
உலகின் அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக பனிச்சிறுத்தையும் (பாந்தெரா அன்சியா) உள்ளது. பெரிய பூனை இனங்களில் கடினமான சூழலில் வாழும் தகவமைப்பை இது பெற்றுள்ளது. இது நமது நவீன சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்ப தனது வாழ்க்கை முறையை மாற்றி வாழ முயற்சி செய்கிறது. பனிச்சிறுத்தைகள் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மலைப் பகுதிகளில் உள்ள 12 நாடுகளில் பரவியுள்ள ஒரு முதன்மை பூனை இனமாகும்.
தொலைதூரம் மற்றும் சவாலான வாழ்விடங்களில் வசிக்கும் பனிச்சிறுத்தைகள் போன்ற குறைந்த எண்ணிக்கையில் வாழும் மாமிச உண்ணிகள் பற்றி பெரும்பாலான தகவல்கள் இருப்பதில்லை. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில், இந்திய வனவிலங்கு நிறுவனம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்தியாவில் உள்ள டிரான்ஸ் - இமயமலை லடாக் முழுவதும் வித்தியாசமான இரட்டை மாதிரி அணுகுமுறையைப் பயன்படுத்தி பனிச்சிறுத்தைகள் மற்றும் அவற்றின் இரையின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்துள்ளது.
பனிச்சிறுத்தைகள் பொதுவாக கூச்ச சுபாவம் கொண்டவை. பெரும்பாலும் அவை மனிதர்களால் கண்காணிக்க முடியாத இடத்தில் வசிக்கின்றன. மேலும். அவை தங்கி இருக்கும் இடமும் , அதன் நடமாட்டம் உள்ள இடங்களும் புவியியல் சூழலில் ஆபத்தான இடங்களாகவும் இருக்கின்றன. இதனால் இவற்றை கண்காணிப்பதும், எண்ணிக்கையை கணக்கிடுவதும் சாதாரண விஷயமாக இருப்பது இல்லை.
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் 59,000 ச.கி.மீ. நிலப்பரப்பில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை, அளவு மற்றும் பரவலை ஆய்வாளர்கள் கணக்கீடு செய்தனர். ஆரம்பத்தில் பனிச்சிறுத்தைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் மற்றும் நகக்கீறல் போன்ற அடையாளங்களை வைத்தே தீவிர ஆய்வு நடத்தினர்.
லடாக்கில் பனிச்சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள, அதன் எல்லைப் பகுதியில் சுமார் 8,500 ச.கி.மீ.க்கும் மேற்பட்ட பகுதியில் எண்ணிக்கையை கணக்கிட ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். அந்தப் பகுதிகளில் அதற்காக சிறப்பு வாய்ந்த 956 கேமரா பொறிகளை ஆய்வுக் குழுவினர் அமைத்தனர்.
பனிச்சிறுத்தைகளின் நெற்றியில் உள்ள அடையாளங்கள், மனிதர்களின் கைரேகை போன்றே தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவை. இதனை வைத்து அவற்றின் சரியான எண்ணிக்கையை மிகை இல்லாமல் கண்டறிய முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து தனித்தனியாக சிறுத்தைகளை அடையாளம் கண்டு எண்ணிக்கையை கண்டறிந்தனர்.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கையில் துல்லியமான தரவுகளை உருவாக்க முடிந்தது. மேலும், பழுப்பு நிற கரடிகள் மற்றும் காட்டுப் பூனைகள் போன்ற பிற பெரிய மாமிச உண்ணிகள், காட்டு தாவர வகைகள் மற்றும் கால்நடைகள் இருப்பதையும் அவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
லடாக்கில் 477 பனிச் சிறுத்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது இந்தியாவின் மொத்த பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கையில் 68 சதவிகிதம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 100 ச.கி.மீ. பரப்பில் 1 முதல் 3 வரை என்ற அளவில் பனிச்சிறுத்தைகளின் அடர்த்தி வேறுபடுகிறது. மேலும், ஹெமிஸ் தேசிய பூங்கா உலகளவில் பதிவு செய்யப்பட்ட பனிச்சிறுத்தைகளின் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது.
லடாக்கின் மிதமான காலநிலை, சிக்கலான நிலப்பரப்பு மற்றும் பசுமை நிறைந்த புல்வெளிகளால் அதிக இரை பனிச் சிறுத்தைகளுக்கு கிடைக்கின்றன. லடாக்கில் 61 சதவிகிதம் வரை பனிச் சிறுத்தைகள் மனிதர்களுடன் இணைந்து வாழ்கின்றன. இங்குள்ள மக்களின் வனவிலங்கு மீதான மரியாதையும் ஈடுபாடும் அவற்றின் எண்ணிக்கை உயர்வதில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
பனிச் சிறுத்தைகள் மிகவும் பிரபலமான உயிரினங்களில் ஒன்றாகும். அவை செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பாதுகாப்பு நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றன என்று லடாக் யூனியன் பிரதேச ஆராய்ச்சியாளர் பங்கஜ் ரெய்னா தெரிவித்துள்ளார்.