்ட ஏரிகளிலிருந்து இணைக்கப்பட்டு கொண்டுவரப்படுகின்றன. ஏரி தண்ணீர் இயற்கையாகவே பல அடுக்குகளில் வடிகட்டப்படுகின்றன. பின் அதன் தூய்மைத் தன்மையை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
5. ஸ்விட்ஸர்லாண்ட்: இயற்கையாகவே சுத்தமான குடிநீர் வழங்கக்கூடிய நாடு ஸ்விட்ஸர்லாண்ட். இங்குள்ள நீரூற்றுகளிலிருந்து கிடைக்கும் நீர் பாட்டில்களில் நிரப்பப்பட்டு விற்கப்படும் மினரல் வாட்டரை விட சிறந்தது என இந்நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடுமையான பரிசோதனைகளும், தொடர் கவனிப்பும் நீரின் தூய்மைத்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கின்றன.
6. யுனைட்டட் கிங்டம்: நவீனமயமான சுத்திகரிப்பு முறைகளைப் பின்பற்றியும், தரத்தை நிர்ணயம் செய்ய கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டும், இங்கிலாந்து அரசு தனது நாட்டு மக்கள் குடிக்கும் நீர் தூய்மையானதாக இருக்க வழி வகை செய்கிறது.