
உலகில் வருடந்தோறும் கொசுக் கடி மூலம் மக்கள் இழக்கும் இரத்தம் எவ்வளவு தெரியுமா? சராசரியாக 11 மில்லியன் லிட்டர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு முறை கொசு கடிக்கும்போது கொசு குடிக்கும் இரத்தத்தின் அளவு சராசரியாக 0.3 மைக்ரோ கிராம் என்கிறார்கள்.
உலகில் ஏறத்தாழ 3,500 வகையான கொசுக்கள் உள்ளன. இந்தியாவில், 400க்கும் அதிகமான வகைகள் உள்ளன. ஒரு பெண் கொசு தேங்கிய நீரில் ஒரு நேரத்தில் 100 முதல் 300 முட்டைகள் இடும். அது 48 மணி நேரங்களுக்குள் அவற்றைப் பொறித்துவிடும். உண்மையில் கொசுக்கள் யாரையும் கடிக்காமல் வாழலாம். ஆனால், பெண் கொசுக்கள் இனப்பெருக்க சுழற்சியை முடிக்க இரத்தம் தேவைப்படுகிறது. கொசுக்கள் முட்டையிடுவதற்கும், முட்டைகளை பலமாக்குவதற்கும் இரத்தம் தேவைப்படுகிறது. அதனால்தான் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. எனவேதான், பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன. கொசுக்கடிக்கு அதிகம் ஆளாவதும் பெண்கள்தான்.
கொசுக்களில் பல வகைகள் இருந்தாலும் நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்னவோ 4 வகையான கொசுக்கள்தான். அனோபிலிஸ் ஸ்டீபென்ஸி (Anopheles stephensi) மலேரியாவை ஏற்படுத்துகின்றன, ஏடிஸ் இஜிப்டே (Aedes aegypti), ஈடிஸ் ஆல்போபிக்டஸ் (Aedes albopictus ஆகியவற்றால் டெங்கு, சிக்கன்குனியா ஏற்படுகின்றன. க்யூலஸ் (Culex) வகை கொசுக்கள் ஜப்பானிய மூளையழற்சியை ஏற்படுத்துகின்றன. ஆர்மிஜெர்ஸ் (armigeres) என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் நோய் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால், உடலில் தடிப்புகள் ஏற்படும்.
மழைக்காலம் துவங்கிவிட்டால் கொசுக்கள் காலம்தான். ஆனால், கொசுக்களின் நேரம் காலை 3.30 முதல் 6 வரையும், மாலையில் 5 முதல் 6.30 வரைதான் என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள். க்யூலஸ் வகை கொசுக்கள் மாலையில் மட்டுமே கடிக்கும். ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். சூரியன் உதித்து மூன்று மணி நேரத்துக்கும், சூரியன் மறைவதற்கு முன்புள்ள மூன்று மணி நேரத்துக்கும் அவை வீரியமாக இருக்கும். மற்ற நேரங்களில் நம்மை கடிக்காது. மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் கொசு விடியற்காலையில்தான் கடிக்கும். எனவே, நேரத்தை வைத்தே எந்த கொசு கடிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
கொசுக்கள் ஆள் பார்த்து, வாசனை பார்த்துதான் கடிக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனிதர்கள் வெளிவிடும் மூச்சு காற்றில் கொசுக்கள் உணரும் மணம் உள்ளது. அதை வைத்து தனது மனம் கவரும் மனிதரை கொசுக்கள் கடிக்கின்றன என்று கொசுக்கள் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானி ஜெரி பட்லர் தெரிவித்துள்ளார்.
வியர்வை காய்ந்து அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டால்போதும். அந்த மாதிரி சருமம் உள்ளவர்களைத்தான் கொசுக்கள் விரும்பிக் கடிக்கின்றன. வியர்வை நாற்றமும் கொசுக்களை கவரும். குளித்து உடலை சுத்தமாக வைத்திருந்தால் கொசுக்கடியிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம். ஆனால், குளித்து விட்டு சென்ட், டியோடரன்ட் போன்ற வியர்வை நாற்றம் போக்கிகளை பூசுபவர்களும் கொசுக்களை கவர்கின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கொசுக்களைப் பற்றி பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து கூறியுள்ளனர். அதில் ஒன்று ஒட்டுமொத்த மனிதர்களை விடவும் ‘ஓ’ இரத்த வகை கொண்ட மனிதர்களைத்தான் கொசுக்கள் அதிகமாகக் கடிக்கிறதாம். ஓ ரத்த வகை மனிதர்களை வாசனை மூலம் அறிந்து கொள்ளும் கொசுக்கள் அவர்களின் இரத்தத்தைதான் அதிகம் குடிக்கிறதாம்.
கொசுக்களுக்கு ‘டார்க் கலர்கள்’ ரொம்பவே இஷ்டம் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, கருப்பு, ஊதா, அடர் பச்சை போன்ற கலர் உடைகளை உடுத்துபவர்கள் அதிகம் கொசுக்கடிக்கு ஆளாகின்றனர். நமது வியர்வை வாடையை அறிந்து சரியாக நம் மீது கொசுக்கள் அமரும். எனவே, வியர்வை அதிகமாக சுரக்கும் நபர்கள் மாலையில் சோப்பு போட்டு குளிப்பது நல்லது. மென்மையான சருமம் உள்ள குழந்தைகளின் சருமம்தான் கொசுக்களின் முதல் இலக்கு. இரவில் மது அருந்திவிட்டு படுப்பவர்களை கொசுக்கள் ஆர்வமாகக் கடிப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு.
உடலில் வைட்டமின் ‘பி’ சத்து அதிகமுள்ளவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதில்லையாம். இரவு உணவில் அதிகம் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதில்லையாம். இரவில் படுக்கச் செல்லும் முன் உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய்யை தடவிக் கொண்டு படுத்தால் அதிகம் கொசு கடிக்காதாம்.