
அறிவியலில் ஒரு நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் இயற்கையை மீறி எதுவும் செய்து விட முடியாது. மாறிவரும் பருவநிலை காரணமாக சுற்றுச்சூழலில் மோசமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த காலநிலை மாற்றம் பசுமைப் பிரதேசங்களிலும் விவசாயத்திலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த காலநிலை மாற்றம் காரணமாக இங்கிலாந்து மற்றும் சீனாவில் கோதுமை உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவில் ஏற்பட உள்ள கோதுமை தட்டுப்பாடு காரணமாக பல உலக நாடுகளும் பாதிப்பிற்கு உள்ளாகும்.
இங்கிலாந்து மற்றும் சீனாவில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் வளம் பெருமளவில் குறைந்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பத்தினால் இரண்டு நாடுகளிலும் வறட்சி ஏற்படும் சூழல்கள் நிலவுகின்றன. சீனாவின் கோதுமை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஹெனான் மாநிலம் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
சீனாவின் தானியக் கிடங்கான ஹெனான் மாநிலத்தில் கோதுமை பயிர்களை கடுமையான வெப்பமும் வறண்ட காற்றும் பாதிப்படைய வைத்துள்ளது. இது பயிர்கள் முற்றுவதற்கு முன்பே வாடிப் போகச் செய்கிறது. இதனால் கோதுமை உற்பத்தியில் பெருமளவு மகசூல் குறையக் கூடும். வானிலை அறிக்கையின்படி மே 11 முதல் மே 13 வரை சீனாவின் அன்யாங், புயாங் மற்றும் ஜெங்சோ போன்ற பகுதிகளில் வெப்பநிலை 35°C க்கு மேல் இருக்கும். இது மகசூல் அளவை கடுமையாக பாதிக்கக் கூடும்.
ஹெபெய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு போன்ற முக்கிய உற்பத்திப் பகுதிகள் மூன்று மாதங்களாக கடுமையான மழைப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் குளிர்கால கோதுமை உற்பத்தியில் இந்தப் பகுதிகள் 60 சதவிகிதம் அதிகமான பங்களிப்பை தருகின்றன.
இந்தப் பகுதிகளில் நீர்ப்பாசன வசதிகள் இருந்தாலும், வறண்ட வானிலை விளைச்சலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வட சீனாவின் கோதுமை உற்பத்திப் பகுதியில், மோசமடைந்து வரும் வறட்சி குறித்து அந்த நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
இம்முறை கோதுமை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் சீனா கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சீனா உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதியாளராக உள்ளது.
இங்கிலாந்திலும் மோசமான வானிலை காரணமாக கோதுமை பயிர்கள் உற்பத்தியில் பெரிய தேக்கம் ஏற்பட உள்ளது. இதனால் இங்கிலாந்தின் விவசாயிகளும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனர். இங்கிலாந்து வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி கடந்த 69 ஆண்டுகளில் இப்போதுதான் மிகவும் வறண்ட காலமாக உள்ளது.
1961ம் ஆண்டுக்குப் பிறகு மார்ச் மாதம் மிகவும் வறண்ட மாதமாக இருந்தது. மேலும் ஏப்ரல் மாதமும் வழக்கமான மழையில் பாதி மட்டுமே பெய்துள்ளது. இதனால் முன் கூட்டியே நீர்ப்பாசனம் செய்யத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஏரிகளிலும் நீர் மட்டம் குறைவாக உள்ளது.
இங்கிலாந்தில் 2022ம் ஆண்டும் இதுபோன்ற வறண்ட காலநிலை நிலவியதில் தென்கிழக்கு பிராந்தியத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது பயிர்கள் நீர் இல்லாமல் பெரிய அளவில் அழிவுக்குள்ளானது. இங்கிலாந்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 2022ம் ஆண்டை விடக் குறைவாக உள்ளது. சில நிறுவனங்கள் ஆற்று நீரை உறிஞ்சி விட்டதால் நீரின்றி மீன்களின் இறப்பும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் கோதுமை இறக்குமதி போதிய அளவில் கிடைக்கும். ஆனால் , சீனாவின் மக்கள்தொகை பெரியது. அதனால் அது திணறக் கூடும். இந்த சூழலில் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படவில்லை, போதுமான கோதுமை இறக்குமதியை இந்தியா செய்துள்ளது.