
டிராகன் பழம் பார்ப்பதற்கு கண்களைப் பறிக்கும் ரோஸ் நிறத்தில் தோலை கொண்ட பழமாகும். உள்ளே வெள்ளை நிறத்தில் கற்றாழை ஜெல் போன்ற தன்மையில் சிறிய கருப்பு விதைகளுடன் கொண்ட பழமாகக் காணப்படும். இது லேசான வித்தியாசமான சுவை கொண்ட பழமாகும். இந்தியாவை பூர்வீகமாகக் கொள்ளாத இந்தப் பழம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுதியாகக் கிடைக்கிறது. பெரும்பாலானோர் நினைப்பது போல இது மரத்தில் உருவாகும் பழம் கிடையாது. இது ஒரு வகையான செடியிலிருந்து கிடைக்கும் பழம்.
இந்தச் செடி பார்ப்பதற்கு கள்ளிச்செடி போன்று இருக்கும். இந்தச் செடியில் பூக்கும் பெரிய அழகான பூக்கள் இரவில் மட்டுமே மலரக் கூடியவை. பகலில் இந்தப் பூக்கள் மூடிக் கொள்கின்றன. இதனால், மக்கள் டிராகன் பூவை ‘நிலா பூக்கள்’ என்று அழைக்கின்றனர். தென்கிழக்கு நாடுகளில் டிராகன் பழங்களை ஸ்ட்ராபெரி, பேரிக்காய், பிடாயா என்று அழைக்கின்றனர். பல நாடுகளில் வீட்டுத் தோட்டத்தில் டிராகன் பழங்களைப் பயிரிட்டு மகசூல் செய்கின்றனர். இந்தச் செடியை பயிர் செய்ய அதிக கவனிப்பும் பராமரிப்பும் தேவையில்லை என்பதால், விவசாயிகளுக்கு அதிக நேரத்தையும் லாபத்தையும் வழங்கும் பழமாக இது உள்ளது.
வியட்நாம் நாடு உலகின் மிகப்பெரிய டிராகன் பழ உற்பத்தியாளராக உள்ளது. இந்த நாட்டில் ஆண்டுதோறும் 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான டிராகன் பழங்களை உற்பத்தி செய்கிறது. வியட்நாம் நாட்டுக்கு அடுத்தபடியாக துவான் பகுதியில் 95 சதவிகிதம் அதிகமான டிராகன் பழ உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், லாங் ஆன், டியான் கியாங் போன்ற மாகாணங்களில் பெரிய அளவில் இச்செடி வளர்க்கப்படுகிறது. அங்கு நிலவும் தட்பவெப்பம் டிராகன் பழ மகசூலுக்கு அதிகம் ஆதரவு தருகிறது.
டிராகன் பழ உற்பத்தியில் முதல் 5 இடம் பிடித்த நாடுகள்:
1. வியட்நாம்: வியட்நாம் டிராகன் பழ உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பழ உற்பத்தியால், டிராகன் பழச் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. வியட்நாம் அதிகளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது. வியட்நாம் டிராகன் பழத்திற்கு சந்தைகளில் அதிக முக்கியத்துவம் உள்ளது. அதன் தரம் மற்றும் சுவைக்காக வியட்நாமிய பழங்களுக்கு நல்ல தேவை உள்ளது.
2. சீனா: டிராகன் பழ உற்பத்தியில் சீனா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவில் எப்போதும் டிராகன் பழத்திற்கு அதிக தேவை இருக்கிறது. இதனால் சீனா டிராகன் பழத்தின் முக்கிய உற்பத்தியாளராகவும் அதேநேரம் அதிக அளவில் அண்டை நாடுகளில் இருந்து டிராகன் பழத்தை இறக்குமதியும் செய்கிறது. குறிப்பாக, குவாங்சி மற்றும் ஹைனான் மாகாணங்களில் உள்நாட்டு சாகுபடி அதிகரித்துள்ளது.
3. இந்தோனேசியா: ஒவ்வொரு ஆண்டும் சுமார் 270,000 மெட்ரிக் டன் டிராகன் பழத்தை இந்தோனேசியா சாகுபடி செய்கிறது. இந்தப் பழம் முதன்மையாக கிழக்கு ஜாவா மற்றும் பாலியில் அதிகம் பயிரிடப்படுகிறது. அங்குள்ள இதமான வானிலை மற்றும் வளமான மண் விளைச்சலை அதிகரிக்க உதவுகின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை சதை கொண்ட வகைகள் இரண்டும் உள்ளூர் சந்தைகளில் பிரபலமாக உள்ளன.
4. தாய்லாந்து: தாய்லாந்து ஆண்டுதோறும் சுமார் 160,000 மெட்ரிக் டன் டிராகன் பழத்தை உற்பத்தி செய்து நான்காம் இடத்தைப் பெறுகிறது. சிவப்பு தோல் வகைக்கு பெயர் பெற்ற தாய் டிராகன் பழம், பெரும்பாலும் உள்நாட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
5. தைவான்: தைவான் நாடு டிராகன் பழ உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ளது. இதன் உற்பத்தித் திறன் 19.7 மெட்ரிக் டன்னாக உள்ளது. சீன பழத்தைப் போலவே ஒத்த தன்மையுடன் சுவையும் கொண்டதாக இது உள்ளது.