
அருமையான ஒரு சயின்ஸ் ஃபிக்ஷனுக்கான காட்சியை அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோடா மாநிலத்தின் பேட்லேண்ட்ஸ் (BADLANDS) பகுதியில் காணலாம். இங்கு வாழ்ந்த பூர்வக்குடியினரான சியோக்ஸ் இந்தியர்கள் (SIOUX INDIANS) இதற்கு மகோ சிகா (MAKO SICA) என்ற பெயரைச் சூட்டி இருந்தனர். மகோ சிகா என்றால் மோசமான நிலம் என்று பொருள்.
இது 6000 சதுர மைல்களைக் கொண்ட பிரம்மாண்டமான பரப்பாகும். முதலில் ‘பேட்லேண்ட்ஸ்’ தெற்கு டகோடாவில் ஒய்ட் ரிவருக்கு (White River) அருகில் இருந்தது. 1978ல் இது பிரம்மாண்டமான நேஷனல் பார்க் ஆனது. தியோடர் ரூஸ்வெல்ட் நேஷனல் பார்க் சுமார் 110 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட் (1858-1919) இதை வெகுவாகப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை கடல் ஆக்கிரமித்திருந்தது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் முகடு மேலே புடைத்து எழவே பாறைகளால் ஆன மலைப் பகுதி ஒன்று உருவானது. இது கடலை நொறுக்கி வீழ்த்தி மேலெழும்பி மரங்கள், புல்வெளி நிறைந்த அழகான காடு ஒன்றை உருவாக்கியது.
இங்கு பிரம்மாண்டமான மிருகங்கள் வாழ்ந்தன. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்று ப்ரோண்டோதெரியம் (BRONTOTHERIUM) என்ற மிருகமாகும். எட்டு அடி உயரமுள்ள இது தூண்கள் போன்ற நான்கு கால்களுடன் நடந்து சென்றது. இதன் தலையில் அமைந்துள்ள கொம்பு உச்சியில் இரண்டாகப் பிளந்து காட்சி அளித்தது. இதன் அளவில் பாதி அளவு இருந்த இன்னொரு மிருகம் மெஸோஹிப்பஸ் என்று அழைக்கப்பட்டது.
உறைய வைக்கும் குளிரில் வெள்ளமென பாய்ந்தோடும் நதி இந்தப் பகுதியை அழியக் கூடிய பகுதியாக மாற்றியது. தாவரங்கள் இல்லாத காரணத்தால் மலையில் இருந்த பாறைகள் தொட்டாலேயே உதிரும் நிலைமைக்கு வந்தன.
வருடாவருடம் பெய்யும் மழை இந்தப் பகுதியைச் சிறுகச் சிறுக சிதைக்கவே ஏராளமான நீரோடைகளும் ஆறுகளும் ஆங்காங்கே உருவாக ஆரம்பித்தன. வெள்ளை நதி எனப்படும் ஒயிட் ரிவர் (White River ) இங்கு உருவான ஒரு நதி தான். வெளிறிய வண்டல்கள் குழைந்து கரையாமல் இருக்கவே அப்படியே இது நதி நீராகப் பாய்ந்தது. ஒரு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த விரியன் பாம்புகள் மட்டும் தான் இந்தப் பகுதியில் வாழ்ந்தன. சில கொறிக்கும் விலங்குகளும் இங்கு வாழ ஆரம்பித்தன.
அழிந்துக்கொண்டே வரும் மிருகங்கள், பாழாகிப் போகும் இயற்கையான நில வளம் – இவற்றை எப்படி பாதுகாப்பது?இதைப் பாதுகாக்க 1963ல் இங்கு 50 காட்டெருதுகள் கொண்டு விடப்பட்டன. ஆயிரத்திதொள்ளாயிருத்து எண்பதுகளில் சுமார் 300 விலங்குகள் இங்கு வாழ்ந்து கொண்டிருந்தன. வெள்ளாடுகளும் இங்கு கொண்டு விடப்பட்டன. அரிய மான் இனம் ஒன்றும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பயிர்த் தொழில் இங்கு தடை செய்யப்பட்டது.
ஒருவழியாக அழிந்து கொண்டிருந்த இந்தப் பகுதியை அழியாத இயற்கை வளம் நிறைந்த காட்சிகள் கூடிய நிலப்பகுதியாக இருக்க வைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இந்தப் பகுதியின் அருமையை அறிந்தவர்கள் உலகெங்கிலுமிருந்து இப்போது திரளாக இங்கு வந்து பேட்லேண்ட்ஸ் தேசியப் பூங்காவைப் பார்த்து மகிழ்கின்றனர்!உலகின் இயற்கையான அதிசயங்களுள் ஒன்று மகோ சிகா அதாவது பேட்லேண்ட்ஸ்!