
இந்தியாவில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஓர் உயிரினம் புலி. இதன் எடை சராசரி 200 கிலோ. சராசரி 3.3 மீ நீளம் இருக்கும். மணிக்கு 60 கி.மீ. ஓடக்கூடிய விலங்கு. ஒரு வேளைக்கு இரையாக 40 கிலோ மாமிசம் சாப்பிடும். பசித்தால் மட்டுமே வேட்டையாடும். அதுவும் வயிற்றில் குட்டிகளை சுமக்கும் எதையும் தாக்காது, குட்டிகளையும் தாக்காது. புலிகள் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவை. ஒரு முகத்தைப் பார்த்துவிட்டால் எளிதில் மறக்காது. அது வாழ 1000 சதுர மீட்டர் காடு வேண்டும்.
ஆண் புலிகள் மற்றும் பெண்கள் என்பதை அவற்றின் காலடி தடத்தை வைத்து கண்டறியலாம். ஆண் புலிகளின் தடம் சதுரமாக இருக்கும், பெண் புலிகளின் தடம் செவ்வக வடிவில் இருக்கும்.
ஒவ்வொரு புலியும் காடுகளில் சில அடையாளங்கள் மூலம் தங்களது எல்லையை வரையறுத்துக் கொள்ளும். அதன்படி பெரிய ஆண் புலிகளின் ஏரியா 40 முதல் 70 சதுர கி.மீ. பெரிய பெண் புலிகளின் ஏரியா 20 முதல் 30 சதுர கி.மீ.
புலிகள் தங்களது ஏரியா இதுதான் என்பதை சிறுநீர் கழித்து அடையாளம் இடும். அருகில் உள்ள மரத்தின் பட்டையை கீறி அடையாளம் இடும். சில நேரங்களில் தனது கர்ஜனை முலம் தெரியப்படுத்தும்.
ஒரு வயது முதிர்ந்த புலியின் எடை 270 கிலோ இருக்கும். வெள்ளைப் புலிகள் அரிதானவை. 10 ஆயிரம் புலிகளில் ஒரு புலி வெள்ளை புலியாகப் பிறக்கும். புலிகள் வேட்டையாடித்தான் தங்களது உணவை உண்ணும். அதில் அவற்றுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா? மான்தான்.
காட்டில் ஒரு புலி மற்றொரு புலியை அடையாளம் கண்டுகொள்ள அவற்றின் வாய் அசைவுகளை வைத்துத்தான் கண்டு பிடிக்கும். புலிகள் நல்ல நீச்சல் திறன் உள்ளவை. 6 கி.மீ. தூரம் வரை நீந்தும் ஆற்றல் மிக்கவை.
ஒரு புலியின் அதிகபட்ச வசிப்பிட ஏரியா 1160 கி.மீ. புலிகள் இனத்தில் அமூர் புலிகள் இனம்தான் பெரியது. புலிகள் இனத்தில் மிகச்சிறிய உருவ அமைப்பு கொண்டவை சுமத்திரா புலிகள்தான். புலிகள் பெரிய அளவில் மாமிச இறைச்சியை உண்ணும். எனவே, அதனை உயர் வேட்டை இனம் என்கிறார்கள்.
புலிகள் இரவில்தான் வேட்டையாடும். அவை 5 மீட்டர் வரை சாதாரணமாக பாயக்கூடிய ஆற்றல் பெற்றவை. புலி ஒரு இரையைப் பிடிப்பதற்கு 100 முறை பாய்ச்சல் நடத்தினால் அதில் 10 சதவீதம் அளவிற்கே வெற்றி பெறும்.
புலிகளின் கர்ப்ப காலம் 3 மாதங்கள். பிறந்த புலி குட்டிகளில் அரைப்பங்கு இரண்டு வயதைக் கூட தாண்டி உயிர் வாழ்வதில்லை. புலிகள் இரண்டு வயது நிறைந்தவுடன் தாயை விட்டுத் தனியாகப் போய் வாழத் தொடங்குகின்றன.
புலிகளுக்கு பல் வைத்தியம் பார்க்கிறது ஒரு பறவை. அது எந்தப் பறவை தெரியுமா? ரூஃபஸ் டிரீபி (Rufous treepie) இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு பறவை. இதன் உடலில் பழுப்பு நிறம் அதிகமாக இருக்கும். வால் நீளமாகவும், கருப்பு நிறமாகவும் இருக்கும். இது பழங்கள், பூச்சிகள், சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் முட்டைகளை உணவாக உட்கொள்ளும். இது புலிகள் வாயினுள் இருக்கும் கிருமிகளை பயமின்றி சாப்பிட்டு அதன் பற்களை சுத்தம் செய்யும் என்பதால் இப்பறவையை புலிகளின் பல் வைத்தியர் என்கிறார்கள்.
புலிகளுக்குக் கோபம் வந்தால் அது தனது காதுகளை உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ளும். இதை வைத்து புலிகளின் இயல்பு நிலையை தெரிந்து கொள்ளலாம். புலிகளின் கண்களில் ‘டபீடம் லூசிடம்மால்’ என்ற கட்டமைப்பு உள்ளது. எனவே, மனிதனை விட 6 மடங்கு பார்வை திறன் இவற்றுக்கு அதிகம்.
உலகிலேயே அதிக புலிகள் இருப்பது இந்தியாவில்தான். சுமார் 3500 புலிகள் உள்ளன. இதனையடுத்து ரஷ்யாவில் 3000 புலிகள் உள்ளன. இவை சைபீரிய புலிகள். இந்தியாவில் புலிகளுக்கு என்று 53 சரணாலயங்கள் உள்ளன. ஒடிசாவின் சிம்லிபால் புலிகள் சரணாலயத்தில் மட்டுமே கருப்பு புலிகள் வாழ்கின்றன. சிம்லிபாலின் புலிகளில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானவை 'கருப்பு' புலிகள்தான்.