பூமியில் வாழும் மிகப் பழைமையான உயிரினங்களில் முதலைகளும் ஒன்று. அவை மற்ற விலங்குகளைத் தாக்கத் தயங்காத மற்றும் ஆபத்தான வேட்டையாடும் குணம் கொண்டவையாகப் பார்க்கப்படுகின்றது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளில் இவை வாழ்கின்றன. அவற்றினால் சொந்தமாக வெப்பத்தை உருவாக்க முடியாது. அதனால் குளிர்காலங்களில் அவை உறங்குகின்றன.
முதலை ஊர்வன வகுப்பினைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இது நீரிலும், நிலத்திலும் வாழும். இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. முதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். அது அதிகபட்சமாக 15 அடி நீளம் வரை வளரும். அவற்றின் சராசரி நீளமே 9 அடிதான். ஆனால், அது இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த சிறப்பு வேறு எந்த விலங்கினத்திற்கும் கிடையாது. நீரில் 40 கி.மீ. வேகத்தில் அதனால் நீந்த முடியும். முதலைகளால் பின்னோக்கி நகர முடியாது. அது அதிகபட்சமாக 80 ஆண்டுகள் வரை வாழும்.
நீரில் வாழும் முதலைகள் ஒற்றுமையாக வாழும் இயல்புடையது. பொதுவாக, தன்னைத் தேடி வரும் பறவைகள் மற்றும் சிறு விலங்குகளை சாப்பிடும் முதலைகள். பெரிய குதிரை, நீர் யானையைக் கூட வேட்டையாடிவிடும். ஆனால், அதை சாப்பிடுவது கஷ்டம் என்பதால் தண்ணீரில் மிதக்கும் இரையை, தனி ஒரு முதலையாக இழுக்கும்போது அந்த இரையானது இழுத்த திசைக்கே வரும். அதற்காக முதலைகள் கூட்டம் ஒரு யுத்தியை கடைபிடிக்கின்றன. அந்த இரையை இரண்டு முதலைகள் பக்கத்திற்கு ஒன்றாக வாயால் இறுகக் கவ்விப் பிடித்துக் கொள்ளும். ஒரு முதலை இரையை வாயில் கவ்விக் கொண்டு, தனது உடலை வலதுபுறமாக நான்கு முறை சுற்றும். பின்னர் இடது புறமாக நான்கு முறை சுற்றும். இதனால் இரை தனியாக பிய்த்துக் கொண்டு வந்து விடும். அதை எடுத்துச் சாப்பிடும். இதேபோல், மற்ற முதலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஒற்றுமையாக சாப்பிடுகின்றன.
முதலைகள் தங்கள் உடலினுள் அதன் எடையில் ஒரு சதவீதம் என்ற கணக்கில் கற்களை சுமக்கின்றன. ஏன் தெரியுமா? தான் உண்ணும் உணவை நன்கு அரைத்து சாப்பிடவும், அதன் செரிமானத்திற்கும் அது உதவும். கற்களையும், எலும்புகளையும் கரைக்கும் சக்தி முதலைக்கு உண்டு. முதலைகளின் தாடையில் 24 பற்கள் இருக்கும். இவை உணவை கொல்வதற்கு இல்லை. இரையைப் பிடித்து பற்களால் நொறுக்கி தின்னவே பயன்படுத்துகின்றன. இந்தப் பற்கள் எத்தனை முறை விழுந்தாலும் திரும்பவும் முளைத்து விடும்.
உணவு சாப்பிடும்போது அழும் விலங்கு எது தெரியுமா? முதலைகள்தான். உணவை சாப்பிடும்போது அவை அழும். ஏன் இப்படி? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஒரு முதலை அதன் இரையை மெல்லும்போது, அதன் தாடைகளின் இயக்கம் அதன் சைனஸில் காற்றைத் தள்ளுகிறது. இதன் விளைவாக, முதலைக் கண்ணின் லாக்ரிமல் சுரப்பி எரிச்சலடைகிறது. அப்போது முதலைகளின் கண்களில் இருந்து கண்ணீர் வரும். எனவே, முதலை சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அழுகிறது. அதாவது கண்ணீர் விடுகிறது.
உணவு உண்ணும்போது அனைத்து முதலைகளின் கண்களிலும் நீர் வழிந்தது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 2006ல் நரம்பியல் விஞ்ஞானி மால்கம் ஷனர் மற்றும் விலங்கியல் நிபுணர் கென்ட் ஆகியோர் ஒரு பரிசோதனையை நடத்தி இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இதனைப் பார்த்துதான் முதலை கண்ணீர் வடிக்கிறது என்கிறார்கள் போலும்.